யாழில் சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம்!


வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், போக்குவரத்தைச் சீர்செய்வதற்காக மாம்பழம் சந்தி, கச்சேரி – நல்லூர் வீதியென மாற்று வழிகளில் பொலிஸார் வாகனங்களை அனுப்பிவைத்தனர்.

தமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களது போராட்டம் உணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடைந்து இன்றைய தினம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று முற்பகல் அவர்கள் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

2019ஆம் ஆண்டு, அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் 454 பேரே, தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.