அகதியின் நாட்குறிப்பு 4 - குடத்தனை உதயன்!!

 


முறுக்கு மீசை, மேவியிழுத்த தலைமுடி, எந்த நேரமும் முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிரிப்பு, சினிமாப் படங்களில் துணைப் பாத்திரத்தில் வருகின்ற மாமா, அண்ணா, சித்தப்பாப் பாசத்தை ஒன்று சேர அள்ளித் தெளித்து, அவர்களின் ஆளுமையைக் கூட்டி அள்ளும் ஒருவர் போன்ற தோற்றம், செல்லப்பா முகத்தில் நிலவின் ஒளி போன்று அப்பியிருந்தது.

       மாமாவுக்கருகில் படுத்துறங்கும் வரம் அன்று ஆதிக்குக் கிடைத்தது.  “மாமா” கதைத்துக் கதைத்தே உறங்கி விட்டார். அவனுக்கு உறக்கம் தூரத்துப் பகை போன்றிருந்தது. எல்லோரும் மாறி, மாறி, குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

          பல மிருகங்களை ஒரு கூட்டில் அடைத்து வைத்தால்.. அதன் உறுமல், ஊளையிடும் சத்தம் எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.

           ஆதி கண்களைத் திறந்து அறையைப் பார்த்தான்.  இருளப்பிக் கிடந்தது. காதுகளைப் பொத்திக் கண்களை இறுகமூடித் தூங்க முறியற்சித்தான். அவனால் முடியவில்லை. ஐயோவென வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. எல்லாரையும் எழுப்பி வைத்து பச்சை மட்டையடி குடுக்க வேண்டும் என்றளவுக்கு  அவனுக்கு ஆத்திரம் வந்தது. 

           ஆதி ஒருவாறு உறங்கி விட்டான். அவனுக்கு நீண்டநேரம் உறங்கிய உணர்வேயில்லை. மாமாவினதும், செல்லப்பாவினதும் பேச்சுச் சத்தம் காதில் விழுந்த வண்ணமிருந்தன. அவனுக்குக் கண்களைத் திறப்பதற்கு ஒரு துளிகூட விருப்பமில்லை.

        அவர்களின் பேச்சை வைத்து ஓரளவு நேரத்தைக் கணிக்கக் கூடியதாக இருந்தது. மளிகைச் சாமான்கள் வேண்டவேனும் என்ற பேச்சு அடிபட்டது. மொத்தத்தில் கடைக்கு போகவேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. ஆதிக்கு மகா சந்தோசம்..! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமென்று.  அவனது சந்தோசம் சில வினாடிகள் கூட நிலைக்கவில்லை. 

 “ஆதி “.... “ஆதி” எழும்பு கடைக்குப் போவம்...

என்று மாமாவின் குரல் ஒலித்தது. 

         அவன் கண்களைத் திறக்க முயன்றான். அவனால் முடியவில்லை. இரு கண்களும் சொல்ல முடியாத எரிவைக் கொடுத்தன. ஓரளவு உடலின் கணச் சூட்டை அவன் உடல் அவனுக்கு உணர்த்தியது. எண்ணெய் தேய்த்து முழுக வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

உடை மாற்றிய பின்பு மாமா கொண்டு வந்த பாணையும், சாப்பிட்டவாறு செல்லப்பா அருகிலமர்ந்தான்.

“என்னடா மோன நல்லாத் தூங்கினியா.?”

செல்லப்பா கேட்டார்.

அவன் மாமாவையும், செல்லப்பாவையும், மாறி மாறிப் பார்த்த பின்பு இப்படிச் சொன்னான்....

அந்தக் குண்டுச் சத்தத்திற்கையும், செல் சத்தத்திற்கையும் நித்திரை கொண்டனாங்கள்,  ஆனால் உங்களின் குறட்டைச் சத்தத்திற்கு.....! அப்ப ...ப்...பா...! என்றவாறு தலையைத் தலையையாட்டினான். 

அவர்கள் இருவரும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள்.

