வல்லினம் 24 - கோபிகை!!

 


ரயில் தண்டவாளத்தில் தடதடவென நகர்ந்தது புகைவண்டி. பார்வையை வெளியே பதித்தான் கடல். 

தண்டவாளங்கள், 'விடுதலை...விடுதலை' என ஆர்ப்பரிப்பது போல இருந்தது. அவனுக்கும் அவனோடிருந்த இருபது நண்பர்களுக்கும் இன்று விடுதலை என அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குப் போவது என்பது கடலுக்கு சங்கடமாகவே இருந்தது எனினும் வேறு வழியின்றித்தான் சின்ன அண்ணன் வீட்டிற்கு போக நினைத்தது. 

அங்கு போனதும்....ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, அக்காவையும் கூட்டிக்கொண்டு வேறு வீடு பார்த்துப் போகவேண்டும் என நினைத்தான். அக்காவிடம் மனம் திறந்துபேசவேண்டும் எனவும், அந்த முகம் தெரியாத பெண்ணின் அன்பைச் சொல்லவேண்டும் எனவும் ஆசையாக இருந்தது அவனுக்கு. 

கொழும்பில் இருந்து வந்த அந்த புகைவண்டியில் பெரிதாக ஆட்கள் இருக்கவில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தனர். நண்பர்களில் சிலர் பேருந்தில், சிலர் உறவினர் நண்பர்கள் வீடுகள் என போயிருக்க, ஐந்துபேர் மட்டும்தான் யாழ்ப்பாணம் நோக்கி இந்த புகைவண்டியில் பயணப்பட்டிருந்தனர். வாழ்வில் பெரிதாக பிடிப்பற்றிருந்த அவனுக்கு இதுவரை அக்காவை நினைத்தால் மட்டும்தான் வாழவேண்டுமே என்ற எண்ணம் வரும். ஆனால் இப்போது....முகம் தெரியாத அவளுக்காய் மனம் ஆசைகளைக் கோர்த்தது...

உடுப்பு பையில் கையைவிட்டு,  கடைசியாக அவள் எழுதியிருந்த கடித்ததை எடுத்தான். அவளுடைய ஒவ்வொரு கடிதங்களையும் நூறு முறையாவது வாசித்துவிடுவான்....விழிகள் அந்த கடிதத்தில் பதிந்தது. 


அன்புள்ள கடல்....

என் பெயர் கானகி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றேன். கவிதைகள் என்றால் எனக்கு கொள்ளை பிரியம்....உங்கள் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தபோது, அந்த எழுத்துகள், எனக்குள் உறைந்துபோய்...மன ஆழத்தில் அமிழ்ந்துகொண்டன. உங்கள் கவிதைகளின் வலியா அல்லது அந்த எழுத்துகளின் ஆளுமையா, அதில் தகித்த தீயா எது என்னை அதை ஆராய வைத்தது என்றால் எனக்கு சொல்லத்தெரியவில்லை. பெற்றவர்கள் இல்லை என்ற உங்கள் எழுத்துகளைக் கண்டபோது  என் விழிவழி வழிந்த கண்ணீருக்கு காரணம் கேட்டால், இப்போதும் எனக்கு தெரியாது, ஒருவர் மீதான அளவு கடந்த அன்பு, அவர்களின் சுகதுக்கங்களில் தானும் பங்கெடுத்துக்கொள்ளும் இல்லையா, 

அதேதான் எனக்கும்...உங்கள் எழுத்துகளை நான் எந்த அளவிற்கு நேசிக்கிறேன் தெரியுமா, அவை எனக்கு வரி விடாமல் பாடமாகிவிட்டதென்றால் பாருங்கள்...சொல்லத்தெரியாத என் பிரியத்தை ஆராய எனக்கு விருப்பம் இல்லை....விரைவில் நீங்கள் வெளிவரவேண்டும், உங்கள் எழுத்துகள் பேசப்படவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. 

உங்களுக்கு தாயன்பை தர நான் காத்திருக்கிறேன்...'.என்னடா ..இப்படி சொல்கிறாளே'.... என நினைக்கிறீர்களா, அன்பு காட்டுவதில் ஆணென்ன, பெண்ணென்ன, முடிந்தவரை மற்றவர்கள் மீது அன்போடு வாழ்ந்து மடியவேண்டும்....

அப்பா..தம்பிக்கு பிறகு, என் அன்பை நான் கொடுக்கவுள்ள முதல் ஆண் நீங்கள்தான்....

உங்களைக் காணும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.....

இப்படிக்கு

அன்புடன் 

கானகி....


'கானகி....கானகி...' சொல்லிப் பார்த்தான் கடல். மனம் இனிமையாய் நிறைந்தது. அக்காவைப்போல அவனை நேசிக்க ஒரு உறவு இருக்கிறது என்பதே போதுமானதாக இருந்தது. 

போனதும் ஒரு வேலையைத் தேடவேண்டும், அதன் பிறகே அவளைச் சந்திக்கவேண்டும் என நினைத்தான். அவள் எப்படி இருப்பாளோ என்ற கற்பனை மனதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியது. இது, இவ்வளவு நாட்களாக அவன் மனதில் எழும்பாத உணர்வென்று சொல்லிவிட முடியாது. அன்பின் பூவொன்று அவனுக்குள் சில வருடங்களுக்கு முன் பூக்கத்தான் செய்தது. ஆனால், தானே அதை, துடைத்து அழித்துவிட்டவன் அவன். 

மனம் கண்டபடி கற்பனை செய்ய, தன்னை உலுக்கி எழுந்து அமர்ந்துகொண்டான். கானகி என்ற அந்தப் பெண்ணின் அன்பு, அவனை வாழத்தூண்டியிருக்கிறது, உயர உத்வேகம் தந்திருக்கிறது...நிச்சயமாய் அவள் அவன் மனப்பூங்காவில் விசேசித்த மலர்தான்....அதை இல்லையென்று சொல்லமுடியாது...இனிமேல் நடப்பது அதன்படியே நடக்கட்டும் என நினைத்தவன், அக்காவைப்பற்றி நினைக்க ஆரம்பித்தான். 

'அக்கா....எப்படியிருக்கிறாய்...நான் வந்துகொண்டிருக்கிறேன்.....சின்ன அண்ணியிடம் எப்படித்தான் உன் நாட்கள் போகிறதோ....நான் வந்ததும் இருவரும் வேறு வீட்டிற்குப் போய்விடுவோம்....கவலைப்படாதே...' மனம் தன்பாட்டில் சொல்ல, காற்றின் தொடுதலில் தூக்கம் விழிகளைத் தழுவியது அவனுக்கு. 

கம்பிகளுக்குள் காலங்களைக் கழித்தவனுக்கு இந்தக் காற்று, ரயிலின் ஓசை, மனிதர்களின் சத்தம்....இந்தக் கடிதம்,...அவளின் எழுத்துகள் எல்லாமே புதுமையாக இருந்தது. 

அப்பாவும் அம்மாவும் இருந்திருந்தால்...மனம் இவ்வளவு வெறுமையாய் உணர்ந்திருக்காதோ, வாழ்வின் மீதான பற்று எப்போதோ ஆரம்பித்திருக்கும் போல....அம்மாவின் மடிக்காய், பாசத்திற்காய், அப்பாவின்  அதட்டலுக்காய், தழுவலுக்காய் ஏங்கியது மனம். இழந்தவைகள்....இழந்தவைகள்தானே, என்றைக்கும் கிட்ட முடியாதவை.....


தொடரும்...

கோபிகை..

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.