வல்லினம் 15 - கோபிகை!!


திடுக்கிட்டுக் கண்விழித்த கடல் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி மூன்று எனக்காட்டியது. ஏனோ இன்று ஒரு மணித்தியாலம் முன்னதாகவே விழிப்பு வந்துவிட்டது அவனுக்கு, அம்மாவின் கனவு அவனை எழுப்பிவிட்டதை உணர்ந்தவனாய் எழுந்து அமர்ந்து கொண்டான். நீண்ட நாட்களின் பின்னர் அம்மாவே கனவில் வந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்தக் கனவை நினைத்துப் பார்த்தான், 

மெல்லிய புகைமூட்டத்தில் நீண்ட நேரமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த அம்மா, "டேய், கடல், இனிமே உனக்கு நல்ல காலம்தான்டா, நீ கவலைப்படாம இருக்கவேணும், சரியாடா" என்றதோடு அவனைப்பார்த்து அழுதபடி மெல்ல மெல்ல மறையவும் அவன் விழித்துவிட்டான், கனவும் கலைந்துபோயிற்று. 

ஏனோ, அவனுக்கு அந்த நொடிமுதல் ஒரு புதுவித உற்சாகம் தொற்றிக்கொண்டது, இதுநாள் வரை வாழ்க்கையைப் பற்றிய எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவன், இனி இப்படி எல்லாத்தையும் பறிகொடுத்த மாதிரி யோசிக்கக்கூடாது என நினைத்தான்.  எப்படியும் வெளியே சென்றுவிடலாம் என மனதில் ஒருவித நேர்ச்சிந்தனையை நினைத்தவன், மெல்ல எழுந்து அமர்ந்துகொண்டான். 

இரவு தூங்குவதற்கு முன்னர் எடுத்து வாசித்துவிட்டு வைத்த கடிதம் தலைமாட்டில் அப்படியே இருந்தது. இது அவனுக்கு வரும் மூன்றாவது கடிதம், இப்போதெல்லாம் அந்தக் கடிதம் அவனுக்குள் விதைக்கும் மகிழ்வே அலாதியானதுதான்......

மீண்டும் அதை வாசித்தான். 

அன்புள்ள வித்தகன், 

உங்கள் கவிதைகளில் ஒருவித உயிர்ப்பு இழையோடுகிறது. அந்த உயிர்ப்பு, ஒரு ஆழமான வலியின் சாயலாகவே உள்ளது. உங்கள் வாழ்க்கையில் வலிகள் நிறைய இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது, அந்த வலிகளை நீங்கள் உங்கள் கவிதைகளில் கொட்டித் தீர்ப்பதாகவே எண்ணுகிறேன், உங்கள் வீட்டினர் எங்கே உள்ளனர், உங்களைப் பற்றி அறிய விருப்பம், விரும்பினால் அறியத் தாருங்கள், என எழுதி ஒரு முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மீண்டும் மீண்டும் வாசித்த கடலுக்கு ஒரு உண்மை மெல்ல புரிந்தது, அவன் தன் பணிக்காக கற்றுக் கொண்ட விடயங்கள் ஏராளம், அந்த வித்தைகள், அவனுக்குள் கலந்தவையாச்சே, அவனால் சாதாரணமான இந்த விடயத்தை கண்டறியமுடியாதா என்ன?

நிச்சயமாக அந்த கை எழுத்து ஒரு ஆணினுடையதாக இருக்கமுடியாது. ஒருவேளை தங்கை, தோழி என்று யாராவது எழுதிக் கொடுத்திருக்கலாமேயொழிய இது ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என்பது உறுதி என நினைத்தவனுக்குள் ஏனோ ஒருவித  சிலிர்ப்பு ஊடுருவியது. 

இன்றுவரை தான் என்ற தனித்துவத்தில் இருந்து மாறாத கடலின் மனதில், இந்த எழுத்துக்கள் சலனத்தை ஏற்படுத்திவிடுமா, இதயம் சில்லிட்டது அவனுக்கு, நிமிர்ந்து அமர்ந்துகொண்டான். 

அம்மாதான் கனவில் சொன்னார்களே, அப்படியென்றால்......கற்பனைக்குதிரை பலமாகப் பாயமுற்பட்டது, தட்டி அடக்கினான் கடல், 

காதல் என்ற இனிமையான அனுபவம் அவனுக்கு இதுவரை ஏற்பட்டதே இல்லை. கடந்தகால வாழ்க்கையில் பல பெண்களைக் கடந்துவிட்டான் என்றாலும் அவன் மனதில் அமர்ந்து ஆட்சி நடத்தும் அருகதையை அவன் யாருக்கும் கொடுக்கவில்லை. அப்போதெல்லாம் அவனுடைய இலட்சியப்பயணம் வேறு ஒரு பாதையில்தான் இருந்தது. இப்போது புதுவிதமாய் சலனம்....

நெருப்பாற்றை நீந்திக்கடந்தவனுக்குள் நிலா ஒன்றின் உலா......யார் இவள்?

ஏன் என்னைப்பற்றி இப்படி ஆராயவேண்டும்? 

கேள்விகள் அவனுக்குள் முண்டியடித்தது. பெருமூச்சொன்றை வெளிவிட்டான். 

அருகில் படுத்திருந்த சீராளன், புரண்டு படுத்தபோது கடல் எழுந்து அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டான். 

"என்ன கடல் அண்ணா, என் எழும்பி இருக்கிறீங்கள், நித்திரை வரேல்லயோ" 

"இல்லையடா. இப்பதான் எழும்பின்னான், திடீரெண்டு அம்மாவைக் கனவு கண்டிட்டன், அதுதான் எழும்பீட்டனடா, எனக்கு நித்திரை வரேல்ல, நீ படு,"

"இல்லை அண்ணா. இனி என்னத்தை நித்திரை கொள்ளுறது., இது என்ன அண்ணா, நேற்று வந்த கடிதத்தை கையில வைச்சிருக்கிறியள், இன்னும் வாசிச்சு முடியேல்லயே" 

சங்கடமாய் சீராளனைப் பார்த்த கடல், "அதில்லையடா, சும்மா எடுத்து வாச்சிச்சன்," என்று மென்று விழுங்கினான். 

"அண்ணா.....நீங்கள் என்னவோ காதல் கடிதம் மாதிரி, வெட்கப்படுறியள், அது ஒரு ஆம்பிளைப் பெடியன் எழுதினதாவுமிருக்கலாம்,"

"டேய்....சீராளன், எனக்கெண்டா இது ஒரு பொம்பிழைப்பிள்ளை எழுதின மாதிரித்தான் இருக்கு, நிச்சயமா இந்த கையெழுத்து பொம்பிழைப்பிள்ளையின்ர தான்"

"என்ன அண்ணா சொல்லுறியள்?"

"உண்மைதான்டா, என்ர மனம் அப்பிடித்தான் நினைக்கிது"

"சரி பொறுத்துப் பாப்பம் அண்ணா, விடுங்கோ...... அது சரி அதுக்கேன் நீங்கள் பொம்பிளைப்பிள்ளை மாதிரி நாணத்தில சிவக்கிறீங்கள்"

"உதை வாங்கப்போறாய், போடா....."

சிரிப்போடு சொன்ன கடலை ஆச்சரியமாய் பார்த்தான் சீராளன். இதுவரை கடலின் முகத்தில் காணாத மகிழ்ச்சி இன்று தென்பட்டது. இது நிலைக்கவேண்டும் என மனதார நினைத்தான்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.