தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்!
இராஜதந்திர ரீதியாகப் பார்த்தால் புதிய ஜெனிவா தீர்மானம் அரசாங்கத்துக்கு ஒரு தோல்வி. ஆனால், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை அது கொண்டாடத் தக்க ஒரு வெற்றியல்ல.
இதுவரையிலுமான ஐ.நா. தீர்மானங்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுதும் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவைக்குள்ள வரையறைகளை விளங்கிக்கொள்ளும் போதும் குறிப்பாக, மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கை போன்றவற்றுக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் கவனிக்கும் போதும், அதைவிட குறிப்பாக கடந்த ஜனவரி 15ஆம் திகதி மூன்று கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து அனுப்பிய கடிதத்தில் கேட்கப்பட்ட விடயங்களுக்கும் தீர்மானத்துக்கும் இடையிலுள்ள இடைவெளிகளைக் கருதிக் கூறும்போதும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் இதுவொரு பெரிய திருப்பகரமான அடைவு அல்ல. மாறாக முன்னைய ஐ.நா. தீர்மானங்களின் தொடர்ச்சியே இது.
கடந்த ஜனவரி 15ஆம்திகதி மூன்று கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்து அனுப்பிய கூட்டுக்கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் கேட்கப்பட்டிருந்தது. பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்பதே அதுவாகும். ஆனால், அந்தக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்குள் தொடர்ந்தும் வைத்திருக்கும் ஒரு நிலைமையே புதிய தீர்மானத்தில் காணப்படுகிறது.
மேலும், அக்கூட்டுக் கடிதத்தில் மற்றொரு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது, சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு சுயாதீனப் பொறிமுறை பற்றியதே அதுவாகும். அப்படியொரு பொறிமுறையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அப்பொழுது ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்பும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும்தான் அந்தப் பொறிமுறையை வலியுறுத்தின.
குறிப்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிதான் அந்தப் பொறிமுறை அவசியம் என்று கூறியது. அவ்வாறு வாதிட்ட பொழுது அக்கட்சிகளின் மனதிலிருந்தது சிரியாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறைதான். அது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கீழ் உருவாக்கப்பட்டது. ஆனால், இம்முறை தீர்மானத்தின்படி அது மனித உரிமைகள் பேரவையின் கீழ் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆயின், மனித உரிமைகள் பேரவைக்குள்ள வரையறைகளுக்கு உட்பட்டுத்தான் இப்பொறிமுறை இயங்குமா?
எனவே, அதைக்கூட ஒரு முழுமையான அடைவு என்று கருத முடியாது. இப்படிப் பார்த்தால் தாயகத்திலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மனித உரிமைகள் பேரவை பொருத்தமான விதங்களில் பிரதிபலிப்பைக் காட்டவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், அந்தப் பொதுக்கோரிக்கையை ஜனவரி மாதம் முன்வைத்த கூட்டமைப்பு அடுத்தடுத்த மாதங்களில் உத்தேச தீர்மான வரைபுகள் வெளிவரத் தொடங்கியபோது அவை தொடர்பாக கருத்துகூற மறுத்ததோடு அதன்மூலமாகப் புதிய தீர்மானத்துக்கு ஆமோதிப்பையும் ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்கியது.
முடிவில் இறுதியாகப்பட்ட உத்தேச தீர்மான வரைபுக்கு ஆதரவைத் தெரிவித்தது மட்டுமல்லாது தீர்மானத்தை நிறைவேற்றுமாறு உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டது. அவ்வாறு, தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது அவசியம் என்றும் இலங்கை அரசாங்கத்தை ஜெனிவாவில் தோற்கடிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியது. ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தைத் தோற்கடிப்பது தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய வெற்றி என்றும் அக்கட்சி வியாக்கியானப்படுத்தியது.
ஆனால், புதிய தீர்மானம் அப்படி தமிழ் மக்களுக்கு திருப்திகரமான ஒரு வெற்றியாகவா வந்திருக்கிறது?
