வல்லினம் 13- கோபிகை!!

 


அரை மணித்தியாலம் வரை இருவரும் கதைத்துக் கொண்டிருந்தனர். தணிகைமாறனின் சிறுவயதுக் குழப்படிகள், குறும்புகள் என எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள் ஆரபி. அவளுக்கு இதெல்லாம் புதுமையான அனுபவங்களாக இருந்தன. இதுவரை இப்படியெல்லாம் அவள் யாரிடமும் கேட்டதுமில்லை, தன்னை மறந்து கதைத்ததுமில்லை. பேசிக்கொண்டிருந்த தணிகையின் அக்கா எழுந்தபோது அவளும் எழுந்து வழியனுப்பிவைத்தாள். 

மறுநாளே வீட்டிற்கு விபரம் தெரிந்துவிட்டதுபோல, குடும்பமே வந்து கூடிநின்றது, நல்ல வேளையாக அன்று காலையிலேயே, ஆரபி வேறு அலுவலாகச் சென்றுவிட்டிருந்தாள், மதியம் அவள் மருத்துவமனைக்குத் திரும்பியபோது, எட்டிப் பார்த்தாள், தணிகைமாறனின் கட்டிலுக்கு அருகில் நிறையபேர் நிற்பது தெரிந்தது. அப்போது எதுவும் எண்ணாமல் சென்றுவிட்டாள், அவளைப் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன், அவர்களும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். 

மாலையில் அவள் வெளியே வரவும், ஓடிவந்து கையைப்பற்றிய இசை, 

"அக்கா...ஏனக்கா வெளியில போய்வர இவ்வளவு நேரம், பாவம், தணிகை அண்ணான்ர அம்மாக்கள் எல்லாரும் வந்து உங்களைப்பாக்க எண்டு எவ்வளவுநேரம் காவல் இருந்தவை தெரியுமே?" என்றாள். 

ஆச்சரியமாய்ப் பார்த்தாள் ஆரபி, எப்போதுமே இப்படி இவ்வளவு நெருக்கமாக அவளிடம் இசை பேசியதில்லை, ஆனால், பெற்றவர்கள் இல்லாதவள், என்பதாலும் செஞ்சோலையில் வளர்ந்தவள் என்பதாலும் இசையிடம் ஆரபிக்கு தனிப்பிரியம் இருந்தது உண்மைதான், அதை, இசை எப்போதுமே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதில்லையே, மற்ற அனைவரும் ஆரபியிடம் எப்படி நடந்து கொள்கின்றனரோ, அவளும் அப்படித்தான் நடந்து கொள்ளுவாள். ஆனால் இன்று இப்படிப் பேசுகிறாளே, 

இசை, தணிகையின் விசயத்தில் தன்னைக் கூர்ந்து கவனித்திருக்கிறாள் என்பதை உணர்ந்த ஆரபிக்கு சிறு சங்கடமாகவும் இருந்தது. 

தன்னையே பார்த்துக்கொண்டிருந்த, ஆரபியிடம், "ஆரபியக்கா, நீங்கள் இந்த மருத்துமனையில எவ்வளவு நேசிப்போட வேலை செய்யிறீங்கள் எண்டு எனக்குத் தெரியும், எங்களுக்கெல்லாம் தாய் மாதிரி இருந்து கவனிச்சுக்கொள்ளுறதோட மட்டுமில்லாமல், இங்க வாற எங்கட காயப்பட்ட போராளிகளிலையும் எவ்வளவு கவனமாமா நடக்கிறனீங்கள், அது எல்லாத்தையும் தாண்டி தணிகை அண்ணாட்ட. உங்களுக்கு ஒரு பாசம் இருக்கெண்டு எனக்குத் தெரியும், எனக்கும் இருபத்திரண்டு வயசாச்சுது தெரியுமே," 

இசையை ஆழமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு, பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள் ஆரபி. 

அதன் பின்னர் மறுநாளே, ஆரபி, பணியின் நிமித்தம் களமுனைக்குச் சென்றுவிட,  போராளிகளின் காதல் என்பது இப்படித்தான் என்பது புரிந்தும், அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லையே என்பது தணிகைமாறனை சற்று வருத்தவே செய்தது. நாட்கள் கடந்தன, 

தணிகை மாறன் குணமாகி மீண்டும் பணிக்குச் சென்று விட்டிருந்தான். ஒருநாள், திடீரென, வோக்கியில் வந்த அழைப்பில், இசைதான், தேம்பி அழுதாள்.  

"என்ன இசை?"

"தணிகை அண்ணா, ஆரபி அக்கா காயப்பட்டு வந்திருக்கிறா, கொஞ்சம் சீரியஸ்தான், நீங்கள் பாக்கிறதெண்டா ஒருக்கா வந்திட்டுப் போங்கோவன்,"

"சரி......."மௌனம் அவனுக்குள் குடிகொண்டது, 

'அவனைக் காப்பாற்றிவிட்டு, தாயக வேள்வியில் அவள் ஆகுதியாகிவிடப் போகிறாளா?' 

