நாதன் தம்பி அவர்களது உறுதிக்குத் துணை நிற்போம் ..!


யார் இந்த நாதன் தம்பி ..?


நாதன் தம்பி அவர்கள் யேர்மனியைக்  வசிப்பிடமாக கொண்டவர்.  தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ´´நிதிதிரட்டியவர்´´ எனும்   குற்றச்சாட்டினை யேர்மனியில் எதிர்கொண்டு நிற்பவர்.  இக்குற்றச்சாட்டிற்காக; யேர்மனிய நீதியமைச்சால் விதிக்கப்பட்ட ´´தண்டப்பணத்தைச்´செலுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் நாதன் தம்பி அவர்கள் ; ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதக் குற்றச்சாட்டிற்கு எதிராகத் தனது தெளிவான கருத்தைத் தெரிவித்துத் துணிந்து  போராடுகிறார்.  IMRV - Bremen - யேர்மன் மனித உரிமைகள் அமைப்பு , மற்றும் Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் ஆகிய அமைப்புகள் நாதன் தம்பி அவர்களது நியாயப்போரிற்கு முழு  ஒத்துழைப்பையும் வழங்க முன்வந்துள்ளன.


விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியமைக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு  தண்டப்பணத்தைச் செலுத்தியதன்மூலம்;    விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளே என மௌனமாகச் சம்மதித்துப் பலர் இங்கே  கையெழுத்திட்டுவிட்டார்கள். தண்டப்பணம் என்பது குற்றத்திற்கான தண்டனையை இல்லாதொழிக்குமே தவிர,  குற்றம் செய்ததற்கான பதிவை இல்லாதொழிக்காது. மேலும்; விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியமையானது குற்றமே அல்ல என்பதையும்  இங்கே பலர் உணரத் தலைப்படவில்லை . 


 2006 ஆம் ஆண்டு தொடக்கம் நாதன் தம்பி அவர்கள் விடுதலைப்புலிகளுக்காக நிதிதிரட்டி உதவியளித்துள்ளார் என்பதே யேர்மனிய நீதியமைச்சின் குற்றச்சாட்டாகும். நோர்வே நாட்டு அனுசரணையுடன்  2002 - 2006 வரை தமிழீழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் புலத்தில் வாழும் ஏராளமான  தமிழர்கள்  தமிழீழ அரசின் உருவாக்குநர்களான  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி  வழங்கிவந்துள்ளனர்.  ஏனெனில் தமிழீழம் என்ற  நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான நிதியுதவியே இதுவாகும். அவ்வாறே,  இதே காலப்பகுதியில் ஏராளமான அரசுசாரா நிறுவனங்கள், கிறித்தவ அமைப்புகள்,  ஆசிய அபிவிருத்தி  வங்கி, ஆகிய மில்லியன் யூரோ பணத்தைத் தமிழீழத்தின் வன்னிப் பகுதிக்கு  வழங்கியிருந்தன.  ஏனெனில் வன்னியைத் தலைமையகமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் நடைமுறை அரசை அமைத்திருந்தனர்.


ஆகவே 2002 - 2006 வரை நாதன் தம்பி அவர்களைப்போலவே பலரும் தமிழீழத்திற்கு நிதியுதவி வழங்கியிருக்கிறார்கள். இவர்களில் பலர் தமிழீழத்திலுள்ள  தமது உறவுகளுக்கும் நிதியுதவி செய்திருக்கிறார்கள்.  ஆனால்; 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப்புலிகள் மீது பயங்கரவாத முலாம் பூசி, அவர்கள் மீது தடையை அறிவித்தது மட்டுமன்றி, தமிழீழத்திற்கு நிதியுதவி வழங்கிய தனிநபர்கள் மீது குற்றப்பதிவுகளை நடாத்தியிருக்கின்றது. அதாவது 2006 - 2009 வரை நிதிதிரட்டியமையே குற்றமாக நோக்கப்படுவது வேடிக்கைக்குரியதாகும்.


இங்கே ஓர் விடயத்தைத் தெளிவு படுத்தவேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகள் போரைச் செய்ததனால்தான் அவர்கள்  மீது தடை விதிக்கப்பட்டதாகவும்,  அதனால்  இனஅழிப்பு நடைபெற்றதாகவும் நீங்கள் நினைக்கக்கூடும். அது முற்றிலும் தவறானது. விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையின் காரணமாகவே  போர் உருவானது. விடுதலைப்புலிகள்  மீது தடை விதிக்கப்படாவிடின், போர் நடைபெறவோ,   தமிழின அழிப்பு நடந்திருக்கவோ வாய்ப்பே அமைந்திராது.


