கல்வியமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்!

 அதிபர்கள் சேவை மற்றும் கல்வி நிர்வாக சேவையில் உள்ள வெற்றிடங்களை சேவை யாப்பிற்கு அப்பால் நிரப்ப அமைச்சரவை தீர்மானித்துள்ள விடயத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒரு வாரத்திற்குள் சாதகமான பதில் கிடைக்காவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு எழுதிய கடிதத்தில்

கல்வி பாதுகாப்பிற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக சேவை யாப்பிற்கு அமைய போட்டிப் பரீட்சைகளை நடத்துவதற்கும், அந்த புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கும் ஒரு வருடத்திற்கும் மேலாகும் என சுட்டிக்காட்டியுள்ள கல்வி அமைச்சர், இலங்கை அதிபர் சேவையில் காணப்படும் 4,600 வெற்றிடங்களை சட்டவிரோதமாக நிரப்ப அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு, இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு சேவை யாப்பிற்கு அப்பால் சுமார் 300 பேரை சட்டவிரோதமாக நியமிக்க அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கும், கல்வி பாதுகாப்புக்கான தொழிற்சங்க கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை அதிபர் சேவை உள்ளிட்ட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளிலும் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு, சரியான நடைமுறைகள் ஊடாக சேவை யாப்பிற்கு அமைய ஆட்சேர்ப்பு செய்யும் வாய்ப்பு இருந்தபோதிலும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கல்வி தொடர்பான சேவைகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதன் மூலம்

இந்த சேவைகளுக்கு முறையாக உள்நுழைய தகுதியுள்ள திறமையான அதிகாரிகளுக்கும், முழு கல்வி முறைக்கும் பெரும் அநீதி இழைப்பதாக அமையுமென கல்வி பாதுகாப்புக்கான தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.

கல்வி நிர்வாக சேவை மற்றும் அதிபர்களின் சேவைக்கு சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனவும், சேவை யாப்பிற்கு அமைய கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பதை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளது.

கல்வியைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த விடயம் குறித்து விவாதிக்க, கல்வி அமைச்சிடம் உடனடி சந்தர்ப்பத்தை கோரியுள்ளதோடு, 2021 மார்ச் 17ற்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்காவிடின், மீள் அறிவிப்பு எதுவும் இன்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்துள்ளது.

கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக, இலங்கை கல்வி நிர்வாக சேவைகள் தொழிற்சங்கம், இலங்கை கல்வி நிர்வாக சேவைகள் தொழிற்சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், ஐக்கிய இலங்கை ஆசிரியர் சங்கம், ஐக்கிய இலங்கை ஆசிரியர் கல்வியாளர்கள் சேவை சங்கம் , இலங்கை அதிபர்கள் சேவை சங்கம், இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம், சுயாதீன கல்வி ஊழியர் சங்கம், இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம், சுதந்திர இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கம், ஐக்கிய இலங்கை அதிபர்கள் சங்கம், இலங்கை அதிபர்கள் சங்கம், இலங்கை அரச ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை நிபுணத்துவ அதிபர்கள் சங்கம் ஆகியன இதில் கையெழுத்திட்டுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.