கெஜ்ரிவால் செயலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!


நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலைவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஒக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று அவரச ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தியிருந்தார்.

நாட்டில் கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தமிழகம், கேரளா, கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் போது மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ‘பாரிய அனர்த்தம்’ ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார். அனைத்து ஒக்சிஜன் ஆலைகளையும் இராணுவம் மூலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் டெல்லிக்கு வரும் ஒக்ஸிஜன் டாங்கர்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களையும் வழிநடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வழக்கமாக பிரதமர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களின் உரைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாவது இல்லை. இதை மீறி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசு, அவரது பேச்சை மட்டும் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வெளியிட்டிருந்தது. அதுவும், அந்த ஆலோசனைக் கூட்டம் முடியும் முன்பாகவே காணொலி வெளியாகி, மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தின் இடையில் இந்த விவகாரம் தனது கவனத்திற்கு வந்ததையடுத்து பிரதமர் மோடி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். ‘நமது மரபு மற்றும் பாரம்பரிய வழக்கத்தின்படி இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது கிடையாது. ஆனால், இன்று அவை மீறப்பட்டுள்ளன. ஒரு மாநில முதல்வர் இதைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறார். இது எந்த வகையிலும் முறையானது அல்ல. இந்த விவகாரத்தில் என்றும் விதிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்’’ என அவர் குறிப்பிட்டார்.

இதில், கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிடாமல் நடந்த விடயத்தை மட்டும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரதமர் குறிப்பிடுவது தன்னைத்தான் என புரிந்து கொண்ட முதல்வர் கெஜ்ரிவால், உடனடியாக பதிலளித்ததாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘நீங்கள் கூறியதை இனி நினைவில் கொள்வோம். கொரோனாவால் பலியான ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும். அவர்களது குடும்பத்தாருக்கு நம்பிக்கை கிடைக்க வேண்டும். எனது சார்பில் எதுவும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மிகவும் சிறப்பாக இருந்தன. இதன் அடிப்படையில் எங்களுக்கு அளித்த உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கெஜ்ரிவால் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் வெளியான அறிக்கையிலும் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.