தனது ஜனவரி மாத நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பு தடம்புரண்டது. இதுவும் தாயகத்திலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பலவீனப்படுத்தியது. தனது கூட்டுப் பொறுப்பிலிருந்து கூட்டமைப்பு பின்வாங்கியமை தீர்மானத்தை வரைந்த மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக அமைந்ததா?
அதுமட்டுமல்ல, மற்றொரு பக்கமும் இங்கே பார்க்கப்பட வேண்டும், ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே கடந்த ஆண்டின் இறுதியளவில் பிரித்தானியாவை மையமாகக் கொண்ட ஒரு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு புதிய தீர்மான வரைபு குறித்து தமிழ் கட்சிகளின் கருத்தைப் பெற்று ஒரு பொது உடன்பாட்டை கொண்டுவரப் பாடுபட்டது. அதற்காக கட்சிகளைக் கூட்டாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாகவும் அவ்வமைப்பு அணுகியது. அதோடு தாயகத்தில் கருத்துருவாக்கப் பணிகளில் ஈடுபடும் தரப்புக்களையும் குடிமக்கள் சமூகங்களையும் அந்த அமைப்பு அணுகியது.
இதுவிடயத்தில் கூட்டமைப்புக்குள் சம்பந்தர், சுமந்திரன், சாணக்கியன் ஆகிய மூன்று நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் மேற்படி நகர்வுக்கு ஒத்துழைக்கவில்லை. ஏனைய, நாடாளுமன்றப் பிரதிநிதிகளை ஒப்பீட்டளவில் வெற்றிகரமாகக் கையாண்டு அவர்களின் ஒப்புதலை அந்த அமைப்பு பெற்றிருந்தது.
எனினும், உள்நாட்டில் குடிமக்கள் சமூகங்கள் இணைந்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்க முற்பட்டபோது கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பும் அம்முயற்சியில் ஒன்றிணைந்து ஜெனீவாவிற்கு ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்தன.
ஒருபுறம் ஒருதொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் அமைப்பொன்றுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு இன்னொருபுறம் அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சிக்கூட்டு குடிமக்கள் சமூகங்களோடு இணைந்து ஒரு பொது ஆவணத்தை அனுப்பியது என்பதும் இராஜதந்திர வட்டாரங்களில் தமிழ் தரப்பு குறித்து ஒரு மதிப்பான அபிப்பிராயத்தை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை.
உத்தேச தீர்மான வரைபுகள் கடந்த சில வாரங்களாக வெளியிடப்பட்ட பொழுது அதில் தங்களுடைய பங்களிப்பும் இருப்பதாக மேற்படி பிரித்தானியத் தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டிக்கொண்டார்கள். அதேபோல், பரிஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு தமிழ் அமைப்பின் பிரதிநிதியும் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் எப்படி எப்படியெல்லாம் இத்தீர்மானத்தை கொண்டுவருவதற்காக நாடுகளை நோக்கி லொபி செய்தார்கள் என்பதனைத் தெரியப்படுத்தி இருந்தார்.
இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு அடிப்படைக் கேள்வி எழுகிறது, ஜெனிவா தீர்மானத்தில் என்ன வரவேண்டும் என்பதை யார் தீர்மானித்தது? இது முதலாவது.
இரண்டாவது, பிரான்சை மையமாகக் கொண்ட ஒரு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு உட்பட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில உறுப்பு நாடுகளை நோக்கி லொபி செய்ததாக உரிமை கோரிவருகின்றன. அப்படியென்றால் இந்த அமைப்புக்கள் எந்த அடிப்படையில் ஜெனிவாவை நோக்கி அவ்வாறு உழைக்கின்றன? எந்த வெளியுறவுக் கொள்கையை முன்வைத்து வேலை செய்கின்றன?
தாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளும் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் உண்டு. பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் உண்டு. இந்த அமைப்புக்கள் அனைத்தினதும் கருத்தைத் திரட்டி அதோடு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் கருத்தையும் திரட்டி ஒரு பொதுக் கருத்தை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படாத வெற்றிடத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் தனித்தனியாக ஓட்டங்களை ஓடின. தாயகத்தில் ஒரு கட்சி தனி ஓட்டம் ஓடியது. ஏனைய இரண்டு கட்சிகளும் ஒன்றிணைய முடியாமல் தனித்தனி அறிக்கைகள் விட்டன.
