முள்ளிவாய்க்காலில் அரங்கேறுவது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடு! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!


முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் பகுதியில் கடந்த இரவு முதல் அரங்கேறிவரும் அராஜகப் போக்கானது சிங்களத்தின் அருவருப்பின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளதுடன், அச்செயற்பாட்டினை உலகத் தமிழர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்டதன் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடி நெறிப்படுத்தலில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் அராஜகமான செயற்றபாடுகள் அவர்களது இனக்குரோத மனநிலையின் வெளிப்பாட்டினை உலகிற்கு வெளிச்சம் போட்டுகாட்டுவதாக அமைந்துள்ளது.

 

தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனவழிப்பானது சிறிலங்காவின் ஆட்சி-அதிகாரத்தின் முழுமையான ஆசீர்வாதத்துடனே முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன, தற்போதும் நடந்தேறி வருகின்றன.

 

தமிழினப்படுகொலை நினைவு நாளில் திரை நீக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட நினைவுக் கல்லை நிறுவவிடாது கடந்த இரவு சிறிலங்கா இராணுவத்தினரும், பொலிசாரும் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

 

இரவோடு இரவாகவே இனவழிப்பு இராணுவத்தின் முற்றுகைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் கட்டுமானம் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

 

வருடா வருடம் நினைவேந்தல் மேற்கொள்ளும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சுடரேற்றும் பீடமும், அதனைச் சூழ அமைக்கப்பட்ட கட்டுமானமும் உடைத்தழிக்கப்பட்டுள்ளது.

 

இனப்படுகொலை செயற்பாட்டின் போது பறிகொடுத்த தமத உறவுகளை நினைத்து ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் கண்ணீர் சிந்தி நினைவேந்தும் இத்தருணத்தில் நிகழ்த்தப்படும் இவ்வாறான செயற்பாடு மென்மேலும் எமது மனங்களில் மாறா வடுவையே ஏற்படுத்தும்.

 

இதனை சாட்டாக வைத்துக் கொண்டு தமிழ்மக்களின் நினைவேந்தல் உரிமையை அச்சுறுத்தி, அடக்க முற்படும் போக்கினை அவதானிக்க முடிகின்றது.

 

இவ் அராஜகப் போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், தற்கால கொரோனா நெருக்கடி நிலையின்பாற்பட்டு சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் மீது அனுதாபம் காட்டாது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46-1 தீர்மானத்தை விரைந்து நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு நீதியை பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொள்கின்றோம்.

 

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.