ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்!


மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியில், “மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவில் பிறந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை, நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார்.

இத்தாலியில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இராயப்பு ஜோசப் ஆண்டகை, 1967இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்தார்.

1992ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 ஒக்டோபரில் திருநிலைப்படுத்தப்பட்டார்.

மனிதாபிமான நடவடிக்கையின்போது நாட்டில் அமைதியைக் ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகவிருந்தது. அந்தவகையில் போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்கவும், ஏழை மக்களுக்கு உதவவும் அவர் அரும்பாடுபட்டார்.

மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.