இது எதைக் காட்டுகிறது? ஜெனிவாவைக் கையாள்வது பொறுத்து தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிதறிக் காணப்படுகிறார்கள். புதிய தீர்மானம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஒருமித்த குரலில் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நிலையில் தமிழ் தரப்பு இல்லை. யார் யாரோ தமிழ் மக்களைப் பொறுப்பேற்கிறார்கள். யார் யாரோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் காட்சியளிக்கிறார்கள். தமிழ் மக்களின் தலைவிதியை யார் யாரோ எழுதி ஒரு உலகப் பொது அரங்கில் தீர்மானமாக நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கி ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி ஒரு பொது முடிவை எடுத்து உலக சமூகத்தை, ஜெனிவாவைக் கையாள முடியாத அளவுக்கு தமிழ் தரப்பு சிதறிக் கிடக்கிறது. 12 ஆண்டுகளின் பின்னரும் புதிய ஜெனிவா தீர்மானமும் அதைத்தான் உணர்த்துகிறதா?
இதை இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது ஜெனிவா தீர்மானத்தை உருவாக்கும் முயற்சிகளில் தமிழ் தரப்பு முழு அளவுக்கு செல்வாக்கை செலுத்தலாம் என்ற கற்பனைகளை வளர்க்க முற்படவில்லை. ஜெனிவா தீர்மானம் எனப்படுவது நாடுகளுக்குரியது. கருக்குழு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று முடிவெடுப்பது அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கையின் பாற்பட்டது.
தமிழ் மக்களின் பெயரால் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், அங்கே புவிசார் அரசியலும் பூகோள அரசியலும்தான் இறுதி விளைவைத் தீர்மானிக்கின்றன. எனவே, இதுவிடயத்தில் உறுப்பு நாடுகள் எடுக்கும் முடிவு எனப்படுவது பெருமளவுக்கு அவற்றின் வெளியுறவுக் கொள்கையின்பாற்பட்டது. இந்த அடிப்படையில்தான் இந்தியாவும் ஜப்பானும் முடிவுகளை எடுத்தன.
இந்தியா இப்படி ஒரு முடிவைத்தான் எடுக்கும் என்பது ஏற்கனவே ஊகிக்கப்பட்டது. சீனாவை நோக்கிச் சாய்ந்திருக்கும் இலங்கை அரசாங்கத்தை விரோத நிலைக்குத் தள்ளினால் அது மேலும் சீனாவை நோக்கிப் போகக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உண்டு. அது அவர்களுடைய வெளியுறவுக் கொள்கை சார்ந்த நிலைப்பாடு.
ஆனால், தமிழ் மக்கள் இது விடயத்தில் வேறு விதமாகவே சிந்திக்கிறார்கள். 2009இற்குப் பின்னர் உலக அரங்கில் யார் யார் தமிழ் மக்களின் பக்கம் நிற்கிறார்கள் என்பதனைத் துலக்கமாக வெளிப்படுத்தக்கூடிய இப்போது இருக்கும் ஒரே அரங்கு ஜெனிவாதான். அங்கே எந்த நாடு தமிழ் மக்களோடு தனது உணர்வுத் தோழமையை வெளிப்படுத்துகிறது என்பதை தமிழ் மக்கள் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதற்கும் அப்பால் நாடுகளை நோக்கி வேலை செய்ய வேண்டும். அதற்கு ஒரு பொதுவான வெளியுறவுக் கட்டமைப்பு வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ தாயகத்தில் உள்ள ஒரு கட்சியோ தனியோட்டம் ஓடுவதைத் தடுப்பதற்கு அப்படியொரு பொதுக்கட்டமைப்பு அவசியம்.
அப்பொதுக் கட்டமைப்பே ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி அதன் பிரகாரம் உலக சமூகத்தை அணுக வேண்டும். தமிழ் மக்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருக்கும் எட்டாவது ஜெனிவாத் தீர்மானம் உணர்த்துவது அதைத்தான்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka#Colombo
கருத்துகள் இல்லை