திருக்குறள் - ஒரு பார்வை!!

 


திருக்குறள் மத, இன, மொழி, பிரதேச அடையாளங்களைக் கடந்த படைப்பு. அதனாலேதான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...” என்று  திமிர்ந்த ஞானச் செருக்கோடு  பாடினார் மகாகவி பாரதியார். அதனாலேயே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது. 

உலகப் பொதுமறை என்பதன் பொருள், இவ்வுலகிலே இருக்கிற அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவுமான அறங்களை, நீதிகளை, நெறிமுறைகளை மறை போல உரைப்பதால் திருக்குறளை  உலகப் பொதுமறை என்று கொண்டாடுகிறோம். இது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தும் சிந்தனையுமாகும். 

ஆனால், வேறொரு விதத்திலும் திருக்குறளை உலகப் பொதுமறை என்று நாம் உணர இயலும். அஃதாவது, திருக்குறள் ஏதேனும் ஒரு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பின்னர், மொழி பெயர்க்கப்பட்ட பிரதியை அம்மொழி அறிந்த ஒருவரிடம் வாசிக்கத் தருவதாகக் கொள்வோம்.  அவ்வாறு தரும்போது, இம்மொழி பெயர்ப்பு இந்தியாவிலே இருக்கிற தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் என்னும் நூலின் மொழி பெயர்ப்பு எனும் அறிமுகம் இல்லாமல் வாசிக்கத் தந்தால், வாசிக்கிறவர் அந்தப் படைப்பு தன் தாய் மொழியில் தனது வாசிப்புக்காக எழுதப்பட்ட புத்தகம் என்றுதான் திருக்குறளை உணர்வார்.  உலகின் எந்த மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும், அப்பிரதியை வாசிக்கிறவர் மூலநூலையே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு உலகத் தன்மைப் பெற்றது திருக்குறள். அதனாலும் அது உலகப் பொதுமறை என்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தமிழர், தமிழ்நாடு போன்ற சொற்களோ, பிரதேச, இன, மொழி  அடையாளங்களோ இன்றி எழுதப்பட்ட பெருமைக்குரியது திருக்குறள். 

தமிழில் “திரு” என்னும் அடைமொழி, நான் அறிந்த  வரையில், சமயம் சார்ந்த இறை வழிபாட்டுக்குரிய   நூல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. திருப்பாவை, திருவெம்பாவை, திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. ஆனால், சமயச் சார்பற்ற, சமயம் கடந்த பெருமைக்குரிய  திருக்குறள் மட்டுமே தமிழில் “திரு” எனும் அடைமொழியோடு சேர்த்து அழைக்கப்படும் ஒரே நூல். திரு என்றால் உயர்ந்தது, குறள் என்றால் அளவில் குறுகியது என்று பொருள்.

“மழித்தலும்  நீட்டலும் வேண்டா...” என்ற குறளின் வழியேயும் “கொல்லான் புலாலை மறுத்தானை...” என்று துவங்கும் குறளின் வழியேயும் இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் உறுதியான நிலைபாட்டை எடுக்கிறார் வள்ளுவர். அனைத்திற்கும் மேலாக  “தெய்வத்தான் ஆகாதெனினும்...” என்று துவங்கும் குறளின் வழியே, தெய்வம் சாதிக்க முடியாததை, செய்திட முடியாததை தன் உழைப்பினால் மனிதன் சாதிக்க முடியும் என்று எழுதினார் திருவள்ளுவர். இக் குறள் எல்லாம் இறைவன் செயல், அனைத்தையும் அவனே ஆக்கி, காத்து அழிக்கிறான், அவன் கொடுப்பதை யாரும்  தடுக்க முடியாது, தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது என்று காலங்காலமாக நிலவி வரும் அனைத்து நம்பிக்கைகளையும் மூட நம்பிக்கையாக்கிவிடுகிறது. உழைப்பின் உயர்வை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரைத்த பெருமை திருக்குறளுக்கே உண்டு. கடவுளால் இயலாததை உழைப்பு ஈட்டித் தரும் என்று பாடிய திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தும் பாடியிருக்கிறார் என்பதும் மனங்கொள்ளத் தக்கது. 

