இந்திய விஸ்வரூபமும், மே.தீ.வுகள் விடா முயற்சியும்!


 வீதி பாதுகாப்பு உலக டி- 20 சம்பியன்ஷிப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் களம் காணும் வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு : 20 சம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதில் லீக் போட்டி முடிவுகளின் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற, அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிகள் நுழைந்தன.

நேற்றிரவு ராய்பூர் மைதானத்தில் ஆரம்பமான முதலாவது அரையிறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணியும், பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட்ஸ் அணியும் களம் கண்டன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது விஸ்வரூபம் எடுத்தது. வீரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் மற்றும் யூசப் பத்தான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.

இந்திய லெஜண்ட்ஸ் அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய சேவாக் - சச்சின் ஜோடி முதலாவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 5.2 ஓவர்களில் 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தது.

அதன் பின்னர் சேவாக் மொத்தமாக 17 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மொஹமட் கைப்புடன் சச்சின் ஜோடி சேர்ந்து அதிரடிகாட்ட இந்திய அணி 11 ஓவர்களின் முடிவில் 102 ஓட்டங்களை பெற்றுக் கொண்டாது.

இந் நிலயைில் 11.5 ஆவது ஓவரில் மொஹமட் கைப் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 14.1 ஆவது ஓவரில் சச்சின் டெண்டுல்கரும் மொத்தமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டுக்காக யுவராஜ் சிங் மற்றும் யுசப் பத்தான் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடிகாட்ட இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

இத் தொடரில் பதிவுசெய்யப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

யுவராஜ் சிங் 20 பந்துகளில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 49 ஓட்டங்களுடனும், யுசப் பத்தான் 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரி அடங்கலாக 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

219 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட் அணியினரால் 20 ஓவர்களின் முடிவில் 206 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய வில்லியம் பெர்கின்ஸ் - டுவைன் ஸ்மித் ஆகியோரின் இணைப்பாட்டத்தால் அணிக்கு 19 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொடுக்க முடிந்தது.

1.1 ஆவது ஓவரின் முடிவில் வில்லியம் பெர்கின்ஸ் ஒன்பது ஓட்டங்களுடன் கோனியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார்.

2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய நர்சிங் தியோனரின், டுவைன் ஸ்மித்துடன் கைகோர்க்க கரீபியன் புயல் ராய்பூர் மைதானத்தில் மையம் கொண்டது எனலாம்.

வலுவான இவர்களின் இணைப்பாட்டத்தால் 10 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன் பின்னர் 10.5 ஆவது ஓவரில் டுவைன் ஸ்மித் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கிர்க் எட்வர்ட்ஸும் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே டக்கவுட் ஆனார்.

இதனால் அரங்கில் இந்திய ரசிகர்களின் குரல் ஓங்கியது. எனினும் அதற்கு பின்னர் ஓங்கிய அந்த குரல் ஓசைகளை சற்று நேரத்துக்கு அடக்கி ஆண்டாது பிரையன் லாரா - நர்சிங் தியோனரின் இணைப்பாட்டம்.

இருவரும் இந்திய அணி பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்ய, அணியின் ஓட்ட எண்ணிக்கையும் 18 ஓவர்கள் நிறைவில் 194 ஓட்டங்களை பெற்றது.

வெற்றிக்கு இன்னும் 12 பந்துகளில் 25 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருக்க, 19 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட வினைய் குமாரின் ஓவர் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வெற்றிக் கனவினை கலைத்தது.

அவரது ஓவரில் பிரையன் லாராவும் (46), அதன் பின் வந்த டினோ பேஸ்ட்டும் (2) ஆட்டமிழந்தனர். வினைய் குமார் அந்த ஓவரில் 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதி ஓவருக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு 17 ஓவர் தேவைப்பட்டது. அந்த ஓவருக்கு இர்பான் பத்தான் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியினரால் மேலதிகமாக நான்கு ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட்ஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 12 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக சச்சின் டெண்டுல்கர் தெரிவானார்.

இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன், 21 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போடாடியில் இந்திய அணி மோதும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.