ஐ.நா. வின் தீர்மானம் அரசை அச்சம் கொள்ள வைத்துள்ளது!


 ஐ.நா. மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளமையே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்மக்கள், மீதும் புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் கடும்போக்கான, இனவாத செயற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதன்மூலம் ஐ.நா மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளதாகவே கருதமுடியும்.

எனினும் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு தீர்வு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையில்லை. எனினும் பலம்பொருந்திய உலகநாடுகள் தமிழர்கள் தொடர்பாக கரிசனையுடன் இருப்பது அதன்மூலம் வெளிப்படுகின்றது. 

நான் வெளிவிவகார அமைச்சருடன் தனிப்பட்டரீதியில் கலந்துரையாடியிருந்தேன்.  ஐ.நா பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மனதளவில் அரசுக்கு இணக்கம் ஏற்ப்பட்டிருக்கின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் இனவாத ரீதியான தோற்றப்பாட்டை ஏற்ப்படுத்தினாலும், மனித உரிமைகள் பேரவையை மீறி அவர்களால் செயற்ப்படமுடியாது. அந்த தீர்மானத்தை இங்கு நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர்கள் செயற்பட்டால் இலங்கை மேலும் பாதிப்பையே நோக்கும். அவர்களது கடும்போக்கு தமிழர்களிற்கு தீர்வை பெற்றுத்தரும். 

குறிப்பாக இந்த ஆட்சியை அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே அவர்களின் மனங்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்காகவே வடகிழக்கில்  தமிழ்மக்கள் சார்ந்த விடயங்களை கையாள்வதுடன், முஸ்லீம் மக்களின் சட்டரீதியான விடயங்களை முன்னிறுத்துவதனூடாக, அந்தமக்களை திருப்திப்படுத்தி வருகின்றார்கள். வெசாக் தினத்தை நயினாதீவில் செய்வதற்கும் அதுவேகாரணம். 

தொல்பொருள் திணைக்களத்தின் ஆய்வுகளை நிறுத்தமுடியாது என்று தொடர்புடைய அமைச்சர் என்னிடம் கூறியிருந்தார்.

எனினும் இது தொடர்பாக யாழ்பல்கலைகழக தொல்பொருள்துறை சார்ந்த விரிவுரையாளர்களையும் அழைத்து எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் ஒரு கூட்டத்தினை நடாத்தி கலந்துரையாடுவதாக சொல்லியிருக்கின்றார். 

இதேவேளை அரசுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எமது கட்சியின் ஊடகபேச்சாளர் என்று யாரும் இல்லை. அந்த பதவிகட்சியினால் உத்தியோக பூர்வமாக இன்னும் நியமிக்கப்படவில்லை. 

அத்துடன்  தந்தை செல்வா காலம் முதல் அனைத்து அரசுடனும் பேச்சுவார்த்தை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இலங்கை அரசால் தமிழர்களிற்கு தீர்வு வழங்குவதற்கான சாத்தியம் இல்லை. சர்வதேச நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் முழுமனதுடன் செயற்பட்டால் எமக்கு சாதகமாக இருக்கும்.

கடந்த வருடங்களில் இடம்பெற்ற தீர்மானங்களைவிட கடைசிதீர்மானத்தில் இந்தியாவினுடைய செயற்பாடு, தமிழ்மக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.

கடந்த முறை அரசுக்கு சார்பானவகையில் பலநாடுகளுடன் இலங்கையை இணைக்கும் செயற்பாட்டினையே இந்தியா முன்னெடுத்திருந்தது.

இம்முறை  வாக்களிப்பில் நடுநிலமை வகித்திருந்தாலும் தெளிவானவிடயங்களை ஐ.நாவில் பதிவுசெய்திருக்கின்றது.

தமிழர்களிற்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அந்த இனப்பிரச்சனைதீர்க்கப்பட வேண்டும்.  என்று ஒரு ஆசியபிராந்தியத்தின் முக்கியமானநாடு, மனித உரிமைப்பேரவையில் தனது பதிவினை வைத்திருப்பது எதிர்காலத்தில் தமிழர்களிற்கு சாதகமாகவே இருக்கும்.என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.