சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்ப் பெண்கள் அமைப்பு யேர்மனி!

 உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது.


சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கும் ஆண்களைப் போல சம ஊதியம், எட்டுமணி நேர வேலை, வேலைத்தள வசதிகள் என்ற கோரிக்கைகளுக்காகப் பெண்கள் பேரணி நடத்தித் தம் கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு முன்னர் 18ஆம் நூற்றாண்டிலேயே பெண்விடுதலைச் சிந்தனைகள் எழுச்சி பெற்றிருந்தாலும் 19ஆம் நூற்றாண்டில் தான் பெண்ணியம் தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. மேலைத்தேசம் ,கீழைத்தேசம் எங்கும் பெண்ணொடுக்குமுறை இருந்த காலம் கடந்து இன்று உலகின் மூலைமுடக்கெங்கும் பெண்கள் தம் உரிமைகளுக்குப் போராடும் நிலையில் வெற்றி கண்டு வருகின்றார்கள். இனம், மதம், மொழி, கலாசாரம், சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் பலதரப்பட்டவர்களாய் இருந்த போதிலும் பெண்கள் எனும் அடையாளத்தால் ஒன்றுபட்டு நிற்கும் பெண்ணினம் சமூகநீதி, சமவுரிமை, சமத்துவம் போன்றவற்றிற்காக ஒன்றுதிரண்டு அகிலமெங்கும் குரல் கொடுக்கும் நாள் இப் பெண்கள்தினம்.


அதனால்தான் தமிழீழ விடுதலையில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் உயர்ந்த அங்கீகாரத்தையும், மதிப்பையும் பெற்றிருந்தது, மட்டுமல்லாமல் தேசியத் தலைவர் அவர்களது உயரிய சிந்தனையின் வெளிப்பாடாக தமிழீழப் பெண்கள் சமர்களம் வென்றவர்களாக விடுதலைப் போரின் ஓர் ஆக்க சக்திகளாக உருவெடுத்திருந்தார்கள்.


ஆனால் உலக நாடுகளின் துணையோடு சிறீலங்கா இனவெறி அரசால் ஏவிவிடப்பட்ட அரச பயங்கரவாதம் எம் இனத்தின் மீது பாரிய இன அழிப்பைச் செய்தது மட்டுமன்றி எம்மினப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகள், கொலைகள், விதவைக் கோலங்கள், உறவுகளைத் தேடியலையும் அவலங்கள் போன்ற மானுடமே வெட்கித் தலைகுனியக் கூடிய காட்டுமிராண்டித்தனங்களை இன்றுவரை செய்து வருகின்றது.


ஐ.நா உட்பட்ட உதவி நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதும், அதற்கு இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகள் உதவியளித்ததும் இப்போது வெளிவந்தவண்ணம் உள்ளது. அது மட்டுமல்லாமல் சனல் 4 தொலைக்காட்சியூடாக பெண்கள் மீதான வன்புணர்வுகள், பெண்கள் சிறுவர்கள் உட்பட சரணடைந்த மக்கள் மீதான கொலைகள் கற்பிணிப்பெண்களை கொலைசெய்தல் கூட்டுப்பாலியல் வன்புணர்வுகள் போன்றவை ஆவணங்களாக்கப்பட்டு ஐ.நா சபையிலும் உலக அரங்கிலும் வெளிப்படுத்தப்பட்டதோடு சிறீலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.


போரின் பின்பான காலங்களில் தமிழீழத்தில் சிறீலங்கா இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும், உளவியல்பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் அலைகின்ற நிலைமையே உள்ளது. இவ் அவலங்களுக்கெதிராக குரல் கொடுக்க இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் மக்களால் முடிவதில்லை. தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கான உதவிகளை முன்னெடுப்பதும் எமது தலையாய கடமையாக உள்ளது.


கடந்த வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசுமீது ஒருவித மென்போக்கே காட்டப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் எத்தகைய அறிவுறுத்தல்களையும் செவிசாய்க்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பது புரிந்தபோதும் கூட ஐநா சபை காத்திரமான எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இன்றைய சூழலில் தமிழ்மக்களாகிய எமக்கு இருக்கக்கூடிய ஒரேவழி ஒன்றுபட்டு சர்வதேசத்தை நோக்கி தமிழின அழிப்புக்கெதிரான நீதிகோருதல் ஒன்றேயாகும்.


புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்ப்பெண்கள் விழிப்புணர்வும்,அரசியல் அறிவும் கொண்டவர்களாக மாறவேண்டிய சூழல் அவசியமானதாகிறது. நாம் வாழும் நாடுகளில் தமிழ்ப் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுவதையும், அதற்கெதிராக ஒன்றுபட்டு போராடவேண்டிய தேவையும் உணரப்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவும், தமிழின அழிப்புக்கு காரணமான சிறீலங்கா அரசுமீது ஒர் சர்வதேச விசாரணையை ஏற்படுத்தி தண்டணை வழங்கவேண்டும் என்றும் தாயகத்தில் வாழும் பெண்கள் சிறுவர் கொலைகளை நாங்கள் வெளியுலகுக்கு ஆதாரத்தடன் விளக்கிக்கூறுவதற்காக சிங்கள அரசின் பெண்ணியக்கொலை அரசியலுக்கு எதிராக அனைத்துலக பெண்கள் தினமான 08.03.2021 தொடங்கி தமிழீழப் பெண்கள் தினமான 10.10.2021 வரையான காலத்தில் ஒரு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரித்து அப்பிரதியை மூன்றுமொழிகளிலும் மொழிபெயர்ப்பதன் மூலம் பன்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து இதற்கான சர்வதேச அங்கீகாரத்தை பெறுவதே எமது நோக்கமாகும்.


இது எமது கடமையாகின்றது உலகம் புரிந்துகொள்ளும் வரையும் நாம் முயற்சி செய்வது அவசியமானது முதற்கட்டமாக இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட 100 பெண்களை தெரிவு செய்து அவர்களின் நிழற்படங்களுடன் அவர்கள் பற்றிய சகலவிபரங்களையும் துல்லியமாக ஆராய்ந்து அவர்கள் இறந்த காரணத்தையும் தேடிப்பதிவு செய்துள்ளோம். இன்றுவரை இப்பெண்களின் கொலைகளை யாரும் கண்டு கொள்ளவில்லை அவர்கள் பற்றிப்பேசப்படவும் இல்லை மிகுந்த சிரமத்தின் மத்தியில் எம் தேடல் இருந்நது. நாங்களும் இவர்களை ஆவணப்படுத்தாவிட்டால் உலகத்துக்கு புரியுதோ இல்லையோ எம் இனமே இவர்களை மறந்துவிடும். இத்துர்ப்பாக்கிய நிலை எந்தப்பெண்களுக்கும் பெண்இனத்துக்கும் வரவே கூடாது.


பெண்ணியக்கொலையை இனப்படுகொலைக்கு ஒத்த குற்றமாக அங்கிகரிக்கும் செயல்முறையை தொடங்குமாறு மனிதஉரிமை அமைப்புக்களுக்கு நாம் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் முன்வைக்க உள்ளோம்.


உலகபெண்கள் தினம் என்று பெண்களை உயர்வுபடுத்தி கொண்டாடும் மக்கள் அடக்கி ஒடுக்கப்படும் பெண்களையும் அவர்தம் சமுகங்களையும்;ஏன் கண்டுகொள்வதில்லை சமூகத்தின் உயிர்நாடியான பெண்களை வதைப்பது குற்றங்களில் உச்சமாகும். இவர்களை மன உடல்ரீதியாக துன்புறுத்துவது திட்டமிடப்பட்ட வன்முறையாகும். இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட பெண்களின் விபரங்களை சேகரிக்கும் போது மிகுந்த


வேதனையடைந்தோம். கொலைசெய்யப்பட்டவர்கள் சமூகத்தில் நல்லதாயாக அறிவூட்டும் ஆசானாக நோய்தீ;ர்க்கும் வைத்தியராக அரசியல் அறிவுபெற்றவராக இருந்திருக்கிறார்கள். பெண்கள் இல்லையேல் இவ்உலகம் நிலைக்காது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இக்கருத்தை நிறுவுவதற்காக முதற்கட்டமாக நூறு பெண்களை தெரிவுசெய்தோம் தொடர்ந்தும் எம்முயற்சியில் மேலும் பல பெண்களின் கண்ணீர்க்கதைகள் உலகுக்கு வெளிப்படுத்துவோம்.

அன்பான உறவுகளே! தமிழ்ப் பெண்களாகிய நாங்கள் உலகப் பெண்ணினத்துக்கு ஓர் அரிய செய்தியை கூறுவோம். தமிழீழப்பெண்கள் எத்தகைய அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் என்பதையும், ஓர் அறிவார்ந்த சமூகம் என்பதையும், உலகில் எங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றாலும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் என்பதையும் உணர்த்துவோம். தமிழ்ப் பெண்களாகிய எமது நிறைவான உரிமைகள் தமிழீழ விடுதலையுடன் கூடியதாகவே இருக்கின்றது என்ற உண்மையை உலகிற்கும், மானுடத்தை நேசிக்கும் அமைப்புகளுக்கும் புரியவைப்போம்.


எம் முயற்சியில் முதற்கட்டமாக நூறு பெண்களை தெரிவுசெய்துள்ளோம் தொடர்ந்தும் எம்முயற்சியில் மேலும் எங்களின் கண்ணிர்க்கதைகள் உலகுகவெளிப்படுத்துவோம். இதற்காக உங்களின் கையெழுத்துக்களை கேட்கின்றோம்.எங்களின் இணையதளத்தைப் பார்வையிடுங்கள். உங்களின் ஒவ்வொரு கையெழுத்தும் எங்களின் கண்ணீரை துடைப்பதற்கு ஆதாரமாக அமையும் என்பதை தெரிவிக்கின்றோம்.


 


www.tfogermany.com

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.