புதிய கட்டுப்பாடுகள்: மீண்டும் புறப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து கடந்த ஆண்டைப் போன்று சொந்த ஊருக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. ரயிலுக்காக ஏராளமானவர்கள் ரயில் நிலையங்களில் காத்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் முன் எச்சரிக்கையாக சுதாரித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்துதான் பெருவாரியான தொழிலாளர்கள் வருகிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர ஹோட்டல்கள், மால்கள், தங்கும் விடுதிகள், உள் அலங்கார வேலைகள், டெய்லரிங் என்று வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை பார்க்காத இடங்களே இல்லை என்று சொல்லும் வகையில் தமிழகம் முழுவதும் அவர்கள் வேலை பார்க்கிறார்கள்.
வடமாநிலத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை சம்பளம் 25 சதவிகிதம் வரை குறைவாக உள்ளது. அதிகம் நேரம் வேலை பார்க்கிறார்கள். தங்குவதற்கு இடம் கொடுத்தால் போதும், தடங்கல் இல்லாமல் வேலை நடக்கும் மற்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் வேலை முடிந்து விடும் என்பதால் வடமாநிலத் தொழிலாளர்களை விரும்புகிறார்கள்.
கடந்த ஆண்டு ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். நடந்தே ஊர்களுக்குப் புறப்பட்ட சம்பவங்களும் நடந்தன. அப்போது தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊரடங்கைத் தளர்த்திய பிறகும் பலர் திரும்பி வராததால் எல்லா தொழில்களும் முடங்கியது. அதன்பிறகு வடமாநிலங்களில் இருந்து தனி பஸ்கள் மூலம் அவர்களை அழைத்து வந்தார்கள். இதனால் மீண்டும் தொழில்கள் வேகமாக நடந்தன.
இப்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அதிகமாக பரவி, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதால் வடமாநிலத் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள். கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்குப் படையெடுக்கிறார்கள். சென்னை சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் நிரம்பி வழிகின்றன. ரயிலுக்காக ஏராளமானவர்கள் ரயில் நிலையங்களில் காத்திருப்பதை கடந்த இரண்டு நாட்களாகப் பார்க்க முடிகிறது.
இதேபோல் வடமாநிலங்களிலும் கடந்த ஆண்டைப்போன்று மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி கால்நடையாக நடக்க தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாரை சாரையாகப் பல நூறு கிலோமீட்டர் நடந்து சென்ற பரிதாப காட்சிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தற்போது அதே போன்ற காட்சிகள் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேசிய நெடுஞ்சாலையிலும், டெல்லியின் புறநகர் பகுதிகளிலும் பார்க்க முடிகிறது.
குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த கூலித்தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசம், பிகார், சத்தீஷ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களை நோக்கி பயணித்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பது இவர்களின் தவிப்பாக இருக்கிறது. இதனால் டெல்லி ரயில் நிலையங்களிலும் புலப்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் ரயில் சேவைகள் பாதிக்கப்படுமா எனப் பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, “தமிழக அரசிடம் இருந்து தெற்கு ரயில்வேக்கு, ரயில்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை. எனவே, தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரெயில்களும் முழுமையாக இயங்கும்” என்று தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கூறியுள்ளார்.
-ராஜ்
கருத்துகள் இல்லை