இராணுவத்தினர் முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை..!


 மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (06.03.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,  'சம்பள நிர்ணய சபை 1000 விடயத்தில் தலையிட்டதனால் இன்று வித்தியாசமாக தோட்ட துறைமார் தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஹோல்டன் மற்றும் கந்தப்பளை தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தோட்ட துறைமார் வீதியில் இறங்கி போராடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது

இதன் பிரதிபளிப்பாக தற்போது ஹய்போரஸ்ட் மாகுடுகல தோட்டத்தில் 6 இராணுவ வீரர்கள் தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்க தயாராவதாக அறிய முடிகின்றது. இது குறித்து மகுடுகல தோட்ட நிர்வாகத்திடம் வினவியதற்கு தமக்கு அது குறித்து தெரியாது என்கின்றனர். இவ்வாறு இராணுவத்திடம் தோட்ட நிர்வாகத்தை ஒப்படைப்பது பூதாகரமானது.

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை கொண்டுவந்ததன் மூலமே யுத்தம் ஏற்பட்டது. ஆகவே தொழிலாளர்களை நசுக்க கம்பனிகளும் அரசாங்கமும் முற்படுகிறதா? என்ற சந்தேகமுள்ளது. ஆகவே அரசாங்கம் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் மக்கள் போராட்டம் இடம்பெறும்.

தற்போதைய நிலையில் 1000 ரூபாவை கொடுத்து ஏனைய நலன்புரி விடயங்களில் கம்பனிகள் கை வைத்தால் மலையகத்தில் பாரிய தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும். இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும்' என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.