இலங்கையில் இடம்பெறுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்!

 இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சிறப்பு அறிக்கையாளரின், சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை தொடர்பான விசேட அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மகிந்தன் சிவசுப்ரமணியம் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இன்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களின் 80 வீதமான தமிழர்கள், கைதான பின்னர் சித்திரவதை மற்றும் உடல் ரீதியான கொடுமைகள் இழைக்கப்பட்டதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ.நா.வின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தும் தன்னிச்சையான கைதுகள், நீதிக்கு புறம்பான படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்குதல், காவலில் வைக்கப்பட்டோரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல், விசாரணையின்றி சித்திரவதை மற்றும் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் தமிழர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது. சித்திரவதை என்பது இலங்கையில் இரத்தத்தில் ஊறி உள்ளது. இலங்கையில் சித்திரவதை செய்பவர்களை தண்டிப்பது ஒரு கடுமையான பிரச்சினையாகவே இருந்து வருகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கைகளில் பலமுறை கூறப்பட்டுள்ளது.

இதனால் சித்திரவதைக்கு பொறுப்புக்கூறல் சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும். எனவே, சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களைத் தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம்.

இலங்கையிலும் பல நாடுகளிலும் சித்திரவதை அரசுகளினால் தான் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. இவ்வாறு தங்களின் ஆயுதப்படைகளால் செய்யப்பட்ட சித்திரவதைகளுக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிலுக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதன் ஊடாக, பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளைத் தொடுத்து தமக்கான நீதியை பெறுவதற்கு வழிகோல சர்வதேசம் முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.