தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க பரிந்துரைக்கப்படும்!


 தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரைக்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதியன்று தமிழகத்திற்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இன்று ‘தொலைநோக்கு பத்திரம்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்....

• விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

• 18 முதல் 23 வயது வரையிலான மகளிருக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.

• 12 இலட்சம் ஏக்கர் காணி பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியல் இன மக்களிடம் வழங்கப்படும்.

• 50 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

• தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும்.

• ஐந்து ஆண்டுகளுக்கு ஆற்றுப்படுகைகளிலிருந்து மணல் அள்ளுவது முற்றிலுமாக தடை செய்யப்படும். தேவை ஏற்பட்டால் மணல் இறக்குமதி செய்யப்படும்.

• இந்து ஆலயங்களின் நிர்வாகம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

• தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுபான கடைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வேறு துறைகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.

• அதிக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயத்திற்கு என தனி பட்ஜட் போடப்படும்.

• சென்னை மாநகராட்சியை 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும்.

• பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு மத்திய அரசு வழங்கியுள்ள பத்து சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

• மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் இல்லம் தோறும் நேரடியாக வழங்கப்படும்.

• முன்னாள் இராணுவத்தினர் குடும்பத்தினர், போர் விதவைகளுக்கு இலவச பேருந்து பயண சீட்டு சலுகை வழங்கப்படும்.

• விதவைகளுக்கான தனியாக நலவாரியம் அமைக்கப்படும். அவர்களுக்கான ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

• தாய்மொழியில் மருத்துவ கல்வி மற்றும் தொழில் கல்வி பயிற்சி அளிக்கப்படும்.

• ஆலய அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

• உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்படும்.

• இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரை செய்யப்படும்.

போன்ற பல வாக்குறுதிகள் அந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி என பல அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.