பாமக கேட்கும் தொகுதிகளைக் கொடுக்குமா அதிமுக?

 


வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு நேற்று (பிப்ரவரி 27) உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா, அல்லது தென்மாவட்டங்களில் தள்ளிவிடுமா அதிமுக தலைமை, என்ற பேச்சுகள் பாமக மத்தியில் பரவிவருகிறது.

படிப்படியாக அரசியலில் வளர்ந்து வரும் பாமக, தனித்துப் போட்டியிடும்போது பெறும் வாக்குகளைக் கூட்டணியுடன் சேரும்போது வாங்கமுடியவில்லை.

1991இல் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் பாமக சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றது, 1996இல் 116 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது.

2001ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு 20 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் அமர்ந்தார்கள். மொத்தம் 15 லட்சத்து 57ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றனர்.

2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 31 இடங்களைப் பெற்று 18 இடங்களில் வெற்றிக் கனியைப் பறித்த பாமக 18 லட்சத்து 63ஆயிரத்து 749 வாக்குகளைப் பெற்றது. 2011இல் அதே திமுக கூட்டணியில் 30 தொகுதிகள் வாங்கி, வெறும் மூன்று தொகுதிகளைப் பெற்றாலும், வாங்கிய வாக்குகள் அதிகம். அதாவது 19 லட்சத்து 27ஆயிரத்து 783 மொத்த வாக்குகள்.

2016 தேர்தலில் 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 23 லட்சத்து 775 வாக்குகள் 5.3% சதவீதம் வாக்குகளை வாங்கினார்கள்.

2001 தேர்தலில் அதிமுக கூட்டணியில் வாங்கிய 27 தொகுதிகளில் தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் கேட்கும் 23 தொகுதிகளில் 20 தொகுதிகள் புதிய தொகுதிகள்.

2001 ஆண்டு தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகளை பார்ப்போம்.

அச்சரப்பாக்கம், அந்தியூர், ஆண்டிமடம், செங்கல்பட்டு, செய்யார், தர்மபுரி, தாராபுரம், எடப்பாடி, கபிலமலை, நாட்ராம்பள்ளி, பண்ருட்டி, பென்னாகரம், பூந்தமல்லி, சேலம் 2, சங்கராபுரம், தாரமங்கலம், திருப்பத்தூர், திருத்தணி, வந்தவாசி, விருத்தாசலம், அண்ணாநகர், சிதம்பரம், காட்பாடி, ராதாபுரம், சைதாப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகியவை.

2021 தேர்தலில் பாமக போட்டியிட அதிமுகவிடம் கேட்கும் தொகுதிகளை பார்ப்போம்.

கும்மிடிப்பூண்டி, திருத்தணி, எழும்பூர், செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர், ஆற்காடு, ஓசூர், செஞ்சி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, ஆரணி, கலசபாக்கம், அணைக்கட்டு, விக்கிரவாண்டி, சங்கராபுரம், மேட்டூர், சேலம் மேற்கு, குன்னம், ஜெயங்கொண்டம், பண்ருட்டி, நெய்வேலி.

வன்னியர்கள் வாக்குகள் உள்ள வடமாவட்டங்களில் மட்டும் குறிவைத்து தொகுதிகளைக் கேட்டால், கூட்டணிக் கட்சிக்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள் அதிமுகவினர்.

பாமக கொடுத்த பட்டியலில் பண்ருட்டி, தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் ஆகிய ஐந்து தொகுதிகள்மட்டும் உறுதியாகியிருப்பதாகவும் மீதி 18 தொகுதிகள் இழுபறியிலிருப்பதாகவும் சொல்கிறார்கள் பாமகவினர்.

இதற்கு பாமகவினர், “நாங்கள் வெற்றிபெறும் தொகுதிகளில்தான் கேட்கமுடியும், சீட்டையும் குறைச்சுட்டாங்க, இட ஒதுக்கீட்டையும் குறைச்சுட்டாங்க, கேட்கும் தொகுதிகளையும் மறுத்தால் என்ன நியாயம்? தோட்டத்துக்கு வந்த அமைச்சர்களிடம் ஐயா சொன்னார் சீட்டை வேண்டும் என்றாலும் இரண்டோ மூன்று குறைத்துக்குங்க, எங்கள் சமுதாயத்துக்கு 15 % சதவீதம் இடஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்டார். 15ஐ 10 ஆகக் குறைத்துவிட்டார்கள். தொகுதிகளையும் மாற்றிக் கொடுக்க நினைக்கிறார்கள் ”என்றார் பாமக நிர்வாகி ஒருவர்.

-வணங்காமுடி

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.