சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் நிறுத்தம்!


 மஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோக்கத்தர் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார். 

அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் , தண்டனை சட்டக்கோவையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நபரொருவரை தாக்கும் காணொளி இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய மஹரகம பொலிஸ் பிரிவில் ஹைலெவல் வீதி - பன்னிபிட்டி பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால்  லொறி சாரதியொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான லொறி சாரதி மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மைத்திரிபாலவின் மீது மோதிச் சென்றுள்ளார்.

இதனால் காயமடைந்த அவர் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் பின்னரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சாரதியை தாக்கியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் சாரதி தவறிழைத்திருந்தாலும் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றமையை இலங்கை பொலிஸ் அனுமதிக்காது.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது செயற்பட வேண்டிய சட்டரீதியான வழிமுறைகள் உள்ளன. அவற்றை மீறி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தவறான செயற்பாடாகும்.

எனவே சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் , தண்டனை சட்டக்கோவையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.