அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா!

 வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க தலைவராக விளங்கும் அவரது சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நன்றாக தூங்க வேண்டுமென விரும்பினால் தொடக்கத்திலிருந்தே தங்களை சீண்டாமல் இருப்பது நல்லது என கிம் யோ ஜாங் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் சியோலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அவரது இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

ரோடோங் சின்முன் செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கிம் யோ ஜாங் கூறியிருப்பதாவது, “அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு ஒரு அறிவுரை. எங்கள் நிலத்தில் துப்பாக்கியின் வாசனையை கடல் முழுவதும் இருந்து பரப்ப அமெரிக்கா போராடுகிறது.

வரவிருக்கும் நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா நிம்மதியாக தூங்க விரும்பினால், அதன் முதல் படியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது” என கூறினார்.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு தனது நாட்டின் எதிர்ப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது வட கொரியா மீதான படையெடுப்பிற்கான தயாரிப்புகள் என்று அவர் விபரித்தார்.

முன்னதாக, வடகொரியாவுடன் இராஜதந்திர தொடர்பு கொள்ள பல வாரங்களாக முயற்சித்து வருவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களில் இருநாடுகளும் தொடர்ந்து முரண்பட்டுவருகின்றன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.