2000 ஆம் ஆண்டளவில் நோர்வேத் தரப்பு, தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்த பின்னர், ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை விடுதலைப்புலிகள்  மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து தமது  உண்மைத்தன்மையை வெளிப்படுத்தினர்.  ஆனால் இதே காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 160  உறுப்பினர்களை, சிறிலங்கா இராணுவ / துணை இராணுவக்குழுக்கள்  படுகொலைசெய்தன.  2001 ஆம் ஆண்டின் இரண்டாம் மாதமளவில்  பிரித்தானியா விடுதலைப்புலிகளைத் தடைசெய்தது. இந்தத் தடையைச் சாதகமாகப் பயன்படுத்தி, சிறிலங்கா இராணுவம் ´´அக்கினிகீல´´ என்றோர் மாபெரும் இராணுவ நடவடிக்கையை  நடாத்தியது. விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவுப் படைத்தளத்தை மீளக்கைப்பற்றுவதே  இதன் நோக்கமாகும். ஆனால் இது தோல்வியில் முடிந்தது.


போரின்மூலம் விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள இயலாது என்றறிந்த  நிலையில்  யேர்மனிய அரசானது ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டிருந்த பலத்தின் நிமித்தம், அந்த   உந்துதலின் காரணமாக;  சிறிலங்கா அரசு - புலிகள் தரப்பை பேச்சுவார்த்தைக்குள் நகர்த்துவதற்கு 2002 இல் முயற்சித்தது. இதற்குப் புலிகளும் சம்மதித்தனர். இந்த நகர்வானது விடுதலைப்புலிகளைச் சமதரப்பாக ஏற்று நகர்த்தப்பட்ட திட்டமாகும். இதன் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகுகளை ஏற்று உலகெங்குமிருந்து தமிழீழத்தின் கட்டுமான  நிதி தமிழர்களால் அனுப்பிவைக்கப்பட்டது.


இப்போது நாதன் தம்பி அவர்களது  மறுப்பு நிலைக்கு வருவோம். விடுதலைப்புலிகளைச் சம தரப்பாக ஏற்று, அவர்களோடு உறவாடிய ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும், எதை அடிப்படையாக வைத்து  தற்போது விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்தமையினைக் குற்றமாக நோக்குகிறார்கள் என்பதுவே நாதன் தம்பி அவர்களது  நியாயமிகு வினாவாகும். தனியே தண்டப்பணத்தைச் செலுத்த மறுப்பது மட்டுமே அவர் தேவையல்ல.  தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர் என்பதுவும் அவர் இதன்மூலம் சொல்ல வருகின்ற செய்தியாகும்.


நாதன் தம்பி அவர்கள் எல்லோரையும்போலவே அழகான குடும்பத்தைக் கொண்ட இயல்பு மனிதர். ஆனால் தனித்த மனிதராக, ஓர் புதுவழியைத் திறந்து ,  அவர் தமிழீழ விடுதலைக்குப் பலம் சேர்க்கிறார். தமிழீழ விடுதலைப்போரின் மேன்மையை மீள வெளிக்கொணர்கிறார்.  நாதன் தம்பி அவர்களுக்குக் கிடைக்கப்போகும் வெற்றியின் பிரதிபலனானது, இதுவரை தமிழீழ விடுதலைக்காகப் போராடியவர்களின் எண்ணங்களிற்குப் பலம் சேர்க்கும் என்பதே உறுதி.


உலகெங்குமிருக்கும் சமாதான விரும்பிகளிடமும், மனித உரிமை அமைப்புகளிடமும்  ஓர் கேள்வியை முன்வைக்கிறோம். மத்திய கிழக்கு மற்றும் சீனாவிற்கு எதிரான தமது   இராணுவ வலிமையைக் காட்டி,  இலவசமாக  திருகோணமலைத் துறைமுகத்தைப் பெறுவதற்கான முயற்சியில் இன்று ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய

 சூத்திரதாரிகள் நிகழ்த்திய இனப்படுகொலையிலிருந்து, அவர்களைத்  தப்பிக்க அனுமதிக்க முடியுமா? இக்கேள்விக்கு இல்லை என்ற விடையை நீங்கள் தருவீர்களேயானால், எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள். 


நாதன் தம்பியின் உறுதிக்கு எதிராக நிறையவே அந்நிய சக்திகள் எழுந்துவரக்கூடும்.  அவர்மீதும், அவருக்குத் துணைநிற்கும் அமைப்புகள் மீதும், அரசியல் மற்றும்  நிதிப்பலம் ஆகியவற்றினூடாக அழுத்தங்கள் நிகழ்த்தப்படக்கூடும். ஆதலால்;  எம்முடன் கைகோர்த்துப் பலம் சேர்க்க வாருங்கள் என  தமிழீழ ஆர்வலர்கள், தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.