சொக்லேற் கனவுகள் 33, 34- கோபிகை!!


கனிந்த ஆரஞ்சுப்பழமாய்

கீழ்வானம் நோக்கி 

நகர்ந்தான் ஆதவன். 

நேரம் நான்கு ஆயிற்று, 


மண வீடொன்றிற்குச்

சென்றுவிட்டு 

வீடு திரும்பினர்

ஆதியின் பெற்றோர். 


அண்ணியைக் கண்டதும்

அவசமாய் வந்த 

அனுதியின் அன்னை,

"ஆதி சாப்பிட வரேல்ல,

நிறையநேரம் போன்எடுத்தும்

பதிலே இல்லை, 


'சாப்பிட்டேன் அத்தை'

எண்டு மட்டும்

ஒரு சிறுதகவல் 

அனுப்பியிருந்தான்,


கிளினிக்கிற்கு எடுத்தால்

'டொக்ரர் வரேல்ல' 

எண்டு சொல்லிச்சினம், 

நீங்கள் கதைச்சீங்களா 

அண்ணி?"


"இல்லை அண்ணி, 

அங்கே ஒரே இரைச்சல்,  

கதைக்க முடியேல்ல,

வரேக்கயும் எங்களோட

பெரியன்ரி பிள்ளையள்

வந்தவை, 


கதைக்க முடியேல்ல,

இனித்தான் எடுக்கவேணும்,

ஏன் என்னவாம், அவனுக்கு"

சொல்லியபடி போனை எடுக்க,


வாசலில் காரின் ஒலி...

'அவனே வந்திட்டான்,' 

சொல்லிக்கொண்டே

வெளியே விரைந்தனர் 

அன்னையர் இருவரும். 


தாயையும் மாமியாரையும்

ஒன்றாகப் பார்த்தும்

வழமையான குறும்புகள்

எதையும் சொல்லாது

விறுவிறுவென நடந்தவன்,


'அத்தை, அனுவந்தாச்சா?'

என்றான் 

புருவங்களை உயர்த்தி, 

முகத்தில் என்றுமில்லாத 

கடினம்.....திரண்டிருந்தது. 


"ஆதி....என்னாச்சுப்பா....?"

அன்னையும் அத்தையும்

ஒன்றாகவே கேட்க,

தலையை ஆட்டிவிட்டு

தன்னுடைய அறைக்குள் 

நுழைந்துவிட்டான்.


அனுதிக்கு இருவருமாய் 

அழைப்பு எடுத்தால்

அலைபேசி வீட்டிலிருந்ததாய்

கொண்டுவந்தார் 

அனுதியின் அப்பா.


"உவள் அனுதிதான் 

திரும்பவும் ஏதோ 

சண்டை போட்டிட்டாள்

போல....."


உள்ளே சென்ற குரலில்

சகுந்தலா சொல்ல

"சும்மா இருங்கோ அண்ணி"

இடைமறித்தார் தேன்மொழி. 


'என்ர மருமகளை

குறை சொல்லாதேங்கோ, 

அவனுக்கு என்ன

பிரச்சினையோ,

அனுக்குட்டி வரட்டும்

பாப்பம்....'

என்றார் பெருமூச்சடன். 


வாசலிலேயே அனைவரும்

காத்திருக்க,

மணி ஐந்தைக் 

கடந்தபோதுதான்

வந்து சேர்ந்தாள் அனுதி. 


34. 

நான்கு முகங்களிலும்

யோசனையைக் கண்டவள், 

விழிகளால் வினாவினாள்

கலவரமாய்.....


எதுவும் சொல்லாது 

ஆதியின் அறையை

கைளால் காட்டிய 

அத்தைக்கு தலையாட்டி

பார்வையில் 

பதில் தந்தவள்

ஆதியிடம் விரைந்தாள். 


'ஆதி....ஆதி....'

பதில் இல்லாமல் போக

அவனது அறையின் 

பின்புற வாசல் வழியாக 

எட்டிப் பார்த்தாள். 


ஆரோக்கியம் கருதி

குளித்திருப்பான் போல...

கையில் கிடைத்த

ஆடையை அணிந்து

பார்வையை எங்கோ

வெறித்தபடி 

ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். 


'ஆதி.....என்னாச்சு?'

இவள் வந்ததைக்கூட 

உணராது இருந்தவனின்

தோள் தொட்டாள். 


கனவிலிருந்து 

விழித்தவன் போல

'அனும்மா.....வந்திட்டியா...'

என்றான் பரபரப்பாய்...


"ம்ம்...வந்திட்டேன்...."

"காலையிலயே உன்னட்ட

சொன்னன்தானே

வெளியில போறதை,"

அவள் கேட்க 

தலையை ஆட்டினான். 


அந்தப் பெரிய ஊஞ்சலில் 

அவனருகில் அமர்ந்தவள்,

தாயாய் அவன் 

தலை கோதினாள்.....


அந்த நேரத்திற்காய்

தவித்திருந்தவன் போல

அவள் முகம் பார்த்தான்.

அடைபட்டிருந்த மனச்சுமை

கரைந்து ஓடியது அவனுக்கு. 


"அனுதி...அனு.......

இண்டைக்கு..இண்டைக்கு

ஒரு விபத்து கேஸ்.....

காப்பாத்த முடியேல்ல....".


தொண்டை அடைத்தது

இவளுக்கு.....

"சரி....சரி....நீ..பாக்காததா?

விடு.....யோசிக்காத...."


அவள் சொல்ல,

"அந்த ..அந்த...ஆண்

அவளுடைய காதலன்

கதறித் துடிச்சது - என் 

கண்ணுக்குள்ளயே நிக்கிது,"


சட்டென்று 

அவளுடைய கரங்களை 

இறுகப்பற்றியவன்,

"அந்த பிள்ளையின்ர பேர்..."

இவன் இழுக்க, 


"என்ன பேர்.....?"

அனுதி கேட்டாள். 

'அனுமித்ரா.....'

சொன்னபோது அவன்

தேகம் சிலிர்த்ததை

அனுவால் உணரமுடிந்தது. 


'அனூ....அனூ....

கண்ணைத்திறந்து பார்,

என்னையும் கூட்டிப்போ' என்று 

அவன் கதறினதை


'எல்லாத்தையும் 

என்னட்ட சொல்லுவியே

இப்பிடி இடையில 

என்னைவிட்டு போறதை

ஏன் சொல்லாமல் விட்டாய்'

எனத் துடிச்சதை


'எவ்வளவு கற்பனை....

எவ்வளவு ஆசைகள்....

அத்தனையும் போச்சே...'

என்று பரிதவிச்சதை


"என்னால ...என்னால

ஏற்கவே முடியாம இருக்கு..."

சொன்னவனை

அதிர்ச்சியாய்

பார்த்தாள் அனுதி. 


"ஆதீ.....நீ..இப்பிடி....

நான்....இல்லாட்டியும்

நீ வாழணும்டா...

உடைஞ்சிடக்கூடாது...."

அவள் சொல்ல, 


"செத்திடுவன்....இல்ல

செயலில்லாம போயிடுவன்"

அவன் சொல்லச்சொல்ல

அனுதிக்கு 

பிரமாண்ட சமாதிக்குள்

அடைபட்ட உணர்வு...


ஒரு காதல் ...

இத்தனை வலியதாக 

இருக்கமுடியுமா?

இதயம் கனத்தது,

இனிப்பும் கசப்புமான

ஒரு பதற்றம்....

அவளிடம் தொற்றியது....



கனவுகள் தொடரும்

கோபிகை.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.