தமிழ்த் தேசியப் பேரவையில் ஏன் நாங்கள் பங்கேற்றமாட்டோம்!


 தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஆரம்பக் கூட்டங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தமிழ்த் தேசியப் பேரவையில் பங்கேற்குமாறு கஜேந்திரகுமார் தலைமையிலான அணியிருக்கு தனிப்பட்ட அழைப்பொன்றையும் விடுத்துள்ளார். 

இதனையடுத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எவ்விதமான தீர்மானத்தினை எடுத்துள்ளது என்பது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியப்பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியப் பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்குவது நல்லவிடயமொன்று தான். இதுபற்றி நீண்ட நாட்களாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. நாங்கள் ஒற்றுமைக்கு தடையானவர்கள் அல்ல. அதனை விரும்பாதவர்களும் அல்ல. ஆனால் ஒற்றுமை என்பது கொள்கை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அண்மைய காலங்களில் ஒற்றுமையின் பெயரால் தனிநபர் நலன்களை அடிப்படையாக வைத்தே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

அந்த வகையில் தமிழ்த் தேசியப் பேரவையில் பங்கேற்பதற்கான அழைப்பொன்றை மாவை.சோ.சேனாதிராஜா விடுத்திருந்தார். எனினும் நாம் அதில் பங்கேற்பதில்லை என்றே தீர்மானித்திருக்கின்றோம்.

அதற்கு முதலாவது காரணம் கொள்கை அடிப்படையிலானது. இரண்டாவது காரணம்ர, சுமந்திரன் சாணக்கியன் போன்றவர்களின் தமிழ் மக்களின் அபிலாஷைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும்.

இதற்கு அண்மைய உதாரணமொன்றை இங்கு குறிப்பிடலாம் என்று கருதுகின்றேன். பொத்தவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியானது ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்களின் எழுச்சியான பங்கேற்பில் நடைபெற்றதொன்றாகும். மூன்று கூட்டு அரசியல் தரப்புக்கள் ஜெனிவாவுக்கு எழுத்து மூலமான நிலைப்பாடுகளை ஒன்றிணைந்து அனுப்பியதன் பின்னர் நடைபெற்ற இந்த பேரணியானது நிச்சயமாக ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணத்தினை வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.

ஆனால் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் அதனை தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தியதோடு மட்டும் நிற்காது அந்த உணர்வு பூர்வமான பேரணியை இலங்கை அரசங்கத்திடம் முன்வைக்கும் பத்தம்சக் கோரிக்கையுடன் மட்டுப்படுத்தவே அதிகளவில் முனைப்புக்காட்டினர்.

குறிப்பாக சுமந்திரன் இந்த விடயத்தில் தீவிரமாக செயற்பட்டதோடு, பாராளுமன்றிலும் அவ்வாறான கருத்துக்களையே பதிவு தமிழர்களின் அபிலாஷைகளையே மலினப்படுத்தி விட்டார். இவ்விதமான செயற்பாட்டை மேற்கொண்டவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராகவும், தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தராகவும் தொடர்ந்தும் செயற்படுவதற்கு இடமளித்திருக்கின்றார்கள். 

அவர் மீது இந்த விடயங்கள் தொடர்பில் எவ்விதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை. நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அப்பாவி மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புக்களை மலினப்படுத்துபவரை பிரதிநிதியாகக் கொண்டிருக்கும் அரசியல் கட்சி பங்கேற்கும் தமிழ்த் தேசியப் பேரவையில் நாம் எவ்வாறு பங்கேற்க முடியும்.

அப்பேரவையானது கொள்கை வழியில் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயணிக்கும் என்று எவ்வாறு கருத முடியும். ஆகவே தான் அவ்விதமான பொய்யான செயற்பாட்டாளர்களுடன் இணைந்து பயணிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம் என்றார்.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.