ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம்!

 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வளர்ச்சியை அளவிடும் குறிகாட்டிகள் அனைத்தும் கடந்த ஒரு வருட கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெஃப் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டமை, வறுமை, கட்டாயத் திருமணங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சிறார்களின் வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்படும் என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், பசி, தனிமை, துஷ்பிரயோகம், பதற்றம், வறுமையில் வாடும் மற்றும் திருமணத்திற்குத் தள்ளப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என யுனிசெஃப்பின் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர்களுக்கான கல்வி, சமூக மயமாக்கல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகல் குறைந்துள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளில் தொற்றுநோயின் வடுக்களை குழந்தைகள் தாங்குவதற்கான தன்மைகள் தெளிவாக இல்லை எனவும் ஃபோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

எனவே, இத்தகைய பேரழிவு தரும் விளைவுகளை எதிர்கொண்டு, குழந்தைகளை மீட்கும் முயற்சிகளை கட்டாயமாக மேற்கொள்ளுமாறு அவர் உலக நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுநோய் வயதானவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வயது அடிப்படையிலான தரவுகளை வழங்கிய 107 நாடுகளில் பதிவான 71 மில்லியன் கொரோனா வைரஸ் வழக்குகளில் 13 வயது முதல் இளம் பருவத்தினர் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், வளர்ந்துவரும் நாடுகளில் இந்தக் கணிப்புகள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் 15 வீதம் அதிகரிப்பதைக் காட்டுவதுடன் முக்கியமாக ஆபிரிக்கா மற்றும் தெற்காசியாவில் பாதிப்பு கணிசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலகெங்கிலும் உள்ள 168 மில்லியன் மாணவர்கள் கொரோனா தொற்று நெருக்கடிகளால் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை எனவும் அந்த மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இணையம் மூலமான கல்விக்கான அணுகல் இல்லையென்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று நோயின் மோசமான விளைவுகளால் 2030ஆம் ஆண்டளவில் 10 மில்லியன் குழந்தைகளின் திருமணத்திற்கு வழிவகுக்கும் என்றும் ஏற்கனவே, திருமண அபாயத்தில் கருதப்பட்ட 100 மில்லியன் சிறுமிகள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் யுனிசெஃப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.