         வெளியில் இறங்கியபோது குளிர் முகத்தில் வெட்டி இறங்கியது. சிறிது தூர நடையின் பின்னர் பற்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதின. என்ன குளிர் ..! மரணக் குளிர்... என மனதிற்குள் நினைத்தவாறு.., 

“கடை இன்னும் கன தூரமோ..? 

எனக் கேட்டான்.”

“என்ன குளிருதோ.?” 

மாமா கேட்டார். 

இன்னும் குளிர் துவங்கவேயில்லை. இனிவரும் காலந்தான் குளிர் அதிகமாகும். இதைக் குளிரென்றால்.., ? அவரே பதிலும் சொன்னார். “

 அவன் நினைத்துப் பார்க்கிறான். இதை விடக் குளிரென்றால் எப்படி..? நினைக்கப் பயமாக இருந்தது.

       அதெல்லாம் போகப் போகப் பழகி விடும்.  நீ ஏன் அவனைப் பயமுறுத்துகிறாய்..?

என்றார் செல்லப்பா.

         அன்று மதியத்திற்குப் பின்பு  ஒருவர் , இருவரென மாறி,  மாறி, அவர்களின் அறைக்கு ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வருகையை  எண்ணும் போது  ஆதிக்கு வைத்தியசாலைக்கு நோயாளரைப் பார்க்க  வருவோரை  ஞாபகமூட்டியது.

ஆதிக்கு அங்கு உள்ளவர்களின் நட்பு, அவர்கள் பழகும் விதம், பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாகத் தோன்றியது. ஒரே இடத்தில் எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பது. வெளியில் போய் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். ஆனால் இன்று வெளியால போவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.

நடேசனின் நினைவு வந்தது.. பாவம் என்ன செய்கிறாரோ..? என நினைத்துக் கொண்டான் . 

          மாமாவிடம் கதைப்பதற்கும் , கேட்பதற்கும் இவனிடம் நிறைய விடயமிருந்தது. அவருக்கும் அப்படித்தானிருக்குமென நினைத்துக் கொண்டான். அந்தக் கணப்பொழுதில், மாமாவுடன் தனிமையில் இருக்க வேண்டுமென அவனது மனது விரும்பியது.

         அவர்களின் பேச்சுக்கள்.. வேலை செய்யுமிடத்தில் நடந்த சம்பவங்கள், திரைப்பட விமர்சனங்கள் போன்றதாக இருந்தது. தாயகம், போராட்டம் பற்றி ஒரு சிலர் தான் கரிசனையுடன் கேட்டறிந்தார்கள். 

         ஆனால் வேறு ஆட்கள் வரும் போது, அந்தக் கதை கேட்பதையும்  நிறுத்திக் கொள்கிறார்கள். ஏன்.. இவர்கள் இப்படி இருக்கிறார்கள்..? என்ற கேள்வி ஆதியின் மனதை மிகவும் பாரமாக அழுத்தியது.

மாமா சொன்னார்.., 

“ஆதி” வெளிக்கிடு  Rathaus க்கு (நகரமண்டபம்) போவம்.. 

அப்படியே Stad க்கு (நகரம்) போட்டு வருவம்..

 இவர் என்ன சொல்கிறார் என்ற கேள்வியுடன் அவரைப் பார்த்தான்.

      அதுவரை அறையிலிருந்த அமுக்கம் நீங்கி அங்கு வந்தவர்களின் வெட்டிப் பேச்சுகள் மறைந்து, சூரிய ஒளியுடன் சேர்ந்து வந்த காற்றை இருகரங்கள் நீட்டி அள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது ஆதிக்கு.

      வெளியில் வந்த ஆதிக்கு உண்மையில் சூரிய ஒளியும்,   பனிப் புகார்களும் ஒன்றுடன் ஒன்று கூடிக் குலாவும் போது  கண்களுக்கும், மனதிற்கும், சொல்ல முடியாத வீரியத்தையும், ஒருவித புத்துணர்வையும்  கொடுத்தது. “இயற்கை எவ்வளவு அற்புதம் நிறைந்தது..!” என்பதை அவன் உணர்ந்த தருணமது.

