தேசத்தலைவன் கடைந்தெடுத்த கலைஞன் பரதன் அண்ணை.!


1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் தாயகத்தில் காலடிபதித்த இந்தியஅமைதிப்படை, தமிழர்கள் மீதான போரைத் தொடங்குவதற்கு முத்தாய்ப்பாக முதலில் தமிழர்களின் ஊடகங்களான நிதர்சனம் ஒளிஒலிபரப்புசேவை நிறுவனத்தையும், ஈழமுரசு பத்திரிகை அலுவலகத்தையுமே முதலில் தாக்கியழித்தது.


1990 இல் இந்திய அமைதிப்படை வெளியேற்றபட்டு, தமிழர்தாயகம் விடுதலைப்போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. “ களத்தல் கேட்கும் கானங்கள் “ ஒலிக்க, வெற்றிப்பெருமிதத்தோடு வரியுடைதரித்த போராளிகள் மீண்டும் தமது தங்ககங்களை மண்ணில் அமைத்துக்கொண்டார்கள்.


இந்த வெற்றிச் சூழலில், மக்கள்நடுவில் அரசியல் வேலைகளை விரைந்து முன்னெடுக்கும் எண்ணம் தேசியத்தலைவர் அவர்களிடம் தோற்றம்கண்டது. இதற்கான உத்தியாக தலைவர் அவர்கள் ஊடகத்தையே வலுப்படுத்த எண்ணினார். உண்மைச் செய்திகளையும், போராட்டத்தின் தேவைகளையும் மக்களிடம் உடனுக்குடன் எடுத்துச்துச்செல்லக்கூடிய சேவையை தொடக்க அவர் எண்ணினார்.


1989 இந்திய அமைதிப்படையினருடன் சமராடிக்கொண்டிருந்த அதே நேரம், புதிய தொழில்நுட்ப கருவிகள் கொள்வனவுபற்றியும் சிந்தித்த தலைவரின் எண்ணக்கருவை  பரதன் அண்ணை செயலாக்கினார். 

அதற்கமைவாக, புதிய ஒளிபரப்புக் கருவிகளுடன் நிதர்சனம் நிறுவனம் திருநெல்வேலியில் மீண்டும் புதுப்பொலிவு பெற்றது. இந்த புதிய தொழில்நுட்பக்கருவிகளை தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய பரதன் அண்ணையே சிங்கப்பூர்சென்று கொள்வனவு செய்திருந்தார். இவருடன் நாட்டுப்பற்றாளரான நித்தியண்ணரும் சென்றிருந்தார்.


தலைவர் அவர்கள் கடைந்து, கண்டெடுத்த ஓரு போராளிச் சிற்பிதான் நேற்றைய நாள் இலண்டனில் சாவடைந்த பரதன் அண்ணை. இவர் 1983 காலப்பகுதியில் போராட்டத்தில் இணைந்தவர். அற்புதமான கலைஞன். படப்பிடிப்புக் கலையில் ஒப்பற்ற அறிவுத்திறன் மிக்கவர். இவரது தந்தையார் இராசநாயகம் அவர்கள் நன்கு அறியப்பட்ட ஒருமூத்த படைப்பாளி. 


1990 இல் புலிகளின் குரல்வானொலிச்சேவை தொடங்குவதற்கு முன்னதாக ஒக்ரோபர் மாதத்தில் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவருடன் திருநெல்வேலி பணிமனையில் பரதன் அண்ணையை சந்தித்தேன். அப்போது தான் வானொலிச்சேவையின் தொடக்கப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் பரதண்ணை சொன்னார். அப்போதிருந்தே அவருடன் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். நல்ல நண்பனாக, ஓர் அண்ணனாக, ஒரு வழிகாட்டியாக அவர் எனக்கு இருந்தார் என்பதை இங்கு நினைவிற் பதிக்கும்போது துயரம் ஆட்கொள்கிறது.


அங்கு படப்பிடிப்பு, ஒலிபரப்பு, ஒலிப்பதிவுத் தொழில்நுட்பத்தில் பட்டறிவும் தனித்துவமும் மிக்க சிவாண்ணையும் இருந்தார். புலிகளின் குரலின் தொழில்நுட்ப பணிகளில் இவரின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.   பல்வேறுபகுதிகளில் இருந்துவந்த பல இளம்படப்பிடிப்பு போராளிக்கலைஞர்கள் நிதர்சனத்தில் இருந்தார்கள். இவர்கள் ஒலிப்பதிவு, ஒலித்தொகுப்பு பணிகளைக் கற்றுச் செயலாற்றிக்கொண்டிருந்தார்கள். இவர்களில் சிலர் இன்று மாவீரர்களாகவும் உள்ளனர்.


1990 மாவீரர்வாரத் தொடக்கநாளான நொவம்பர் 21 இல் ஒலிபரப்பு தொடங்கியது. அன்றும் வான்வழித் தாக்குதலை அரசபடைகள் நிகழ்த்தின. தொடர்ந்து பல தடைவைகள் புலிகளின் குரல் வான்வழித்தாக்குதலுக்கு உள்ளாகியது.


