துயர் பகிர்வு - வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்களுக்காக!!

 


அதி வணக்கத்துக்குரிய ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை இன்று காலை முகநூலில் பார்த்ததும் நம்ப முடியாதிருந்தது.

எனக்கு  சிறுவயதாக இருக்கும் போது மன்னார் மாவட்டத்தின் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்கள் இருந்த காலப்பகுதி அது......

சிறு பிள்ளைகளோடு மிகவும் அன்பாக உரையாடுவார்கள் .எமது பங்கு மக்களை நீண்ட நாட்களுக்கு ஒருதடவை வந்து சந்திக்கும்போதெல்லாம் ,மிகவும் பொறுமையாக, குழந்தைகளோடு குழந்தையாக மாறி, (நானும் அப்போது சிறுவர்களாக  இருந்த காலப்பகுதி) மிகவும் கரிசனையோடும், பிரியமோடும், சிறுவர்களோடு விளையாடி மகிழ்ந்து, கதை பேசி, அவர்கள் கேட்கும் கேள்விகள் அத்தனைக்கும் மிகவும் பொறுமையாகவும் கனிவுடனும் பதில் தருவார்கள்.

அப்போது எமக்கு பெரிய அளவு விவரம் தெரியாமல் இருந்தாலும் நமது பெற்றோர்கள் பெரியவர்கள் கூடி கதைப்பார்கள். ஆயர் நிலையில் இருக்கும் ஒருவர் இவ்வளவு பணிவோடு இருப்பதை நினைத்து மிகவும்  ஆச்சரியப்பட்டிருக்கின்றார்கள்.

பின்னர் எமது ஈழ விடுதலைப் போராட்டத்திலும் ,எமது ஈழ மக்களுக்காக, அவர்களது உரிமைகளுக்காக ஓங்கி ஒலித்த பல குரல்களில் எமது வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு யோசப் அவர்களுடைய குரலும் மிக முக்கியமான து.

இன்னும் இவருடைய இறைப்பணி வாழ்வு, நலத்திட்டங்கள், பொதுப்பணி வாழ்வு, எல்லாவற்றையும் கடந்து தமிழ் மீது இவருக்கு இருந்த ஆழமான பற்று, இவற்றையெல்லாம் பார்த்து பெரு வியப்படைந்து இருக்கின்றேன்.

மேலும் தமிழ்மொழி மீது இவருக்கு இருந்த பற்று விவரிக்க இயலாத ஒன்று. ஏழை எளிய மக்களுக்காக, தாழ்நிலையில் இருந்தவர்களுக்காக, அன்று அவர்களுடைய உரிமைக்காக

  ஓங்கி ஒலித்த இயேசுபிரானின் குரல் போன்று ,அவரது போதனைகளை கற்றுக் கொடுத்த,எமது  ஆயர் அவர்களுடைய பணியும், மிகவும் ஆழமானது, பணிவு நிறைந்தது.

இன்று கிறிஸ்தவர்களுடைய  மிகவும் முக்கியமான ஒரு நாள். "பெரிய வியாழன் "அதாவது இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மூன்று விடயங்களை செய்திருக்கின்றார்கள்.

⚫ குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்

⚫ நற்கருணையை ஏற்படுத்திய நாள் 

⚫ *நான் உங்களை அன்பு செய்தது போல, நீங்களும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யுங்கள்* என்று புதிய ஒரு கட்டளையை நமக்கு கொடுத்த நாள்.

தவக்காலமாக இருந்தாலும் இன்று "பெரிய வியாழன்" எமக்கெல்லாம் ஒரு விழாதான். ஆனாலும் இந்த குருத்துவத்தை அதாவது (மதபோதகர்கள் அதாவது இறைப்பணி செய்வதற்காக கிறிஸ்துவால் இறை அழைத்தல் பெற்ற அருட்தந்தையர்கள் (Father's) திருநாள்) இந்த மகிழ்வான நாளில் எமது ஆயர் அவர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றார் என்ற செய்தி மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. நெஞ்சத்தின் ஆழத்தில் துயர் எழுந்து, தொண்டை அடைத்து ,கண்களில் நீர் வரச் செய்கிறது.😭😭😭

இருந்தும் இன்றைய நாளில் தன்னுடைய வாழ்க்கையை இறைவனுக்காகவே வாழ்ந்து, இறைவனை அன்பு செய்து இன்று நம்மை விட்டு பிரிந்து, இறைவனடி சேர்ந்த   எமது ஆயர் அவர்களுக்காகவும்  அவருடைய ஆன்மா விண்ணக மகிமை பெற வேண்டுமென்று, அவருக்காக இன்றைய திருப்பலிகளில் நாம் ஒவ்வொருவரும் நம் தந்தையாம் இறைவனிடம் ஒருங்கிணைந்து ஜெபிப்போம்.

          பகிர்வு

          அருந்தமிழ்

          01/04/2021




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.