வல்லினம் 22 - கோபிகை!!

 


அலைபேசி மணி ஒலி விடாமல் கேட்டதில், 'யார் இப்படி விடாமல் அழைப்பு எடுப்பது?' என மனதோடு நினைத்தபடி அவசரமாய் குளியலை முடித்து வெளியே வந்தாள் கொற்றவை. மாலையில்  சமையல் சாமானகள் வாங்க கடைக்குப் போய்வந்து, சற்றே ஆறிவிட்டு பாதரோடு சேர்ந்து சகல அறைகளுக்கும் போய், படுக்கையிலிருந்த எல்லோரையும் பார்த்துவிட்டு அப்போதுதான் அறைக்கு வந்து குளிப்பதற்காகப் போயிருந்தாள். 

அலைபேசியின் விடாதசத்தம் அவளைக் கோபமடையவைத்தது. துவாயையில் முகத்தை அழுத்தித் துடைத்தபடி வந்து எடுத்தால் புதிய இலக்கமாக இருந்தது. 'எடுக்கலாமா, வேண்டாமா'  என்ற யோசனைக்குப்பின் அவசரமாய் காதுக்கு கொடுத்தபடி யோசித்தாள். 

'இந்த நேரத்தில் புதிய இலக்கத்தில் யார் எடுப்பது,' எண்ணங்கள் ஓட மறுமுனையில் பதில் இல்லை. எரிச்சலாக  இருந்தது. தூக்கிப் போட்டுவிட்டு, தலைவாரிப்பின்னியவள், இரவு உணவை எடுப்பதற்காக சமையலறைக்குப் போய்விட்டாள். 

சமையலறையில் அவள் நுழையவும், விசும்பலோடு சமையல்காரம்மா எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. மனம் திடுக்கிட, அவரருகில் விரைந்து சென்றவள், 

"அம்மா.....என்ன, ஏன் கண்கலங்கிகிடக்கு?" என்றாள். 

"ஒண்டும் இல்லை மகள்....." மட்டுமண்ணின் வாசனை பேச்சில் இருந்தது. 

"ஏதோ இருக்கு...ஏன்....என்ன..சொல்லுங்கம்மா..?" அவள் விடவில்லை.

"வேற என்ன, இந்த புள்ளைக யாரும் போனே எடுக்கமாட்டேன்குதுக...அம்மா எப்பிடி இருக்க, சாப்பிட்டியான்னு ஒரு வார்த்தை....ம்....மாசாமாசம் சம்பள நாளுக்குமட்டும் காசு போட்டியான்னு ..."சொல்லிவிட்டு பெருமூச்சோடு கண்கலங்கிய அந்த அன்னையை தோளோடு  சாய்த்துக்கொண்டவள், 

"நான் உங்களுக்கு மகள் இல்லையாம்மா," என்றாள்.

"என் ராசாத்தி நீயிருக்க எனக்கென்ன குறை, அதுககிடக்கட்டும்....ரெண்டையும் நான் பெறவே இல்லைன்னு நினைச்சிடுவன்....." பெண்மகவில்லாத அந்த தாய் தானும் கைகளிரண்டால் கொற்றவையை அணைத்துக்கொண்டார். 

சமையல்கார அம்மாவுடன் கதைத்தபடியே அங்கேயே இருந்து சாப்பிட்டுமுடித்தவள், ஆறஅமர வந்துசேர அதே இலக்கத்தில் இருந்து நான்கைந்து தவறிய அழைப்புகள்....

'யாராக இருக்கும்...' எண்ணங்கள் ஓட, 'யாரோ வேண்டும் என்று செய்கிறார்கள்' என நினைத்தவள், மனதில் சமையல்கார அம்மாவின் மகன்களின் செயலினால் ஏற்பட்ட கோபம் திரண்டிருக்க, அதே கோபத்தில் அழைப்பை எடுத்தாள். மறுமுனையில், றிங்போய் அழைப்பு ஏற்கப்பட்டது. 

அவள் எதிர்பார்த்தபடி, எதிர்முனையில் ஒரு ஆணின் குரல் ......

"ஏன்டா....என்ன விளையாடுறியா? ஒரு நம்பர் கிடைச்சா போதுமே...உடனே போனுக்கு மேல போனைப்போட்டு தொல்லை தரவேண்டியது....நீங்கள் எல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கேல்லையா? அவங்களுக்கு யாராவது போன் எடுத்து இப்படி தொல்லை செய்தா பேசாமல் இருந்திடுவீங்களோடா, அது சரி உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் எங்க மானரோசம் இருக்கப்போகுது, தாயை மதிக்காத தடோறிகள்.....அதொண்டும் இல்லை, வசதிவாய்ப்பு படுத்துறபாடு, வேறஎன்ன என்றாள். "

கோபமே வராத சீராளனுக்குள் கோபம் கொப்பளித்தது. 'என்ன இவள், இப்படி பேசுகிறாள்...'

"இஞ்ச பாருங்....." இவன்  பேச ஆரம்பிப்பதற்குள் மீண்டும் பொரியத் தொடங்கினாள் அவள். "இங்க மனுசருக்கு எவ்வளவு பிரச்சினை, உனக்கென்னடா என்றால்...வாழ்வோட போராடுற வலி தெரியாத நீயெல்லாம்....சை....வை போனை" என்றபடி அழுத்தி நிறுத்திவிட்டாள். 

அவள் கடைசியாகச் சொன்ன வரிகள் சீராளனைச் சிந்திக்கவைத்தது. எதுவும் சொல்லாமல் யோசனையோடு போனைக்கீழே வைத்தவன், அவளது பேச்சை மீண்டும் எண்ணிப் பார்த்தான். சாதாரணமாக யாரும் நோயைப்பற்றி பேசப்போவது இல்லை, ஒன்று அவள் வைத்தியராகவோ அல்லது தாதியாகவோ இருக்கவேண்டும். அதுவும் இல்லாவிட்டால் யாரோ நோயாளிகளைப் பாமரிக்கும் பெண்ணாக இருக்கவேண்டும்...எண்ணங்கள் ஓட செயலிழந்திருந்தான் அவன்...

'சே.....எப்படிப் பேசிவிட்டாள்....ஒரு மூன்றாந்தர பொறுக்கியாக உவமித்து....கடவுளே.....கர்த்தாவே....' சிந்தனை இப்படி இருக்க, அவளது குரல் மட்டும் அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி இருந்தது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.