யாழ். மல்லாகத்தில் கிரிக்கெட் மைதானம் திறப்பு


 வெளிமாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் ‘கிரிக்கெட் கமட்ட’   (கிராமத்துக்கு கிரிக்கெட்) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைக்கப்பட்டது. 

 ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் ரவீன் விக்கிரமரட்ணவின் தலைமையில் கடந்த 14 ஆம் திகதியன்று திறந்து வைக்கப்பட்ட ‘மல்லாகம் ஸ்ரீ பாஸ்கரன் கிரிக்கெட் மைதானம்’ கிரிக்கெட் வீரர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான போதிய வசதிகள் இல்லாது சிரமப்பட்ட யாழ் மாவட்ட  வளரும் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு, தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு தேசிய மைதானமொன்று இல்லாமல் இருந்தமை பெரும் குறையாகவே இருந்து வந்தது. எனினும், தற்போது அந்த குறையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நீக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தரும் சமூக சேவையாளருமான மறைந்த அமரர் ஸ்ரீ பாஸ்கரனுக்கு சொந்தமான இடத்திலேயே இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் இந்த மைதானத்தை, இம்மாவட்டத்திலுள்ள 26 கிரிக்கெட் சங்கங்களும், 16 பாடசாலை கிரிக்கெட் சங்கங்களும்  தமது பாவனைக்கு உபயோகிக்க முடியும்.

இந்நிகழ்வுக்கு யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன தேசிய அபிருத்தி நிலையத் தலைவர் கமல் பத்மசிறி, யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவர் ஏ.எஸ்.நிசாந்தன், யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கே.சசிகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.