வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு!


 வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள்‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு


தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் கப்பல்வணிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள், 27.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


‘‘செவன் பிங்கர்’’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது எம்.வி. சோழன் வணிகக்கப்பலின் முதன்மை அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்து, போராட்டத்தின் ஆரம்பகால கட்டுமானத்திற்கு கடல்சார் செயற்பாட்டின் வரலாற்றுச்சாட்சியாக வாழ்ந்தவர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாகச் சர்வதேசரீதியாகக் கப்பல்வணிகத்தைக் கட்டியெழுப்பிப், பலபோராளிகளைக் கப்பல் கட்டளையதிகாரிகளாக வளர்த்தெடுத்த பெரும் ஆளுமைமிக்க அதிகாரியாவார்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழத் தேசியத்தலைவரையும் ஆழமாக நேசித்தும் மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சிலிருத்தியும் மிக ஆபத்தான கடல் பயணங்கள் ஊடாக, எமது போராட்டத்தையும் தேசத்தையும் பலப்படுத்தவும் போராளிகளைப் பாதுகாத்துக்கொள்ளவும் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட சிறந்த கப்பலோட்டியாவார்.


தமிழீழ விடுதலைப்போராட்டத்தில், இறுதியாக எம்.வி.அகத் கப்பலின் கட்டளையதிகாரியாகச் செயற்பட்டு பின் சிறைவாழ்க்கையை அனுபவித்த ஜெயச்சந்திரன் அவர்கள், தமிழினத்திற்கு ஆற்றிய அளவற்றபணி வரலாறாகி வழிகாட்டியாகத் திகழ்கின்றது. இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்காற்றிய பணிக்காகவும் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.