இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்தை அரசாங்கம் செய்யாது!


இரணைதீவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாசாக்களை புதைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் செய்யாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் பேதவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இரணைதீவு மக்கள் சார்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர், “இரணைதீவு எமது பூர்வீகப் பிரதேசமாகும் 30 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடத்திற்குச் சென்றபோதும் அங்கே இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பெரும் காடுகளாகவே காணப்படுகின்றன.

அவற்றை, கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைக் கொண்டு துப்பரவு செய்ய முடியாதுள்ளது. அதனை இயந்திரங்கள் மூலமே துப்பரவுசெய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறான வசதி குறைபாடுகள் உள்ளபோதும் தொழிலுக்காகவும், பூர்வீக இடத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடும் அங்கு சென்றுள்ளோம்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவைத் தெரிவுசெய்து அங்கே ஆரம்ப வேலைகளைச் செய்திருக்கின்றனர். இது எங்களுக்கு மன வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நாமும் குரல் கொடுக்கின்றோம். ஆனால், அவர்களின் இடங்களில் அடக்கம் செய்யவேண்டும். இன்றைய தினம், காலைமுதல் இரணைதீவிற்குச் செல்வதற்குக் கடுமையான தடைகளை கடற்படையினர் விதித்துள்ளனர்” என்று குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏதோவொரு விதத்தில் இரணைதீவு தெரிவு செய்யப்பட்டிருக்கும் என நம்புகின்றேன். இது தொடர்பாக பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியிருக்கின்றேன்.

இந்தப் பிரதேசத்தில் ஜனாசா அடக்கம் செய்யும் நடவடிக்கை நடைபெறாது என நம்புகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.