வல்லினம் 14- கோபிகை!!


 நினைவின் ஏடுகள் தன்பாட்டில் புரட்டப்பட்டுக்கொண்டிருந்தன. தடுக்கும் சக்தியற்று அந்த ஓட்டங்களுடன் தானும் நகர்ந்தாள் ஆரபி. 

அதன்பிறகுதான், இறுதி யுத்தம் முனைப்பு கண்டது, அவளும் தனது படையணியுடன் களமுனையில் நின்றாள். தணிகைமாறனும் களமுனையில்தான் நின்றான். பார்க்கவோ பேசவோ முடியவில்லை, 

ஒரே ஒருநாள் மட்டும் அவளைப் பார்க்க வந்தவன், கையிலிருந்த தனது கடிகாரத்தை கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு அவள் கட்டியிருந்த கடிகாரத்தை வாங்கிக்  கொண்டதுடன், "மோதிரம் மாத்திக்கொள்ளுறது ஒரு சடங்கெண்டா, மணிக்கூடு மாத்திறதும் சடங்குதான், எனக்காக என் மனைவி காத்திருப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு" என்றான். 

ஒரு மணித்தியாலம் வரை அவளோடு கதைத்துக் கொண்டிருந்துவிட்டுப் போனவன் போனவன்தான். அதன் பின்னர் அவள் தணிகைமாறனைக் காணவேயில்லை. அவர்கள் எதிர்பாராதவிதமாக யுத்த முடிவுகள், சரணடைதல் நோக்கியதாக அமையவும்  அவளும் சரணடைந்தாள், புனர்வாழ்வு பெற்றாள், வெளியே வந்தாள், அத்தனையிலும் தணிகைமாறனைத் தேடினாள், இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறாள், 

காலம் தரப்போகும் பதில் எதுவாக இருக்குமோ என்ற எண்ணம் அப்பப்போ  மனதில் வந்தாலும் தன் காத்திருப்பை அவள் ஒருநாளும் மாற்ற நினைத்ததில்லை. அதனால்தானே அண்ணா அண்ணியைவிட்டு இவ்வளவு தூரம் தள்ளியிருப்பதே. 


"ஆரபி அக்கா......ஆரபி அக்கா......" 

தூரத்திலேயே கானகியின் குரல் கேட்டுவிட, எழுந்து அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டாள் ஆரபி. 

அவளருகில் வந்ததும், "என்னக்கா.....கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு, அழுதனீங்களே?"

"சீச்சீ...அதொண்டும் இல்லை, நீ ஏன் அப்பிடிக் கேட்கிறாய்?"

"இல்லை அக்கா, உங்கட முகத்தில சோகம் இருக்கு,"

மெல்லச் சிரித்தாள் ஆரபி. 

"அக்கா சோகம் எப்பவும் இருக்கிறதுதான், எனக்கும் தெரியும், ஆனா, இண்டைக்கு ஏதோ நடந்திருக்கு, என்னக்கா...சொல்லுங்கோ, சொன்னாத்தான் உங்கட மனப்பாரம் கொஞ்சம் எண்டாலும் குறையும்"

"அதில்லை..கானு..."

"அக்கா என்னை உரிமையோட கானு எண்டு கூப்பிடுறீங்கள், என்ன பிரச்சினை எண்டு என்னட்ட சொல்லுறீங்கள் இல்லை, போங்கோ நான் உங்களோட கதைக்கமாட்டன்"

"கானு..." மெல்ல கானகியின் கரங்களைப் பற்றிக்கொண்ட ஆரபி, நடந்த நிகழ்வைச் சொல்லிமுடித்தாள்.   

"அக்கா...நீங்கள் யோசிக்காதேங்கோ, தணிகை அண்ணா எங்கையாவது கட்டாயம் இருப்பார், கூடிய விரைவில உங்களிட்ட வந்திடுவார்"

"உன்ர வாய்ச்சொல் பலிச்சா உனக்கு நூறு சொக்லேட் வாங்கித் தருவன்,"

"அக்கா...அப்ப ஐஸ்கிறீம்?" 

"அதுவும் தான்" 'வாழ்க்கை எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது தானே கானு, நாங்கள்தான் அதை அனுசரிச்சு வாழவேணும்......'

"ஓமக்கா.....வாழ்க்கையைப் பற்றி ரஜனிஷ் சொன்ன ஒரு வாசகம் இருக்கு தெரியுமோ,?"

என்ன அது?

''வாழ்வு ஒரு எல்லையில்லாத புதிர், ஆக அறிவு மிகுந்தவர்களால் வாழமுடிவதில்லை, வாழ்வு குழந்தைத்தனம் கொண்டவர்களுக்கே உரியது''

"அது சரிதான் கானு, வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டால் துன்பமில்லை, அலசி ஆராய்ஞ்சாலோ, சிந்திச்சு தேடினாலோ குழப்பம்தான்''

"சரிதான் அக்கா...... "

"சரி சரி சொல்லு, யுனியில எப்பிடி, தம்பி ஒருத்தன், வந்து கதைச்சவனே, நான் அவனிட்ட எல்லாம் சொன்னனான்,"

"ஓமக்கா.....ஆதி அண்ணா தானே, எனக்கு உதவி செய்தது அவர்தான், இல்லாட்டி ராக்கிங் என்ற பெயரில புரட்டி எடுத்திருப்பாங்கள், என்ன பாடுபட்டிருப்பனோ தெரியாது"

'மகிழ்ச்சியான புரிதலா இருக்கிறவரைக்கும் ராகிங் தப்பில்லை, எல்லை கடந்தால்தான் துன்பம்'. 

"ஓமக்கா"  என்றவள் சற்றே யோசித்தாள். 

'ஆரபி அக்கா இப்ப இருக்கிற மனநிலையில, வித்தகன்ர விசயத்தைச் சொல்லவேண்டாம்' என நினைத்தபடி, வேறு விசயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டாள். Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.