T-20 தொடரை கைப்பற்றியது இந்தியா!


 இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணியானது, டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆவதும் இறுதியானதுமான டி- 20 ஓவர் போட்டி குஜராத், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயான் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 

லோகேஷ் ராகுல் இந்த ஆட்டத்தில் இடம் வழங்கப்படாததன் காரணத்தினால் ரோகித் சர்மாவுடன், அணித் தலைவர் விராட் கோலி தொடக்க வீராக களமிறங்கினார்.

இங்கிலாந்து பந்து வீச்சை நொறுக்கிய இவர்கள் வலுவான அஸ்திவாரத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்களை திரட்டி அசத்தியது. 

இங்கிலாந்து அணியினர் வீசிய பந்துகளை அசராமல் சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா நான்கு திசைகளிலும் பந்துகளை தெறிக்க விட்டார்.  விராட் கோலியும் ஏதுவான பந்துகளை விரட்ட துரத்தியடித்தார்.

அதனால் அணியின் ஓட்ட எண்ணக்கை வேகமாக அதிரித்தது. 

இந் நிலையில் 9 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ரோகித் சர்மா மொத்தமாக 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரோகித்- கோலி கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களை சேகரித்தது.

அடுத்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் சந்தித்த முதல் ஓவரிலேயே அடில் ரஷித்தின் சுழலில் இரண்டு பிரமாதமான சிக்சர்களை தூக்கியடித்தார். 

அதன் பின்னர் அவரது சரவெடியால் அணியின் ஓட்ட வேகம் தொய்வின்றி நகர்ந்தது. இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 143 ஆக உயர்ந்த போது சூர்யகுமார் 17 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா வந்தார். 

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய  விராட் கோலி அரைசதத்தை எட்டினார். இந்த தொடரில் அவர் அடித்த 3 ஆவது அரைசதம் இதுவாகும்.

இறுதிக் கட்டத்தில் கோலியும், பாண்டியாவும் அதிரடி காட்டினர். இவர்களை கட்டுப்படுத்த வழிதெரியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர். 

இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை குவித்து மலைக்க வைத்தது. 

கோலி 80 ஓட்டங்களுடனும் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்ஸர்), பாண்டியா 39 ஓட்டங்களுடனும் (17 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழக்காதிருந்தனர்..

இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜேசன் ரோஜயை டக்கவுட்டுடன் புவனேஷ்குமார் கிளீன் போல்டாக்கினார். 

இதன் பின்னர் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லரும், டேவிட் மலானும் இணைந்து பதிலடி கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை துரிதமாக உயர்த்தினர். 

அதனால் 9.2 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டங்களை தாண்டியது. 

இவர்கள் ஆடிய விதம் இந்திய வீரர்களை மிரள வைத்தது. இந்த சூழலில் மீண்டும் புவனேஷ்வர்குமாரை பந்து வீச கோலி அழைத்தார். 

இது தான் ஆட்டத்தில் திருப்பு முனை என்று சொல்ல வேண்டும். ஸ்கோர் 130 ஓட்டங்களை எட்டிய போது (12.5 ஓவர்) அவரது பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். பெயர்ஸ்டோ (7 ஓட்டம்), டேவிட் மலான் (68 ஓட்டம், 46 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்ஸர்), அணித் தலைவர் மோர்கன் (ஒரு ஓட்டம்) அடுத்தடுத்து வெளியேற ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது.

20 ஓவர்களில் இங்கிலாந்து அணியால் 8 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. 

இதன் மூலம் இ்ந்தியா 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்து, போட்டிகள் கொண்ட டி-20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

2 முன்னணி விக்கெட்டை வீழ்த்திய இந்திய புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருதையும், 5 ஆட்டத்தில் 3 அரைசதம் உள்பட 231 ஓட்டங்களை சேர்த்த இந்திய அணித் தலைவர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.