பரதண்ணை எந்தப்படைப்பிலும் ஓர் அழகியலைக் காணத்துடிப்பவர். மூக்குநுனியில் கோபத்தை கொண்டவர். எனினும் அடுத்த கணமே அன்பாக உருகி குழந்தையாகிவிடும் மென்மையும் கொண்டவர். இவரது கோபம்கூட இரசனைக்கு உரியது .


இவரோடு பணியாற்றிய காலங்களில் இவரிடமிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம். நேரமுகாமைத்துவத்தை கற்றுத்தந்தவர் பரதண்ணை. பரதண்ணையிடம் கற்றுக்கொண்ட பல பாடங்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன.

தன்னுடைய பொறுப்புக் காலத்தில் வானொலிச்சேவையை முன்னெடுப்பதற்கு கலந்துரையாடல்கள், அறிவுரையாடல்கள் எனப் பலவற்றை ஏற்பாடுசெய்து, கலைஞர்களை ஒருங்கிணைத்தார் பரதண்ணை. மூத்த படைப்பாளிகளுடாக புதிய கலைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கச் செய்தார். யாழ்- பல்கலைக்கழக சமுகத்துடன் இவருக்கு நெருங்கிய உறவிருந்தது. கிராமத்துக் கலைகளை வளர்ப்பதற்கும் அதற்கான கலைஞர்களைத் தேடிக்கண்டடைந்து கொண்டுவந்து நிறுத்தினார்.


இவரது பெருமுயற்சியின் விளைவாகத்தான் திருவெல்வேலியில் தர்மேந்திரா கலையகம் உருவானது. அப்போதைய அரசபடைகளின் குண்டுவீச்சுகளில் இருந்து, தொழில்நுட்பக்கருவிகளையும் கலைஞர்களையும் பாதுகாக்கும் எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட இக் கலையகத்தில் எண்ணற்ற பாடல் இசைத்தட்டுகள் உருவாகின.


ஒளிப்படப்பிடிப்பில் பேரார்வம்மிக்க பரதன் அண்ணை, இனியொரு விதி என்கின்ற முதல் குறும்படத்தை எடுத்தார். மாமனிதர் ஞானரதன் அவர்களின் சுவடியாக்கத்தில், பரதண்ணை அக்குறும்படத்தை இயக்கி, ஒலிப்பதிவும் செய்திருந்தார். கவிஞர் நாவண்ணன், சந்திரா, சிறீராம், அமரேசன் எனப் பலர் நடித்தது. இக்குறும்படம் ஒன்றே அவரின் திறமைக்கும் செயற்பாட்டிற்கும் சான்றுபகரப் போதுமானது.


1993 வரை பொறுப்பில் இருந்த இவரால் புடம்போடப்பட்ட பலபோராளிகளும் கலைஞர்களும் தாயகத்திலும், புலம்பெயர்நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் எல்லோரையும் வெளிப்படையாக எழுதிவிட இயலாதுள்ளது. ஒலிப்பதிவாளராக இருந்து மாவீரரான மேஜர். திருமாறன்|ஜீவா, பின்னாளில் புலிகளிகளின் குரலின் முதன்மைச்செய்தியாசிரியராக பெருவளர்ச்சி கண்ட தவபாலன், வீரவேங்கை கஸ்ரோ, கடற்புலிகளின் சிறப்புத் தாக்குதற் தளபதியான சிறீராம், கிருபா எனச் சிலரை எடுத்துக்காட்டலாம்.


இவர்களை உருவாக்கிய பரதண்ணை மாரடைப்பால் காலமானார் என்கின்ற துயரச்செய்தி மனதை வலிக்கச் செய்கிறது. மாரடைப்பு என்பது தடுக்கக்கூடிய ஒன்றுதான். ஏன் அது பரதண்ணையை இலக்கு வைத்தது என்பது புரியவில்லை. உங்களின் இழப்புச் செய்தி மனதை கனக்கச் செய்கிறது  நான் அறிந்த வகையில் அப்போது உங்களோடு தோள்நின்ற எல்லோருமே உங்கள் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆங்காங்கே தவித்துக் கிடக்கிறார்கள். 


எங்களது ஆளுமையின் பின்னால் உங்களின் கண்டிப்பும், நிர்வாகத்திறனும், வழிகாட்டலுமே உள்ளது.  இனிமேலும் நாங்கள் நடக்கும் பாதையெங்கும் உங்கள் அறிவுரைகள் ஒளிசிந்தி வழிகாட்டும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் பரதன் அண்ணை. உங்களை இழந்து துடித்துநிற்கும் வினோக்காவிற்கும், பிள்ளைகள், மருமக்கள்,சகோதரர் பாரதி, தங்கை குந்தவை மற்றும் உறவுகளுக்கும் என் அன்பையும் ஆறுதலையும் தெரிவித்துநிற்கிறேன்.

       - ஆதிலட்சுமி சிவகுமார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.