அரசின் மீதான கூட்டமைப்பின் சாடல்!!

 


புலிகளை குறிப்பிட்டு இலங்கை அரசாங்கம் பிரச்சினையை தெளிவுபடுத்த முயற்சிக்கிறது என்றும் தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் புலிகள் உருவாகியிருக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் என்றும் அதன் பின்னரே விடுதலை புலிகள் உருவாகியது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


இலங்கை அரசின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போதைய நிலைமையில் எந்த ஒரு விடயத்திலும் அரசாங்கம் விடுதலைப் புலிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அத்தீர்மானத்தில் இருந்து வெளியேற முடியாது என சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையின் குறிப்பிட்ட முயற்சிகளின் தோல்விகளை சரியாக சுட்டிக்காட்டியுள்ள ஆணையாளரின் அறிக்கையை பலர் வரவேற்றுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.


உரிய நடைமுறைகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை விசாரிப்பது மனித உரிமைகள் பேரவையின் நியாயமான செயல்பாடாகும் என்றும் இது நாட்டின் இறையாண்மை அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாக அமையாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமையே 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்படுத்த முயற்சித்ததாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


ஆனால் யுத்தத்தின்போது வலிந்து காணாமல் போன பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குறிப்பாக இறுதியில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்க அவர் முன்வரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.


உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் இலங்கை எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும் நிறைவடைந்த விசாரணைகளின் அடிப்படையில் கூட நீதியை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் புதிய அரசியலமைப்பை இயற்றவும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் மற்றும் பிற விடயங்களில் முக்கியமான ஒருமித்த கருத்து எட்டப்பட்டவிருந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் எதிராக செயற்பட்டது என்றும் கூட்டமைப்பு சாட்டியுள்ளது.


இந்நிலையில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை 46/1 ஐ நிறைவேற்றுவதை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.