இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்!

 


இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் ஒளடத உற்பத்திகள் , விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கையில் பொதுமக்களுக்கு பயன்படுத்த வெளிநாடுகளில் இருந்து கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இப்போது வரையில் நான்கு இலட்சம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அடுத்த கட்டத்தில் மேலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

விரைவில் அவற்றை நாட்டுக்கு கொண்டுவருவோம். சீனாவின் இரண்டு தடுப்பூசிகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.

ஆனால் இப்போது வரையில் சீனா எமக்கு கொடுத்துள்ள பரிசோதனை மாதிரிகள் போதுமானதாக இல்லை. எனவே அது குறித்தும் சீனாவுடன் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம்.

அதேபோல் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று அமைச்சரவை பத்திரங்களை நான் முன்வைத்துள்ளேன்.

அதில் பிரதான ஒன்றாக இந்தியாவில் இருந்து ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாது நேரடியாக பிரதான நிறுவனத்திடம் இருந்தே ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யும் அமைச்சரவை பத்திரமாகும். அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஆரம்பத்தில் நாம் ஒப்பந்தமொன்றை செய்துகொண்டு இலங்கைக்கு 18 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்களால் 10 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க முடியும் என அறிவித்தனர்.

எனவே ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வேறு நிறுவனங்களுடன் இது குறித்து கலந்துரையாடிப்பார்த்தோம்.

ஆனால் எமக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே இங்கிலாந்தில் உள்ள பிரதான நிறுவனத்திடம் கலந்துரையாடி பார்த்தோம். அவர்கள் எமக்கு கேட்கும் தொகையை தருவதாக கூறினர். எனவே இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுத்தோம்.

அதற்கமைய இனிமேல் நாம் ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை பிரித்தானியாவில் இருந்தே பெற்றுக்கொள்ளவுள்ளோம். எதிர்காலத்தில் ஏதேனும் நெருக்கடிகள் ஏற்பட்டால் மீண்டும் இந்தியாவிடம் பேசிப்பார்க்க முடியும்.

இப்போது எமக்கான தேவையை எங்கிருந்து பூர்த்தி செய்ய முடியும் என்பதையே நாம் கருத்தில் கொள்கிறோம். இந்தியாவில் இருந்து வரும் தடுபூசியாக இருந்தாலும் வேறு நாடுகளில் உற்பத்தி செய்யும் தடுப்பூசியாக இருந்தாலும் எந்த வேறுபாடும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.