வல்லினம் 26 - கோபிகை!!

 


மெல்ல மறைந்து கொண்டிருந்தான் சூரியன். சின்னப் பறவைகள் வரிசைகட்டிப் பறந்தன. இளம் மஞ்சள் நிறத்தில் ஒளியின் பரவல். ஆனந்த ஓலத்தில் அதிர்ந்து நின்றது அந்த வீடு. 

கண்ணீரும் மகிழ்ச்சியுமாய் அமர்ந்திருந்தாள் ஆரபி. வவுனியாவில் இருந்து திரும்பியவர்கள் சிவகாமி அம்மாவிடமும் இசையரசியிடமும் போர்பிரியனைப்பற்றி கொற்றவையைப் பற்றி, அங்குள்ள ஏனைய உறவுகள் பற்றியும் சொல்லிக்கொண்டிருக்க, சீராளனின் நண்பன் ஒருவனுடன் வந்திறங்கிய அந்த இளைஞனை முதலில் யாரும் அவ்வளவு கவனிக்கவில்லை. யாரோ சீராளனிடம் வந்திருப்பதாக எண்ணி அவரவர் எழுந்துகொள்ள,  அவனுடைய 'அக்கா.....' என்ற அழைப்பு விதிர்த்து திரும்ப வைத்தது ஆரபியை. 

தானே அருகில் வந்தவன், அக்கா..என்றான் மறுபடியும்.....டேய்.....தம்பீ.....என்ற வார்த்தைகளை மட்டும்தான் சொன்னாள் ஆரபி....

'ஓ....' வென்று கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். 'அண்ணா.....சின்னண்ணா.....தம்பி.....' அவள் கதறி அழைத்ததில் சற்று தள்ளி தன் வீட்டிற்குச் சென்ற சின்ன அண்ணனும் என்னவோ ஏதோவென ஓடிவர, 

'அண்ணா.....' குழந்தையாய் கேட்டது கடலின் குரல்.

'டேய்....தம்பீ....' அன்று போல சின்ன அண்ணன் எதற்கும் அழுத்தில்லை. விக்கி விக்கி அழுத கணவனை ஆச்சரியமாய் பார்த்த அண்ணியை சேர்த்தணைத்துக் கொண்டாள் ஆரபி. 

ஒருவாறு ஆனந்த ஓலம் ஓய்ந்து அமர்ந்திருந்தனர் அனைவரும். இசையரசி தேனீரோடு வர அனைவருமாக பருக ஆரம்பிக்க, 

"உண்மையாவே இது ரொம்ப மகிழ்ச்சியான விசயம், நீங்கள் வந்தது எப்பிடி இருக்கு தெரியுமா, அண்ணா வந்தமாதிரி...." நெகிழ்ச்சியோடு சீராளன் சொல்ல, ஆரபியின் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் பளபளத்தன. 

அந்த உறவுகளின் அன்புச் சிக்கல் கடலுக்குப் புரிந்து போனது. உறவுகள்தான் எவ்வளவு உன்னதமானது, இந்த உலகத்தில் வரும்போது எதனையும் கொண்டுவருவதில்லை, போகும்போதும் எதனையும் கொண்டு செல்வதில்லை, இடைப்பட்ட காலத்தில் மனதில் தங்கிவிடுகின்ற நினைவுகள் மட்டும்தான் வாழ்வில் பொக்கிஷமாய் இருக்கிறது. 

மனம் தன்பாட்டில் யோசித்துக்கொண்டிருந்தது. அப்போது, எழுந்து வந்த அண்ணி, 'தம்பி, வாங்கோ வீட்ட போகலாம், நல்லா முழுகிப்போட்டு, நான் சுடச்சுட சமைக்கிறன், சாப்பிடுங்கோ' என்றதும், கடலுக்கு விழிகளில் நீர் கோர்த்துக்கொண்டது. 

அண்ணி, அம்மாவிற்குச் சமன் என்பது இதுதான் போல, அக்கா பார்க்க வந்தபோது அண்ணியைப்பற்றி பெரிதாக சொல்லாதபோது அவனாகவே ஒரு வரையறை செய்திருந்தான். அண்ணியின் இந்த வார்த்தைகள் அவனது எண்ணத்தை உடைத்துப் போட்டது. 

'பிறகேன் அங்க சமைக்கப்போறியள், விடிய காச்சின கறியும் கிடக்கு, பிரயாணம் போய்வந்த களைப்போட....நான் புட்டு அவிக்கிறன், எல்லாரும் குளிச்சிட்டு வாங்கோ' இசையரசி சொல்ல தாயாரும் ஆமோதிப்பாய், 

'அதுதான் பிள்ளை, நானும் அதைத்தான் சொல்ல நினைச்சன், பிள்ளை சமைக்கட்டும், நீங்கள் போய் குளியுங்கோ, ஆரபியம்மா தம்பிக்கு தலைக்கு எண்ணெய் வைச்சுவிடம்மா, நல்லா முழுகட்டும்....கஷ்ரங்கள் இதோட துலையட்டும்.....' என்றார். 

அவரவர் தன்பாட்டில் எழுந்துகொள்ள, கடலின் அருகில் வந்த ஆரபி விழிநீரோடு அவனைக் கைபற்றி அழைத்துச் சென்றாள். 

தங்கள் வீட்டில் நின்றபடி சித்தப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் பகலவன், நிமிர்ந்து பார்த்த கடல், ஏய்....பகல்...அக்கா பகல் அப்பிடியே அண்ணா மாதிரி இருக்கிறான், என்னட்ட சொல்லவே இல்லை, என்றபடி அவசரமாய் நடந்து அவனருகில் சென்று இறுக்கமாய் கட்டி அணைத்துக் கொண்டான். 

'சித்தப்பா....' .சிறு விம்மலுடன் கடலின் மார்பில் சாய்ந்துகொண்டான் பகலவன். 


தொடரும்.....



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.