தொழில்முறை திறன்கள் நிறைந்த நாடாக இலங்கை உருவாக வேண்டும்!


தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த இலங்கை நாடு உருவாகுவதை காண்பதே எமது எதிர்பார்ப்பு என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “SKILLS SRI LANKA” தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் “திறன் என்பது நபருக்கு நபர் வேறுபடும். சிறு வயதில் பிள்ளைகளின் பல்வேறு திறன்களை நாம் காண்போம். அந்த திறன்களை வளர்த்துக் கொள்ள நம் நாட்டில் கல்வி முறைகள் மிகக் குறைவு.

கல்வி எனும் போட்டியில் இருந்து விலகும் குழந்தைகளின் மனநிலையில் முறிவு ஏற்படும். புலமைப்பரிசிலில் சித்தியடையவில்லை என்றால் பிள்ளை அத்தருணத்திலேயே மனமுடைந்துவிடும். இந்த நாட்களில் மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எழுதுகிறார்கள்.

அவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் சித்திபெற தவறும்போதும், க.பொ.த உயர் தரத்தில் சித்திபெற தவறும்போதும், பிள்ளைகள் மனமுடைந்து போய்விடுவர். இறுதியில் அந்த இளம் வயதில் பல்வேறு திறன்களை கொண்டிருந்த குழந்தையின் திறன்களுக்கு இடமற்று போய்விடும்.

பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் போன்றே பரீட்சையில் சித்தியடையாவிடினும் வாழ்க்கையில் வெற்றிபெற்ற பலர் எமது சமூகத்தில் உள்ளனர். அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நிலைமையை காண்பது நேற்று இன்று அல்ல. அதனால் நாம் அனைத்து சந்தர்ப்பத்திலும் இந்நிலையை உணர்ந்து கல்விக்கு போன்றே தொழில் கல்விக்கான சீர்த்திருத்தங்களை முன்வைத்தோம். அதேபோன்று அவற்றை செயற்படுத்தினோம்.

ஆரம்ப நாட்களில் மிகச் சில இளைஞர்களே தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வந்தார்கள். கிராம தொழில்நுட்பக் கல்லூரிக்கு செல்ல நாங்கள் வெட்கப்பட்ட ஒரு காலம் நம் நாட்டில் இருந்தது. தொழில்நுட்ப கல்லூரிக்கு செல்லும்போது இளைஞர்கள் தங்கள் சமூக அந்தஸ்தை இழக்க நேரிடும் என்று நினைத்தார்கள்.

நான் தொழில் மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக இருந்தபோது (1994-1997) தொழில்நுட்ப கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். மேலும், ஒழுங்காக செயல்படாத தொழில்நுட்ப கல்லூரிகளை மறுசீரமைத்து கல்வி நடவடிக்கைகளை தொடங்குவதற்கான ஒரு சூழல் உருவாக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கல்லூரிகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

உயர்கல்வியை பெறுவதற்கான வாய்ப்பை இழந்த இந்த நாட்டின் பிள்ளைகளுக்காக நான் தொழிற்பயிற்சி அதிகாரசபையை தொடங்கினேன். இது தொழிற்பயிற்சிக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்தியது.

நாடு முழுவதும் பிராந்திய மட்டத்தில் கிட்டத்தட்ட 175 தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டோம்.
நாங்கள் தொழில் சந்தையை ஆராய்ந்து அதற்கமைய பாடத்திட்டங்களை அமைத்தோம். அதன்படி, அந்நேரத்தில் தொழிற்பயிற்சி அதிகாரசபை மூலம் தேவையான தொழிலாளர்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த முடிந்தது.

தொழிற்பயிற்சி அதிகாரசபையை தொடங்கிய, இளம் தலைமுறையினரை தொழிற்பயிற்சிக்கு வழிநடத்த தொடங்கினோம். ‘வாழ்க்கைக்கு ஒரு திறன் – திறனுக்கான வேலைவாய்ப்பு’ என்ற எண்ணக்கருவிற்கமைய நாங்கள் திறமைக்கு இடம் கொடுத்தோம்.

நமது நாட்டின் அனைத்து பிள்ளைகளும் பல்கலைக்கழகம் செல்வதை காண எமக்கு விரும்பமுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை நாம் எவ்வளவுதான் உயர்த்தினாலும் அனைவருக்கும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காது. அதுவே உண்மை.

அதன்போது பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாதவர்கள் குறித்து நாம் நோக்க வேண்டும். அவர்களும் எமது நாட்டின் பிள்ளைகளே. அதனால் பரீட்சையில் தோற்றாலும் அவர்களது வாழ்வில் வெற்றியடைய செய்வது எமது கடமையாகும்.

நாம் தொழில் பயிற்சியை ஆரம்பிக்கும்போது இன்று போன்றே அன்றும் எதிர்க்கட்சி விமர்சித்தது. எனினும் பலர் அதற்கு செவிமடுக்காது தொழில் பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.

பணிப்பெண்களாக இலங்கை பெண்கள் வெளிநாட்டிற்கு செல்வதை நிறுத்துவதே எமது தேவையாக காணப்பட்டது. பயிற்சி பெற்றவர்கள் என்ற ரீதியில் அவர்களை உயர் பதவிகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

அன்று நாங்கள் இளைஞர்களை திறமையான தொழிலாளர்களாக கொரியாவுக்கு அனுப்பியபோது, கொரியாவிற்கா செல்கின்றீர்கள் என்று பலரும் கெலி செய்தனர். ஆனால் இன்று நிலைமை வேறு. ஒரு கிராமத்தில் கொரியா சென்ற ஒரு இளம் பெண்ணின் கையை பார்க்கும்போது இளைஞர்கள் கொரியா செல்ல ஆர்வமாக உள்ளனர். இப்போது நாம் திறமையான தொழிலாளர்களை கொரியாவுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கும் அனுப்ப முடிகிறது.

எனவே, நம் நாட்டில் இளைஞர்களிடையே தொழில் பயிற்சிக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. இந்த கேள்விக்கு மத்தியில் உலகின் தேவைகளைப் புரிந்துகொள்வதும், நமது இளைஞர்களை அந்த தொழில்களுக்கு வழி நடத்துவதும் அவசியம்.

அதனால் இன்று ஆரம்பிக்கப்படும் “SKILLS SRI LANKA” தேசிய வேலைத்திட்டம் காலத்திற்கு உகந்ததாகும். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் எமது இளைய தலைமுறையினருக்காக இவ்வாறானதொரு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பது குறித்து திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இவ்வேலைத்திட்டம் ஊடாக எமது நாட்டின் தொழில் கல்வியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நான் நம்புகின்றேன். தொழில்நுட்ப கல்லூரியை மேம்படுத்தவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையை இலக்காக கொண்டு புதிய தொழில் பயிற்சி பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் சாத்தியம் உள்ளது.

உலகின் முன்னேற்றமான சமுதாயத்திற்கு ஏற்ற தொழில்முறை அறிவை கொண்டு நமது நாட்டின் இளைஞர்களை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அதற்காக, ஏற்கனவே தொழிற்கல்வியை தொடரும் இளைஞர்களுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை வழங்குகிறோம். அது மாத்திரமன்றி, தனியார் துறையை இணைத்து நாட்டில் தொழிற்கல்வி, தொழில்நுட்ப பயிற்சி மற்றும் குறிப்பாக புதுமைகளை பிரபலப்படுத்த பல முயற்சிகளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.அதன்மூலம் தொழில்முறை திறன்கள் நிறைந்த சிறந்த இலங்கை நாடு உருவாவதை காண்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” என தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.