344 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம்!

 நாட்டில் நேற்றைய தினம் 344 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 86,039 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களில் 312 பேர் மினுவாங்கொட -பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவார்.

ஏனைய 22 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும், 10 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் ஆவர்.

தற்சமயம் மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  81,764 ஆக அதிகரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 454 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,513 ஆக உயர்வடைந்துள்ளது. 

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3,019 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 424 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் மேலும் 5 கொரோனா மரணங்கள் இடம்பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட நிபுணர் அஷேல குணவர்த்தனவினால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனுராதபுரம், ஹெம்மாத்தகம, தர்காநகர், வெள்ளவத்தை (கொழும்பு (06)),  ஜா-எல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். மரணமானவர்களில் 4 பேர் பெண்கள்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.