இந்திய லெஜண்ட்ஸுடன் மோதுகிறது இலங்கை லெஜண்ட்ஸ்


 தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியுடன் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி இறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் மோதுகின்றது.

வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இருபதுக்கு - 20 இந்தியாவின் ராய்ப்பூரில் இடம்பெற்று வருகின்றது.

இத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் லெஜண்ட்ஸ் அணியை தோற்கடித்த இந்திய லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்நிலையில்,2 ஆவது அரையிறுதியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியும் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்தின.

2 ஆவது அரையிறுதியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி சார்பாக வன் வெய்க் 53 ஓட்டங்களையும் அல்வீரோ பீற்றர்சன் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி சார்பில் நுவான் குலசேகர சிறப்பாக பந்து வீசி 25 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 20 ஓவர்களில் 126 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியை வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜெயசிங்க ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மறுமுனையில் தரங்க ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி சார்பாக நிற்னி மற்றும் பீற்றர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர். 

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றிகொண்ட இலங்கை லெஜண்ட்ஸ் அணி எதிர்வரும் 21 ஆம் திகதி இந்திய லெஜண்ட்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

இத் தொடரின் கிண்ணம் இலங்கை லெஜண்ட்ஸ் கைப்பற்றுமா அல்லது இந்திய லெஜண்ட்ஸ் கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.