வலி சுமக்கும் வனிதையர் - மகளிர்தின சிறப்பு கட்டுரை!!

 


இன்று உலக மகளிர்தினம். அனைத்து மகளிருக்கும் தமிழ்அருள் இணையத்தின் மகளிர்தின நல்வாழ்த்துகள்......

அறிவியல் ரீதியான மனதின் நிலைப்பாடே உளவியல் என வரையறுக்கப்படுகிறது. உளவியல் தன்மையை நோக்கும் போது ஆணும் பெண்ணும் வேறுபட்ட விதத்தையே கொண்டிருக்கின்றனர். உலகம் என்ற விரிந்த கூரையின் கீழ் அனைவரும் சமம் என்ற கருத்து நிலவினாலும் உளவியல் பாதிப்பை அதிகம் எதிர்நோக்குவது பெண்களாகவே உள்ளனர். 


உளவியல் ரீதியான பிரித்துப் பார்ப்பென்பது பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது. ஆண் குழந்தைகள் விளையாட விளையாட்டு விமானம் வாங்கி கொடுக்கும் அம்மா, பெண் குழந்தை விளையாட பாவையை வாங்கிக் கொடுப்பது இன்றுவரை உள்ள ஒன்று தான். குழந்தையின் உற்பவிப்பிலேயே ஆண்குழந்தை என்றதும் அதீத ஆனந்தம் கொள்வதும், பெண் குழந்தை என்பதில் களிப்பில் துளி குறைவாக இருப்பதும் என எம் மனவியலை இல்லையென்று சொல்லிவிட முடியாது. 


ஆண் குழந்தையின் ஆடைகளை பெண் குழந்தைக்கு அணிவித்து அழகு பார்க்கும் நாம், பெண் குழந்தைகளின் ஆடைகளை தைரியமாய் ஆண் குழந்தைகளுக்கு அணிவித்து அழகு பார்ப்பதில்லை. அதை கேலிக்குரியதாகவே பார்க்கின்றோம். அதிலும் ஆண்களின் மனநிலையைச் சொல்லவே வேண்டாம். 

ஒரு பெண் தன் வாழ்நாளில் கடைசிவரையும் உளவியல் சிக்கலுக்கு முகம் கொடுத்துக்கொண்டே வாழவேண்டியுள்ளது. சமுதாயம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதே. இருவரும் இணைந்து உருவாக்கவேண்டிய கலை நுட்பம். ஆனால் சூழலானது ஆணை வலிமையாகவும் பெண்ணை தெம்பிழந்தவளாகவும் மாற்றிவிடுகிறது. 


அழகுபடுத்தல், திருமண இலகுத்தன்மை என்பவற்றைக் கருத்தில் கொண்டு பெண்கள் உணவுச் சுருக்கம், தேக மெலிவு என்பவற்றை தாமாகவே மேற்கொண்டு வருகின்றமை நாம் அறிந்த விடயமே. 

பிள்ளைப்பேறு மற்றும் பலூட்டல் செயற்பாடுகளால் பெண்கள் தம் வலிமைத் தன்மையை இழந்துவிட, ஆண்கள் பருத்த தேகமும், விழுங்கும் விழிகளும் கொண்டவர்களாய் மாறிவருகின்றனர். 

வளரும் பெண் குழந்தைகள் தனியாக, சுதந்திரமாக வீதிகளில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று வயது பிஞ்சுப் பெண் குழந்தைகளைக்கூட விட்டுவைப்பதில்லை காமப் பிசாசுகள். பெண்களுக்கான பாலியல் தொல்லை, வல்லுறவு என்பவை தினம் தினம் பத்திரிகைகள், இணையத் தளங்கள் போன்றவற்றில் நாம் பார்க்கும் சாதாரண  அன்றாடச் செய்திகளில் ஒன்றாகப்போய்விட்டது.


வட்டமிடும் வல்லூறுகளிடம் இருந்து குஞ்சுகளைப் பாதுகாக்க பிரயத்தனப்படும் தாய்க்கோழியைப் போலவே மாறியுள்ளது பெற்றவர்களின் நிலை. அச்சமும் அவலமும் நிறைந்த ஒரு சூழலுக்குள் பயணப்படுகின்றனர் பெண்குழந்தைகள். 


'அவன் ஆண்பிள்ளை, அதனால் அதைச் செய்கிறான், நீ பெண் குழந்தை அதனால் இதைச்செய்' என்ற வாக்கியக் கோடுகளுக்குள் இன்றுவரை அடைபடாமல் இல்லை பெண் பிள்ளைகள்.  தாய்மாரே கூட அதற்கு விதி விலக்கல்ல. வழிவழியாய் கடத்தப்படும் இந்நிலை இன்றுவரை மாறவேயில்லை. 



சமூகத்தின் புறக்கணிப்பிற்கும்  உறவுகளின் வாய்சொல்லுக்கும் அஞ்சி, வளர்க்கும் போதே பெண் குழந்தைகளை பலவாறாக உளவியல் ரீதியாக துனபப்படுத்தியே வளர்க்கவேண்டியுள்ளது. நகர்ப்புற வாழ்க்கையில் இந்நிலை சற்றே மாறினாலும் அதன் விளைவுகள் சாதாரண வாழ்வு முறைமைக்குப் பழக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கோ ஆணிற்கோ உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. 


அதிகம் பேசும் பெண், வாயாடி என்றும் அடங்காப்பிடாரி என்றும் பட்டங்கள் சூட்டப்பட்டுவிடுகிறாள். ஒரு பெண்குழந்தை தன் சொந்த வீட்டில் கூட தன் கருத்தை சுயமாகச் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தேவைவயற்ற எதையாவது சொல்லிவிடுவாளோ, என்ற எண்ணத்திலேயே அடக்கி மிரட்டி வீட்டிற்குள் அனுப்பப்படுகின்றாள். 


ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம்' என்று சொல்வதை, வார்த்தைகளாய் வார்ப்பதும் பதைதைகளில் எழுத்தாக்கிச் சுமப்பதும் தான் இலகுவாக உள்ளதேயொழிய நடைமுறை வாழ்வில் அப்படி பேணப்படுகிறாளா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லவேண்டும். சட்டங்கள் இயற்றுவதிலும் பட்டங்கள் பெறுவதிலும் பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்றாலும் வீட்டிலும் சுற்றியிருக்கும் சமூகத்திலும் பெண்கள் மனப்பாதிப்பை அடையவே செய்கின்றனர். 


படிக்கின்ற காலங்களை ஒருவாறாகக் கடந்து வேலைத்தளங்களில் நுழைந்துவிட்டால் ஒரு பெண் அனுபவிக்கும் உளவியல் தாக்கங்கள் தான் எத்தனை, எத்தனை? நான் பார்த்த அறிந்த விடயங்களில் ஒன்றிரண்டை இங்கு பதிவிடுகிறேன். 



ஒருமுறை நான் துணிக்கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன். உயர்தரத்தில் கற்கும் என் மகளுடன். அங்கே அவள்  அண்ணனுடன் கூடப்படித்த  ஒரு பெண்பிள்ளையும் வேலைக்கு நின்றிருந்தார். ஆடைகளை எடுத்துப் போட்டு ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டிருந்தது அந்தப்பிள்ளை. வீட்டு வறுமைதான் அத்தகையதொரு வேலைக்கு அப்பெண்ணை நிர்பந்தித்திருக்கிறது என்பது பார்த்த்தும் புரிந்தது. 


கலைந்த கேசம், வியர்வையில் குளித்த ஆடை, முகத்தில் வழிந்த எண்ணெய் பிசுபிசுப்பு இவையெல்லாம் அப்பெண் பிள்ளையின் வாழ்வியல் யதார்த்தத்தை எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தது. தந்தையோ தமையனோ தாயோ தமக்கையோ தாங்காத குடும்பச் சுமையை தான் சுமந்து கொண்டிருந்தது. 

சட்டென்று உள்ளே வந்து நின்ற கடையின் முதலாளியைக் கண்டதும் அப்பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அத்தனை அச்சம், வந்த உடனேயே, துணிகளை அடுக்கவில்லை, அது செய்யவில்லை, இது செய்யவில்லை என ஏராளம் வசவுகள். பள்ளிக்கால தனது தோழமைகள் முன் அவமானப்பட்டு கூனிக்குறுகி நிற்பது எத்தனை வலி மிகுந்தது என்பது யாருக்குமே புரியாத ஒன்று அல்ல,  மனதில் வாங்கியிருந்த பலத்த அடிகளே,  அந்த குழந்தை முகத்தில் வலியையும் அச்சத்தையும் கொடுத்திருக்கிறது. 

அலுவலகங்களில் கூட இந்நிலைக்குப் பஞ்சம் கிடையாது. வேலை பார்க்கும் பெண்கள் எத்தனை பேர் எத்தனை விதமான உளவியல் சிக்கலுக்கு முகம் கொடுத்து தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர் தெரியுமா? 

இவ்வாறான சமயங்களில் வேலை என்ற பெயரில் தரப்படும் மனச்சுமைகளை நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை. மேலதிகாரிகளின் ஆசைக்கு பணியவைப்பதில் காட்டும் முனைப்பு என்பது அதிகம். வறுமையின் கரங்கள் கழுத்தை நெரிக்கிறது என்று வேலைக்குச் சென்றால் இவ்வாறான மனஉழைச்சல்களை எவ்விதமாய் தாங்கிக் கொள்வது?


திருமணமாகாத பெண்களுக்கு மட்டுமல்ல, திருமணமாகி கணவனை இழந்த, அல்லது கணவனைப் பிரிந்த பெண்களின் நிலை என்பது மிக மோசமானதாக உள்ளது. இந்நிலையில் வாழும் பெண்களை வேலியற்ற பயிர் போல கருதி, தமது இச்சைகளுக்கு பலியாக்குவதில் ஆண்களின் சூத்திரங்கள் தான் மாறுபடுகிறதேயொழிய அடிப்படை எண்ணப்போக்கு ஒருபோதும் மாறுவதில்லை. 


குடும்ப பாரத்தை சுமப்பதில் முனைப்போடு நடைபோடும் பெண்களை இத்தகைய செயற்பாடுகள், அடக்கி, விழுத்தி, ஒடுக்கி மூலையில் போட்டுவிடுகிறது. 'விபச்சாரிகள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்' என வாசித்த கருத்தின் உண்மைப் பின்புலம் இவ்வேளைகளில் தெளிவாகப் புரிந்துவிடுகிறது. அப்பாவோ, கணவனோ, அண்ணனோ, தம்பியோ தாங்காத ஒரு பெண்ணின் நிலைதான் அதுவாகும். 


ஒரு பெண் இவ்வாறான தருணங்களில் அடையும் மனஉழைச்சலே தற்கொலை போன்ற பிற காரணிகளுக்கு தூண்டுகிறது. பெண்ணைக்காப்பதில் ஆண்களின் பங்கு அளப்பரியது.....ஒவ்வொரு பெண்ணுக்கும் தாங்குதூணாய் ஒரு ஆண் இருந்தால் பெண்களின் உலகத்தில் வெற்றிக்கொடி விழாமல் பறக்கும்....


கோபிகை

தமிழருள் இணையதளம்....



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.