கடைசியோ இல்லையோ அவளை ஒருமுறை பார்த்துப் பேசிவிடவேண்டும் என்ற தவிப்புடன், தலைமைப் பீடத்தில் அனுமதிபெற்று புறப்பட்டான். 

அவசர சிகிச்சையில் இருந்தாள் ஆரபி, கடமையில் நின்றவர்கள், "வாங்கோ மாஸ்ரர்" என்றனர். தலையை ஆட்டியபடி, மெல்ல உள்ளே சென்றவன், குருதி வெள்ளத்தில் குளித்திருந்த அவள் கோலம் கண்டு பதறினான். வெளியே காட்டிக்கொள்ளமுடியாத தன்னிலையை உணர்ந்தவனாய், அருகில் இருந்த கதிரையில் சடாரென அமர்ந்தான், அப்போதுதான் ஓடிவந்தாள் இசை. 

"தணிகை அண்ணா...."வாயைப்பொத்திக்கொண்டே சிறு கேவல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவளுக்கும் ஒரு தலைஆட்டலை மட்டும் பதிலாக்கிவிட்டு, அமைதி காத்தான். உள்ளம் தானாய் புலம்பியது.

'ஆரபி, நீயும் நானும் இன்னும் கதைக்ககூட இல்லை, கடைசிவரை போராடி என்னைக் காப்பாற்றிப்போட்டு, இப்ப நீ மட்டும் போறன் எண்டால் என்ன நியாயம்? ஏன் ...தேசத்தை மட்டும் நேசித்த என்னை ஏன் உன்னையும் நேசிக்கவைத்தாய், மண்ணை நேசிக்கிற எங்களுக்குள் பூக்கிற காதலுக்கு, ஆயுள் இப்பிடியும் அமையும் எண்டுறது எனக்கும் புரியும், ஆனா, ஒரு வார்த்தையாவது என்னட்ட கதைச்சிருக்கலாம், உன்னுடைய ஆசைகளை என்னட்டயும் என்னுடைய ஆசைகளை உன்னட்டையுமாவது ரெண்டுபேரும் பகிர்ந்திருக்கலாம், அதுக்கிடையில.......'

அவனது உருகல் அவள் ஆத்துமாவைத் தொட்டதோ என்னவோ, மெல்ல அசைந்தாள் ஆரபி. அருகில் நின்ற வைத்தியர்கள், அதிசயமாய் பார்த்தனர். தலை குனிந்திருந்த தணிகைமாறனுக்கு இவை எதுவும் புரியவில்லை, மனதோரம் அவன் புலம்பிக்கொண்டிருக்க, வைத்தியர்களின் அசைதல் உணர்ந்து நிமிர்ந்தவன், மெல்ல மெல்ல அசைந்த ஆரபியின் கைவிரல்களைக் கண்டதும் ஆனந்தம் அடைந்தான். அவசரமாய் எழுந்துநின்று அவள் முகம் பார்த்தான், பார்வைகள் கலந்தன, ஆயிரம் வார்த்தைகளை அவசரமாகவே பேசிக்கொண்டன, இருவருக்குள்ளும் ஒருவித உணர்வு பீறிட்டுப் பாய்ந்தது. மௌனம் அங்கே ஆரவாரமாய் பேசிக்கொண்டிருந்தது. 

அன்று மாலைவரை அவளுடைய கட்டிலின் அருகில் இருந்தவன், தனது வீட்டிற்கு தகவல் அனுப்பிவிட்டு, தனது இருப்பிடத்திற்குப் புறப்பட்டான். 

'போய்வரவா' விடைகேட்டது அவனது விழிகள். 

'வேண்டாமே' மனம் நினைத்ததை பார்வையில் காட்டாது தலையை ஆட்டினாள் ஆரபி. 

மறுநாளே அவனது மொத்த குடும்பமும் வந்து அவளைப் பார்த்ததும், யாழ்ப்பாணத்திலுள்ள அவளது வீட்டிற்கு அவனது குடும்பத்தினர் மூலமே தகவல் சென்றதும், சின்ன அண்ணா, வரநேரமில்லை என்று, அப்பாவை அனுப்பியதும்  அவள் சற்று குணமானதுமே, விடுப்பில் வருமாறு தணிகைமாறனின் வீட்டினர், கேட்டதற்காக, அவள் விடுப்பு கேட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று தங்கியதும், அவள் அங்கு நின்றபோதே, ஒருநாள் காலையில் வந்து தணிகை மாலைவரை நின்றுவிட்டுச் சென்றதும் அவள் மனதில் படம்போல ஓடியது. 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.