இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள்


தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நசுக்கி தமிழினத்தை அழித்துவரும் சிங்கள இனவாத அரசு, தெளிவான முறையில் திட்டமிட்டு மிகவும் நுணுக்கமாக, தமிழ் மக்களின் விடுதலைச் சிந்தனையை அடக்க பிரயத்தனப்படுகின்றது. சிறீலங்கா அரசின் இந்த முயற்சிக்கு சில வல்லரசுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைநிற்கின்றன. தமிழ் மக்களுக்கான நீதியினை மறுத்தும் தாமதித்தும் வருகின்ற இவ்வல்லரசுகள் ஈழத் தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் தொடரும் இனப் படுகொலையை நிறுத்த முன்வரவில்லை என்பதே வேதனைக்குரிய விடையமாகும்.

எங்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான் தமிழீழத் தமிழர்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டிய தேவை உருவானது. காலம் காலமாக எமது இனம் வாழ்ந்த எம் தாய்நிலத்தை எதிரியவன் அபகரித்த கணத்தில் தான் எம்மை நாம் பாதுகாத்து எமக்கு ஒரு நாடு வேண்டும் -எமது மக்களுக்கு விடுதலை வேண்டும் -எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற ஒரே ஒரு இலட்சியத்திற்காக போராட வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டோம். 30 வருட அறவழிப்  போராட்டத்தை தொடர்ந்து 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழீழ மக்களின் கனவை நியமாக்கி தமிழீழ நிழலரசை நிறுவியது.
ஈழத்தமிழர்களின் பேச்சுச் சுதந்திரத்தினை பறித்தது மட்டுமன்றி உண்மையையும் மறைத்து ,பௌத்த சிங்கள அரசு. மீள்கட்டுமானம் என்ற பெயரில் புதிய கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசத்தளங்கள், தங்குமிட வசதிகள் என பல ஏற்பாடுகளைச் செய்து இலங்கைத் தீவானது ஒரு சிங்கள நாடு என சர்வதேசத்திற்கு வலியுறுத்தி வருகின்றது.
சிங்கள இனவெறி அரசு தமிழர்களை அழிப்பதே நோக்கமாக கொண்டதனால் உலக வல்லரசுகளின் பிராந்திய மற்றும் பொருளாதார நலத்தை பாவித்து அவர்களை தனது அனுசரணையாளர்களாக மாற்றிக்கொண்டுஇருக்கின்றது .
சிறிலங்கா அரசானது ஈழத்தமிழர்கள் தமது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை போன்றவற்றை வெளிப்படையாகக் கதைப்பதையோ நடாத்தப்பட்ட அநீதிகளுக்கான நீதி கேட்கப்படுவதையோ முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது. இதற்கு ஏற்ற வகையில் வல்லரசு நாடுகள் சில இனவழிப்பு என்ற வார்தைப் பிரயோகத்தைத் தவிர்க்குமாறும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணுமாறும் வலியுறுத்தி வருகின்றது. அது மட்டுமன்றி அதற்கு ஏற்ற அரசியல் நகர்வுகளையும் நகர்த்தி வருகின்றது. இலங்கையின் ஆட்சி மாற்றமும் அதன் தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பயனும் தரப்போவதில்லை. மாறாக எமது இனத்தின் விழுமியங்கள் அழிக்கப்பட்டும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நிலஅபகரிப்பினை செய்வதோடு வலுவற்ற சிறுபான்மை இனமாக எம்மை உருமாற்றம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது.

