பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்!


கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலயத்தின் வரலாற்றையும் வழிபாட்டு மற்றும் பண்பாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க முற்படவேண்டாம் என ஆலயத்தின் சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மூவாயிரத்து 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை இந்த சிவாலயம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதுதொடர்பாக சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மைமிக்க உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த உருத்திரபுரீஸ்வரர் ஆலயமானது மூவாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதுடன், இந்த ஆலயமானது இலங்கையில் சதுர வடிவிலான ஆவுடையாரைக் கொண்ட ஒரேயொரு சிவ ஆலயமாகக் காணப்படுகிறது.

அந்தவகையில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒழுங்கே அமையப்பெற்றுள்ள புனிதமான இந்தச் சிவாலயத்தின் காணியில் ஆய்வினை மேற்கொள்ளத் தொல்பொருள் திணைக்களம் முற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே, சதுர சிவலிங்கத்தைக் கொண்ட ஆவுடையார், குறித்த கோயில் வளாகத்தில் இருக்கின்ற மண் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து எடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆலயத்தில் புத்தரின் எச்சங்கள் இருப்பதாகத் தெரிவித்து ஆய்வுசெய்ய முற்படுகின்றனர்.

இதேவேளை, சிவனுடைய அணிகலனாக இருக்கின்ற நாகங்கள் அந்த மண் மேட்டுக்குள்ளே இருக்கின்றன. அத்துடன், காலங்காலமாக வழிபாட்டு முறையொன்றை நாம் பின்பற்றிவரும் நிலையில் இவ்வாறு, ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது குறித்து மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள்.

எனவே, இந்த உருத்திரபுரத்தில் இருக்கின்ற எமது சிவாலயத்தையும் எங்கள் மரபுகள், பண்பாடுகளையும் கட்டிக்காக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

அத்துடன், இந்த சிவாயலத்தின் மண்மேடுப் பகுதியைத் தரிசிக்கும் பக்தர்கள், அதனை அண்ணாமலையாக நினைத்தே வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலயத்தின் வரலாற்றை மாற்றவோ, மக்களின் வழிபாட்டு முறைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தவோ வேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரசாங்கத்திடம் கோருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.