உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் குருணல் பாண்டியா!


 புனேயில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் குருணல் பாண்டியா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

30 வயதான குருணல் பாண்டியா நேற்றைய ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 

அறிமுகத்திற்குரிய தொப்பியை அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியா வழங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.

அதன் பிறகு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவர் 26 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். 

ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் இவர் தான். இதற்கு முன்பு 1990 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அறிமுக வீரர் ஜோன் மொரிஸ் 35 பந்துகளில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது. 

அந்த சாதனையை குருணல் பாண்டியா நேற்று முறியடித்தார்.

இந்த இன்னிங்ஸில் மொத்மாக 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இன்னிங்ஸ் முடிந்ததும் ஒளிபரப்பு நிறுவனம் அவரிடம் பேட்டி கண்டது. 

அந்த சமயமும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அவரது தந்தை கடந்த ஜனவரி மாதம் மறைந்தார். அந்த சோகத்தை நினைத்து உருகிய குருணல் பாண்டியாவுக்கு பேச முடியாமல் நாக்கு தழுதழுத்தது. 

அரைசதத்தை மறைந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியபடி கண்ணீர் சிந்தினார். பிறகு அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியா, அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறி தேற்றினார்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.