பிரபாகரனியம்!!

 


உலகின் கொம்னியூச நாடுகள் அனைத்தும் இன்று ஜெனிவாவில் இன அழிப்பு(அரசு)க்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன.

இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. தமிழின அழிப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டில்தான் இருந்தார்கள்.
இந்தக் கோட்பாட்டு வீழ்ச்சிதான் பேரழிவின்/ பெரும் அவலத்தின் மத்தியிலும் நந்திக்கடலில் வைத்து 'பிரபாகரனியம்' என்ற நவீன விடுதலைக் கோட்பாட்டிற்கு வழி சமைத்தது.
'நந்திக்கடல்' போராடும் இனங்கள் தொடர்பான உலகளாவிய தத்துவங்களை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது.
மார்க்சிசம், கொம்னியூசம் தொடங்கி மக்களுக்கான கருத்தியல் அனைத்தையும் இன அழிப்புப் பின்புலத்தில் வைத்து கேள்விக்குட்படுத்துகிறது.
உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச உறவுகள் என்ற நவீன அரசுகளின் பூகோள அரசியலை ஒரு புறமாகவும் போராடி விடுதலையடைந்த நாடுகளின் கருத்தாங்கங்களையும் அதன்வழி உருவான தத்துவங்களையும் மறுபுறமாகவும் வைத்து ‘நந்திக்கடல்’ பல கேள்விகளை உற்பத்தி செய்வதுடன் இவை தொடர்பான ஒரு மறு விசாரணையையும் கோருகிறது.
இதுவே ‘பிரபாகரனியம்’ என்னும் நவீன விடுதலைக் கோட்பாடாக நம் முன் விரிகிறது.
மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக இருந்தால் அது “பயங்கரவாதம்”. மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடினால் அது “விடுதலைப்போராட்டம்”.
மண்டேலா “பயங்கரவாதியாக” இருந்து “போராளியான” கதை இப்படித்தான் உருவாகியது.
பிரபாகரன் ஏன் இறுதிவரை “பயங்கரவாதி” யாகவே இருந்தார் என்றால், ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேற்குலக உலக ஒழுங்கையே மாற்ற முற்பட்டார். அவர் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடவில்லை.
கஸ்ரோவும் மேற்குலக நிகழ்ச்சி நிரலோடு ஒத்தோடாமல் ஒரு சர்வதேசிய கருத்தியலை உருவாக்கினார்.
ஆனால். கஸ்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற உள் மடிந்த கருத்தியல் 'சிறிய அரசுகளை காப்பாற்றுகிறோம்' என்ற போர்வையில் போராடும் இனங்களுக்கு எதிரான ஒரு கருத்தியலாக உருத்திரண்டு அரச பயங்கரவாதத்திற்கு ஊன்று கோலாக மாறிய அவலம் நடந்தேறியது. தமிழீழம் அதற்கான சமகால சாட்சி.
இங்கேதான் 'நந்திக்கடல்' மிக முக்கியமான புள்ளியை வந்தடைகிறது.
இதன் வழி மண்டேலாவின், கஸ்ரோவின் (இவர்கள் மட்டுமல்ல போராடும் இனங்கள் தொடர்பான பல உலகளாவிய தத்துவங்கள்) கொள்கை – கோட்பாட்டு சரிவு நந்திக்கடலில் வைத்து ‘பிரபாகரனியம்’ எனும் ஒரு நவீன விடுதலைக் கோட்பாட்டிற்கான வெளியை திறந்து வைக்கிறது.
இந்த அடிப்படையில்தான் மண்டேலா, பிடல்கஸ்ரோ, கோசிமின், யாசீர் அரபாத் போன்ற புரட்சியாளர்கள் வரிசையிலிருந்து விலகி பிரபாகரன் தனித்துவமானவராகிறார்.
எனவே நாம் புலம்பத் தேவையில்லை.
பிரபாகரனியத்தைக் கற்போம். அதைப் பின்பற்றி விடுதலையை வென்றெடுப்போம்.

பரணி கிருஸ்ணரஜனி


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.