முகநூலில் ஒரு முகவரி - கதை!!

 


இந்தியாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் மெல்ல மெல்ல கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரைதட்டியது. அம்மா, அப்பா,  அண்ணா,  அண்ணி என அனைத்து குடும்ப உறவினர்களுடனும்  விமானநிலையத்தைவிட்டு வெளியே வந்தான் ஈழநிலவன். சுற்றியிருந்த அனைத்துமே அவனுக்குப் புதிதாகத் தெரிந்தது. 

அண்ணன் மகன் ஆதிரையனோடு விளையாடியபடியே  வந்தானேயொழிய  வேறு எதைப்பற்றியும் அவனது சிந்தனை ஓடவில்லை. கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் சிறிதுநேர இளைப்பாறலின் பின் உடனடியாகவே யாழ்ப்பாணம் நோக்கிப்புறப்பட்டனர். 

பழகிய இடமாக இருந்தபோதும்  ஏதோ தெரியாத ஊருக்குப் போவது போலவே அவனது செயற்பாடுகள் இருந்தன. சொந்த வீட்டிற்கு வந்து இரண்டு மணிநேரம் கடந்துவிட்டது.  நாளை மறுநாள் அவனுக்குத் திருமணம். மனைவியாகப்போகும் தேன்மொழியை புகைப்படத்தில் மட்டுமே பார்த்தான். அதைத்தாண்டி அவளுடன் தொடர்புகொள்ளவேண்டும் என அவன் எண்ணியதே இல்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஏற்பட்ட அந்த விபத்திற்குப்பின் அவனது செயற்பாடுகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. முன்னய நினைவுகளும் அவனைவிட்டுப் போய்விட்டன.  மனஆழத்தில் புதைந்திருந்த  நினைவின் சாரல்களும் மறந்துவிட்டிருந்தது  அவனுக்கு.   

"கலகலவென இருந்த நீ இப்பிடி இருக்கிறியே"  என அம்மா அடிக்கடி ஆதங்கப்படுவதுண்டு.  ஆனால் அவனால் மட்டும் ஏனோ பத்து வருடங்களுக்கு முந்திய ஈழநிலவனாய் மாறவே முடியவில்லை. தேன்மொழி அண்ணியின் தங்கை என்பதால் அவனது நிலைமை கூறப்பட்டுவிட்டது. தன் தங்கை தன்னுடனே வாழ வரப்போவதில் அண்ணிக்கு கொள்ளை மகிழ்ச்சி. 

வீட்டின் பின்புறம் இருந்த அறையில் நுழைந்த ஈழநிலவன் அழகாக அடுக்கிவைக்கப்ட்டிருந்த தூசு படிந்திருந்த புத்தகங்கள், கொப்பிகளைப் புரட்டிப் பார்த்தான்.  கொப்பிகளின் பின்மட்டைகளில்  எழுதப்பட்டிருந்த கவிதைகள் ஏதோ ஒரு சேதி சொன்னது  அவனுக்கு. வேறொரு புத்தகத்திற்குள் இருந்த புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து ஆவலுடன் பார்த்தான்.  அப்போதுதான் கையில் வந்தது  அந்த நாட்குறிப்பேடு. அது தன்னை நிலைகுலையச் செய்யப்போவதை அறியாமல் கையில் எடுத்துப் புரட்டினான்.  பக்கங்களை விரித்துப் பார்த்தவன் அதிர்ந்து போனான். 

கானகி என்ற  பெண்ணைப்பற்றி வரிக்குவரி அவன் எழுதிய கவிதைகள் அதில். இன்றுதான்,  என் காதலை அவளிடம் சொல்லப்போகிறேன் என்பது வரை அதில் கவிதையாகவே வடித்திருந்தான்.'இந்த அளவிற்கு ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதா ' என எண்ணியவன் சிந்தனைகளை விரைவுபடுத்தினான். நல்ல வேளையாக ஒரு புகைப்படத்தின் பின்பக்கத்தில் நண்பர்களின் பெயர்களை எழுதியிருந்தான். லப்ரொப்பை எடுத்தவன் முகநூலில் அந்தப் பெயர்களைத் தேடி நட்பாகி  தன் விபரம் கூறி தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்கொண்டான்.  தன் நிலையைக் கூறி தன்னைப்பற்றிய விடயங்களை நண்பர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டவன்,  கானகி மீது தான் கொண்டிருந்த ஆழமான அன்பினையும்  அறிந்துகொண்டான். 

உடனே அவனுக்கு ஆறுதல் கூறிய நண்பர்கள்  பல முகநூல் நண்பர்களின் மூலம் கானகி பற்றிய விடயங்களை அறிந்துகொண்டனர். பல்கலைக்கழகத்தில் படித்தபோது கானகி ஒரு ஏழை மாணவி. அனால் இன்று அவள் பிரபல நரம்பியல் வைத்திய நிபுணர். அவள் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்திக்கொண்டிருந்தாள். விபரம் அறிந்ததும் உடனே ஈழநிலவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் நண்பர்கள் அனைவரும். தனக்கிருந்த அன்பு அவளுக்கும் இருந்ததா என்பது தெரியாததால் அந்த நாட் குறிப்பையும் கையில் எடுத்துக் கொண்டான்.  

மாலை ஆறு மணியிருக்கும். சிறார்களுடன் அமர்ந்திருந்து தானும் ஒரு சிறுமியாக விளையாடிக் கொண்டிருந்தவள்,  திடீரென பத்து ஆண்டுகளுக்கு முன்னய நண்பர்களைக் கண்டதும் அவசரமாய் எழுந்து கொண்டாள். யாருடைய நினைவுகளைத் தவிர்க்க எண்ணி நண்பர்களிடம் இருந்தே விலகினாளோ அவனே நேரில்  வந்துநின்றதும் ஆடிப்போனாள். நண்பர்கள் விடயத்தைப் போட்டு உடைக்க கண்ணீரோடு நிமிர்ந்தவள் அவசரமாய் உள்ளே ஓட, அந்தப் பார்வையில் என்ன கண்டானோ தொடர்ந்து விரைந்தான் ஈழநிலவன். உள்ளே சென்ற கானகி அவசரமாய் தனது  அலுமாரியில் தேடி எடுத்து அவனிடம் நீட்டியது பத்து வருடங்களுக்கு முந்தய தனது நாட்குறிப்பேடு. பக்கங்களை அவசரமாய் புரட்டியவன்  கண்ணீரோடு நிமிர்ந்தான். விழிநீரால் நிறைந்த நயனங்கள் பேசிக்கொண்டன  காவியமாய் வாழும்  தம் காதலை. கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.