தாயகத்தில் நிலமை இவ்வாறு நகர்த்தப்பட்டுவரும் அதேவேளை, புலம்பெயர் தேசங்களில் தாயக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றவர்களை இலக்கு வைத்துஅந்த அமைப்புக்களையும்,தனிநபர்களை கறுப்புப் பட்டியல் இட்டு பயமுறுத்துவதோடு. சிறீலங்கா அரசானது தனது கைக்கூலிகளின் உதவியுடன் வன்முறையினை கையாண்டு தமிழ்மக்கள் மத்தியில் விருசல்களை உருவாக்கி இன ஒற்றுமையை குலைக்கும் செயற்பாட்டில் தீவிரம் காட்டிவருகின்றது. இது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலை வேட்கையை நிர்மூலமாக்கும் ஓர் உத்தியாகும். தாம் விரும்பும் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்வதற்காக சிங்களப் புலனாய்வாளர்கள் முயன்று வருவதன் வெளிப்பாடே!.
இதற்கு அமைவாகவே,புலம்பெயர் தேசத்தில் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளின் சட்டவிதிகளுக்கமைய நடாத்தி வருகின்ற போராட்டங்களை வீணடித்து, தமிழ்மக்கள் மேல் அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கின்ற சிங்கள அரசின் திட்டமிட்ட சதிச்செயலுக்குத் துணைபோவோரை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பாக எமது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிக்கொள்கின்றோம்.
 72 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் எம் போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு முகம் கொடுத்தும் உறுதி தளராமல் தடம் பிரலாமல் இன்றுவரை தொடர்கின்றது .
2009 ஆண்டு மே மாத நடுப்பகுதியில்முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் உலகமே கண்டிராத புலம்பெயர் தமிழர்களின் கண்டன பேரணிகளும், நீதி வேண்டிய உண்ணாநோன்பு விரதங்களும், வீதிமறிப்பு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் உலகம் பூராகவும் செய்யப்பட்டது. எம் உறவுகள் தமிழகத்திலும் ஐரோப்பாவிலும் தம்மை தாமே தீயிலிட்டு அர்ப்பணித்த நிமிடங்களை மறக்க முடியுமா ?
இன்று 12  ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு மீதான இனப்படுகொலைக்கு எவ்வித நீதியும் எவ்வித அரசியல் தீர்வும் வழங்காத போதிலும் எமது தொடர் போராட்டம் முள்ளிவாய்க்கால் காலத்திலும் விடஅதிவேகத்தோடு முன்னெடுக்கப்படவேண்டும்.
உண்மைகள் அழிவதில்லை என்பது போல தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு செய்த  தமிழினப்படுகொலை போர்குற்ற,சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்ட பாங்கு,மனிதாபிமான சட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்டமை யை , உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வெளிவந்துள்ள  தருணத்தில் நாம் எமது தொடர்போராட்டத்தை மிக வலுவோடு முன்னெடுக்கவேண்டும் .

இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுட்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதை உலகம் மெல்ல உணர்கின்றது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு தொடர்ந்து போராட வேண்டும். அதே போல் இன்றைய காலத்திலும் பல்வேறு காரணத்தால் மக்கள் பங்களிப்பு அதிகமாக இல்லை என்றாலும் எமது போராட்டம் விரிவடைந்து மிக விரைவில் மக்கள் போராட்டமாக வலுவாகும் காலம் விரைவாகும்.

நிலத்தில் எம் சிவில் சமூக உறவுகள் மற்றும் உயர்கல்வி மாணவர்களும் ,மக்களும். சிங்கள இனவெறியர்களுக்கும் அவர் தம் கூலிகளுக்கும் எவ்வித அச்சமும் அல்லாமல் நீதியை நிலை நாட்ட முயற்சிப்பது , மானத் தமிழர்கள் மடியவில்லை அடிபணியவில்லை என்று உறுதிப்படுத்துகின்றது .

இன்று எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வகையில்  எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக குற்றவியல்  நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் .
அறவழிப் போராட்டங்களூடாக நாளாந்தம் எமது வலிகளையும் வேணவாக்களையும் குருதி தோய்ந்த கண்ணீர்களாக சிந்திக்கொண்டிருந்தாலும் அவையனைத்தும்  நாளை மலரப் போகும் தமிழீழத்திற்கு உரமாக  மாறும். தமிழீழம் மீட்கும் வரை , எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம் இலக்கினை நோக்கி நகரும்

நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள். (தேசியத் தலைவரின் சிந்தனைகளில் இருந்து )
இக் கூற்றுக்கு அமைய அனைத்து நாடுகளிலும் நாடாகும் முள்ளிவாக்கால் நினைவு வணக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமிழினப் படுகொலைக்கு நீதி  கேட்போம் ,

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

ஐரோப்பிய தமிழர் ஒன்றியம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.