சில தமிழ் அகதிகளை அவசர அவசரமாக நாடுகடத்தத் தயாராகின்றது யேர்மனி!

 


கடந்த சில நாட்களாக ஜேர்மனியில் வசித்து வருகின்ற ஈழத்தமிழர்களில் சிலரை விடியற்காலையில் மேற்கொள்ளப்படும் திடீர்ச் செயற்பாட்டில் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுவருகிறார்கள். கைது செய்யப்படுபவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது தொடர்பாக அவர்களது உறவினர்கள் எந்தவிதமான தகவலையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது அனைத்துத் தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வருடத்துக்கான விசாவைத் தருகிறோம் என்று சொல்லப்பட்ட செய்தியை நம்பி வெளிநாட்டவர்களின் காவல்துறைக்குச் சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் 30ம் திகதி ஒரு விசேட விமானத்தில் இவர்கள் எல்லோரும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

கைதுசெய்யப்பட்டவர்களில் 31பேர் டுசல்டோபிலும் அண்ணளவாக 50 பேர் பிராங்பேட்டிலும் 11 பேர் ஸ்ருட்காட்டிலும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. பங்குனி மாதம் 30ம் திகதிக்கு முன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தவிதமான தொடர்பையும் ஏற்படுத்த முடியாமல் இருக்கிற படியால் இந்த எண்ணிக்கையை எம்மால் உறுதிப்படுத்த முடியாதிருக்கிறது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் சிறீலங்காவில் மோசமாகிக் கொண்டிருக்கும் மனித உரிமை நிலைமைகளை விசாரிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்க வேண்டும்எ ன்ற தீர்மானத்துக்கு வாக்களித்திருப்பதை அவதானிக்கும் போது, ஜேர்மானிய அரசு ஏன் இவ்வளவு இரகசியமாக இந்த நாடுகடத்தலை செய்ய முனைகிறது என்பது புலனாகிறது. ஜேர்மானிய அரசின் இந்த வெளிவேடத்தன்மை அதிர்ச்சி அளிக்கிறது. ஜேர்மானிய அரசுக்குரிய மனித உரிமைக்கொள்கை மற்றும் மனிதநேய உதவி என்பவற்றுக்குப் பொறுப்பான ஆணையரான பாபேல் கொவ்ளர் ஜனவரி 28ம் திகதி பின்வருமாறு ட்வீற்றரில்  செய்தி வெளியிட்டிருந்தார். “ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை அவதானிக்கும் போது சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலைமை மிக மோசமாக இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. இந்த மனித உரிமைகள் ஆணையத்தினூடாக சிறீலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்துவதில் ஜேர்மனி அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்திருந்தார். பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஜேர்மனி ஆதரவு வழங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் அங்கு மேற்கொள்ளப்படும் பன்னாட்டு மனிதாயச் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்களையும் சான்றுகளையும் சேகரித்து, அவற்றை உறுதிப்படுத்தி ஆய்வுசெய்தற்காக 2021, 2022ம் ஆண்டுகளில் மனித உரிமை ஆணையாளரின் பணிமனைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.பன்னாட்டு நீதிமன்றம், மற்றும் குறிப்பிட்ட நாட்டுக்கு வெளியே மேற்கொள்ளப்படக்கூடிய வழக்குகள் தொடர்பான செயன்முறைகளை ஒருங்கிணைப்பதற்கும் மீளாய்வு செய்வதற்கும் அதே வேளை குறிப்பிட்ட தகவல்களை நாட்டின் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும் பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதிவழங்கலில் அனுபவம்மிக்க ஒரு மூத்த சட்ட ஆலோசகரும் நியமிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மற்றைய சட்ட ஆலோசகர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை உத்தியோகத்தர்கள், சட்டம் தொடர்பான மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்கும் வேண்டிய நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத் தேவைகளுக்கென மொத்தமாக 2,856300 அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டிருக்கின்றன.

சிறீலங்காவில் நிலவும் மோசமான மற்றும் தொடர்ந்து அதிகரித்துச் சொல்லும் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கென விசாரணையாளர்கள் கொண்ட ஒரு குழு நிறுவப்படவேண்டும் என வாதிடுகின்ற ஜேர்மனி, சமகாலத்தில் ஈழத்தமிழ் அகதிகள் 100 பேரை சிறிலங்காவுக்கு நாடுகடத்துகிறது.

சிறீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட முடிவுக்கு ஜேர்மானிய அரசு இப்படியா தனது பங்களிப்பைச் செய்ய நினைக்கிறது? இவ்வாறு தான் மத்திய நூற்றாண்டுகளில் மந்திரக்காரிகள் (witches) என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், தண்ணீர்; அவர்களை மூழ்கடிக்குமா எனச் சோதித்துப் பார்ப்பதற்காக மூழ்கடிக்கப்பட்டார்கள். உண்மையான மந்திரக்காரிகளை தண்ணீர் மூழ்கடிக்காது என்று அவர்கள் நம்பினார்கள். உண்மையில் அந்த மந்திரக்காரிகள் அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கினார்கள். எனவே அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் கணிக்கப்பட்டார்கள்.

என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 2009ம் ஆண்டில் கோட்டாபயவும் மகிந்த இராஜபக்சவும் தமது நாட்டு மக்களை நடத்தியது போல சிறிலங்காவில் மிக மோசமாகப் பார்க்கப்படும் தமிழ் அகதிகளும் நடத்தப்படுவார்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகவா இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது? 

ஜேர்மானிய அரசின் இந்த நாடுகடத்தும் நடவடிக்கை, புலம்பெயர் தமிழ் மக்கள் நடுவில் பதட்டத்தையும் பயவுணர்வையும் தோற்றுவிக்கும் என்பதற்கு அப்பால் இவ்வாறு சிறீலங்காவிலிருந்து தப்பி வந்தவர்களை (இவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என நம்பி) மீண்டும் இராஜபக்க சகோதரர்கள் கையிலேயே கையளிக்கும் இந்த நடவடிக்கை, நிச்சயமாக தற்போதைய சிறீலங்கா அரசுக்குப் பன்னாட்டு அரசியல் அரங்கில் சாதகமான ஒரு பரப்புரையை ஏற்படுத்தவே துணைசெய்யும். சிறிலங்காவில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட, தற்போதும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் மிக மோசமான மனித உரிமைகள் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பன்னாட்டு முயற்சிகளுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவே ஜேர்மானிய அரசின் மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை அமையப்போகிறது.

மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள் அல்லது பண்பாட்டு அமைப்புகள் இது தொடர்பான ஒரு காணொளியையோ அல்லது எழுத்து மூலமான ஒரு அறிக்கையையோ எமக்கு மிக அவசரமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதோடு வெளிநாட்டு அமைச்சருக்கும் உள்நாட்டு அமைச்சருக்கும் அனுப்பப்படும். மிகவும் கொடுமையான இந்த செயலை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களில் யாராவது கைதுசெய்யப்பட்டிருந்தால் அல்லது காணாமற்போயிருந்தால் உடனடியாக எம்முடன் தொடர்புகொள்ளுமாறு ஜேர்மனிய தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

எதிர்வரும் மார்ச் 29ம் திகதி, திங்கட்கிழமை காலை புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகளும் தாம் வதியும் நாடுகளில் உள்ள ஜேர்மானிய தூதரங்களுக்குக் குழுவாகச் சென்று குறிப்பிட்ட நாடுகடத்தல் நடவடிக்கைக்கு எதிரான உங்களது கண்டன மகஜர்களைக் கையளிக்குமாறும, குறிப்பிட்ட இராசதந்திரிகளுடன் பேசுமாறும் விநயமாகக் கேட்டுக்கொள்கிறோம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேளைகளில் தற்போதைய கொரோனா நோய்த்தொற்றுத் தொடர்பான நடைமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை நீங்கள் முன்னெடுக்க முடிவு செய்யும் பட்சத்தில் எமக்கும் அவை தொடர்பான செய்திகளைத் அனுப்பிவையுங்கள். அப்படிப்பட்ட தகவல்களை எமது இணையத்தளத்தில் நாங்கள் பதிவேற்றம் செய்வோம். ஏனையோரும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க அவை தூண்டுதலாக அமையும்.


சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, பிரேமன்தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்: email@humanrights.de

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.