ஆஸ்கர் போட்டியில் களமிறங்கும் சூரரைப் போற்று!

 


நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம், ஆஸ்கர் பட்டியலில் மூன்று விருதுகளுக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்த ஒரே படம் இதுதான்.

இந்தியாவில் முதல் முறையாக குறைந்த விலையில் விமானப் பயணங்களை சாத்தியமாக்கிய ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ’simply fly: a deccon odyssey’ என்ற கோபிநாத்தின் சுயசரிதை புத்தகத்தின் ஒரு பகுதியைத்தான் சுதா கொங்கரா படமாக்கினார். கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், ஆஸ்கர் விருது பட்டியலுக்கு 'சூரரைப் போற்று' படம் அனுப்பப்பட்டது.

தற்போது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், 93 வது ஆஸ்கார் விருதுக்கு பரிசீலிக்க தகுதியான 366 படங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில் சூரரைப் போற்று இடம்பெற்றுள்ளது. எனவே இந்த வருட ஆஸ்கர் பந்தயத்தில் சூரரை போற்று திரைப்படமும் நுழைந்துள்ளது. கோவிட் சூழலால் இம்முறை ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களும் ஆஸ்கர் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது கூடுதல் தகவல்.

ஆஸ்கர் போட்டியில் பொதுப்பிரிவில், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் சூரரை போற்று இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள திரைப்படங்களை வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்து, இறுதிப்பட்டியலை அறிவிப்பார்கள். சூரரைப் போற்று படக்குழுவும், சூர்யா ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

- ஆதினி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.