பொழைக்கத் தெரிஞ்சவன் - ஜோக்ஸ்!


வேலை கிடைக்காத ஒருத்தர் ஏதாவதொரு மருத்துவமனை ஆரம்பித்து மருத்துவர் ஆகிடலாம்னு நினைத்தார். உடனே அதற்கான வேலையிலும் இறங்கினார்.


வாசலில் பெரிதாக ஒரு போர்டு வைத்தார்...

"எந்த நோயாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். நோய் சரியாகவில்லை எனில் 1000 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்" என்று அந்த போர்டில் எழுதியும் வைத்தார்.

இவர் போலி டாக்டர் என்று தெரிஞ்ச ஒருத்தர், அவர் கிட்ட எப்படியும் 1000 ரூபாயை வாங்கிவிட வேண்டுமென்கிற ஆசையில் அந்த மருத்துவமனைக்குப் போனார்.

அங்கிருந்த டாக்டரிடம், "என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல" என்றார்.

உடனே அந்த டாக்டர், "சிஸ்டர், அந்த பத்தாம் நம்பர் பாட்டிலில் இருக்கிற மருந்த எடுத்து இவரு வாயில 5 சொட்டு விடுங்க" என்றார்.

அந்த நர்சும் பத்தாம் நம்பர் பாட்டிலில் இருப்பதை எடுத்து வந்து அவர் வாயில் ஊற்றினார்.

அதனைச் சுவைத்தவர், "ஐயோ டாக்டர், இது பெட்ரோல் போலிருக்கிறது" என்றார்.

உடனே அந்த டாக்டர், "வெரி குட்... இப்போதுதான் மருந்து வேலை செய்யுது. உங்களால இப்போ சுவையை உணர முடியுது எடுங்க 500 ரூபாயை..." என்றார்.

வந்தவர் வேற வழியில்லாமல் 500 ரூபாயைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

அடுத்த சில நாட்களில், இந்த முறை எப்படியும் அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்கி வந்துவிட வேண்டுமென்று சென்றார்.

அங்கிருந்த டாக்டரிடம், "டாக்டர் எனக்கு மறதி ரொம்ப அதிகமா இருக்கு குணப்படுத்துங்க" என்றார்.

உடனே அந்த டாக்டர், "நர்ஸ் அந்த பத்தாம் நம்பர் பாட்டில்ல இருக்கற மருந்த எடுத்து இவரு வாயில 5 சொட்டு விடுங்க" என்றார்.

உடனே அவர், "அந்த பத்தாம் நம்பர் பாட்டிலில் இருக்கறது பெட்ரோல் ஆச்சே" என்றார்.

உடனே அந்த டாக்டர், "வெரி குட், உங்க மெமரி பவர் திரும்ப வந்திருச்சு எடுங்க 500 ரூபாயை" என்றார்.

அவரும் வேறு வழியில்லாமல் ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார்.

எப்படியும் அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை வாங்காமத் திரும்பக் கூடாது என்கிற நோக்கத்தில் மீண்டுமொரு நாள் அந்த டாக்டரிடம் சென்றார்.


அங்கு டாக்டரிடம், "டாக்டர், எனக்குக் கண்பார்வை சரியில்லை, எப்படியாவது குணப்படுத்துங்க டாக்டர்" என்றார்.

அதனைக் கேட்ட டாக்டர், "சாரி… என்கிட்ட கண்பார்வை குணப்படுத்தற மருந்து இல்லை. இந்தாங்க 1000 ரூபாய்" என்று ரூபாயை அவரிடம் கொடுத்தார்.

உடனே அவர், "என்ன டாக்டர் இது 1000 ரூபாய் இல்லை. இது 500 ரூபாய்தான்" என்றார்.

உடனே அந்த டாக்டர், "வெரி குட். உங்க பார்வையும் நல்லா ஆகிடிச்சு. எடுங்க 500ரூபாய்" என்றார்.

பொழைக்கத் தெரிஞ்சவன் எப்படியும் பொழச்சிக்குவான்னு சொல்வாங்களே... அதுக்குத்தான் இந்தக்கதை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.