அவனின் எண்ண ஒட்டங்களை மாமா உடைத்தார். 

“ஆதி”....

இங்க வெளிநாட்டில் ஆட்கள் பலவிதம்.., குறிப்பாக யாருடனும்  அரசியல் கதைக்காதே. “யாராவது அக்கறையுடன் கேட்டால்.? அவர்களுக்குச் சொல்லு.”

இப்போது ஆதிக்கு எல்லாம் ஓடி விளங்கியது. அவனின் எதிர்பார்ப்பில் புலம் பெயர்ந்தோரில் வைத்திருந்த நம்பிக்கையில் ஒரு கீறல் விழுந்தது.

மாமா நாட்டு நடப்புகளைக் கேட்டார். அவன் நிலமைகளைக் கூறும் போது அவரும் தலையைத் தலையையாட்டி, இடையிடையே ச்...ச்...ச்... என அவரின் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

மாமாவுடன் கதைப்பதற்கு அவனுக்கு ஆசை ஆசையாக இருந்தது. சில கேள்விகள் குட்டி என்ற பெயருக்கு ஏற்றாற் போலிருந்தது. அப்படியான கேள்விகள் ஒருவரின் ஆற்றாமையில், அல்லது ஓருவரின் எதிர் பார்ப்புகளில் அடி விழுகிற போது ஏற்படுபவை என அவன் புரிந்து கொண்டான்.

“இறுதியாக அம்மம்மா..,  அன்ரியாக்கள் எப்படி இருக்கினம்..?

எனக் கேட்டு நிறுத்தினார்.”

        அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால்.. ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான். அவரின் மனதைப் புண் படுத்துவதில்லையென்று.

        அம்மம்மா..  வீட்டில் யாரும் இல்லாத நேரம் அவனிடம் வந்து கவலை தேய்ந்த முகத்துடன் வலது கையால் தனது உதடுகளை இழுத்து... இழுத்து...  விட்டவாறு மாமாவின் கடிதத்தை அவனிடம் கொடுத்து “சத்தமாப் படி மோன” எனத் திரும்பத் ... திரும்பக் கேட்பா.

       கடிதத்தை அவன் படிக்கும் போது மனிசி விடுகின்ற பெருமூச்சு, அவாவின் முக மாறுதல், ஒரு பெற்ற தாயின் தவிப்பு.. ஒரு  தேசமே பற்றி எரிகின்ற அனலை வெளித் தள்ளியது.

“எண” நீ.. ஒன்றுக்கும் யோசியாதை.. 

காசு இருந்தால் அவர் அனுப்புவார் தானே.!

அங்குள்ள நிலமையை விளங்காமல் சும்மா யாரும் இங்கிருந்து கத்தி என்ன பிரியோசனம்.

           அம்மம்மா..  நீண்ட மூச்சை வெளித் தள்ளி “நாய்க்குட்டி” எங்க இருந்தாலும் நல்லா இருக்க வேண்டும்..  என்று அவா சொல்லும் போது அந்தக் குரலில் இருந்த அன்பின் வாஞ்சை கரை புரண்டு ஓடுவதை அவன் உணர்ந்தான்.

அந்த நினைவில் இருந்து விடுபட்ட ஆதி. தொண்டையைச் செருமி சொற்களைப் பதனிட்டு இப்படிக் கூறினான்.

“அவா என்னத்தைச் சொல்கிறது. நன்றாகச் சாப்பிட்டு உடம்பைக் கவனிக்கட்டாம். அடிக்கடி கடிதம் போடும் போது , உங்கட போட்டோவையும் சேர்த்து அனுப்பட்டாம்.”

அன்ரி,  மாமாக்கள் என்னவாம்..? 

அவர்கள் என்னத்தைச் சொல்ல.. அது தானே கடிதத்தில் எழுதினம்.

தொடர்ந்து அந்தக் கதையைத் தொடர விருப்பமின்றி முற்றுப்புள்ளி வைத்தான் ஆதீ.


தொடரும்........

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.