நகங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!
நகங்கள் “கெரட்டின்” என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே, நகமும் அமைந்திருக்கிறது.விரல்கள் மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுபாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை. கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும். ஆள்காட்டி விரல் நகம், சுண்டுவிரல் நகத்தை விட மிக வேகமாக வளரும்.
ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். கைவிரல் நகங்கள் விழுந்து புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். ஒருவருடைய வயது, அவர் ஆணா, பெண்ணா அவரது அன்றாட உழைப்பு, சாப்பாடு விஷயங்கள், பரம்பரை மற்றும் பருவ காலங்களைப் பொறுத்தே, நகங்கள் வளரும். நீளமும் வேகமும் அமையும்.
மனிதன் இறந்த பிறகு, நகத்திற்கு கீழுள்ள தோலிலும், தசையிலும் உள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும். தோல் சுருங்கி இறுகி விடுவதால், நகம் மேலே நீளமாகப் பெரியதாகத் தெரிய ஆரம்பிக்கும். இதுதான் உண்மை. நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, என்ன நோய் இருக்கும் என்று ஒரளவு கண்டுபிடித்து விடலாம். உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா? என்பதை நகத்தைப் பார்த்தேச் சொல்லி விடலாம்.
கைவிரல் நகங்களைப் பார்த்தே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடித்து விடலாம். நகங்களின் குறுக்கே, அதிகப் பள்ளமான கோடுகள் தெரிந்தால் வயதாகிவிட்டது என்று பொருள்.
நகத்தின் இயற்கை நிறம் போய், வேறு நிறம் தென்பட்டாலோ, மிகமிக மெல்லியதாக இருந்தாலோ, பள்ளமான கோடுகள் இருந்தாலோ, வெடிப்பு இருந்தாலோ லேசாக வளைந்திருந்தாலோ, உடலில் ஏதோவொரு இடத்தில் நோய் இருக்கிறது என்பதை காட்டும் அறிகுறியாகும்.
சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி, அழுக்காக இருப்பது போல் தோன்றும். “பங்கஸ்” என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே, நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது. நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால், “சயனோஸி” என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது, ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறதென்று பொருள். இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை “க்ளப்பிங்” என்று கூறுவதுண்டு.
கருத்துகள் இல்லை