உழைப்பின் சிறப்பை அறிந்து உணர்ந்ததாலேதான் வள்ளுவர் வேளாண்மையைச் சிறப்பித்துப் பாடுகிறார். வேளாண்மை இழி தொழிலாகவும், வேளாண் மக்கள் இழி சனங்களாகவும்  கருதப்பட்ட காலத்தில், வேளாண்மையை உயர்த்திப் பேசிய ஒரே நூல் திருக்குறள். ஏதேனும் ஒரு தொழில் செய்துதான் இங்கு எல்லோரும் வாழ்கிறோம் என்றபோதும் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...” என்று உழவின் சிறப்பை உயர்த்திப் பேசினார் வள்ளுவர். எத்தொழில் செய்வோர்க்கும், தமது உழைப்பால் உணவினை விளைவித்துக் கொடுத்து உதவுவதால் அவ்வுழவரே இந்த உலகத்தைத் தாங்கும் அச்சாணி  என்று உணர்த்தினார் வள்ளுவர். 

அற நூல்களிலேயே காதலையும் காமத்தையும் வியந்துப் போற்றிப் பாடிய பெருமைக்குரியது திருக்குறள் மட்டுமே. அதனாலேதான், இல்லறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வள்ளுவர், வியக்கத்தக்க விதத்தில் துறவின் பெருமையையும் காட்டிச் சென்றார். ஊழ்வினையைப் பாடிய வள்ளுவரால் தான் ஆள்வினைவுடமையையும் பாட முடிந்தது. 

கல்வி கற்பது ஒரு அறமுடைய ஒழுக்கச் செயல் என்றபோதிலும், திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை அறத்துப்பாலில் பாடினாரில்லை. அதை பொருட்பாலின் துவக்கத்தில் வைத்தார். நேரிய வழியில் பொருளீட்டுவதற்கும், அதைப் பேணிப் பாதுகாப்பதற்கும் கல்வியே அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்து அதனைப் பொருட்பாலில் கொண்டு சேர்த்தார். அதிகார வரிசையில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்கிற வரிசையை உருவாக்கி கல்வியின் சிறப்பை அனைவரும் உணரச் செய்தார். 

தமது படைப்பில், தாம் கூறியவை அனைத்தையும், அனைவரும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும்  என்கிற வறட்டுப் பிடிவாதமும் வள்ளுவருக்கு இல்லை. வள்ளுவர் என்பவர் யார்? அவர் எத்தகையவர்? எங்கு இருந்தார்? என்பதற்கான ஆதாரங்களோ, சான்றுகளோ நம்மிடம் இல்லை. எனவே, இச்சூழலில் படைப்பு மட்டுமே முதன்மை பெறுகிறது. தனது படைப்பை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற இறுக்கமும் வள்ளுவருக்கு இல்லை. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்...” எனும் குறளை எழுதியதன் வழியே அவரது கருத்துக்களையே விசாரணை செய்யவும், மாறுபடவுமான வாய்ப்பினை  நமக்கு வள்ளுவர் தருகிறார். இது திருக்குறளின் ஆகச்சிறந்த ஜனநாயகப் பண்பைக் காட்டுகிறது. அதனாலேதான், திருக்குறளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட பல உரைகள் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 

“உடுக்கை  யிழந்தவன் கைபோல ஆங்கே

யிடுக்கண் களைவதா  நட்பு”

பலர் கூடிய இடத்தில் ஒருவனுக்கு  உடுத்திய ஆடை சடக்கென நெகிழ்ந்துவிட்டால் அப்பொழுது அவன் கை விரைவில் அவ்வாடையைப் பற்றி உடுத்தி அவனது மானத்தைக் காத்தல் போல, தம்மில் ஒருவனுக்குத் தீங்கு நேரும்போது உடனே உதவி செய்து அத்தீங்கை ஒழிப்பதே நட்புக்கு இலக்கணமாகும்  என்றே இக்குறளுக்கு உரை எழுதப்பட்டிருக்கிறது. துன்பத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு மனதினும் விரைவாக கை முற்படுதலால்  துன்பம் நீங்கும் என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த உரை அனைவருக்கும் ஏற்புடையதே ஆகும். ஆனால், மறுவாசிப்பில் இக் குறள் வேறு ஒரு பொருள் கொள்ளுதற்கான சாத்தியப்பாட்டை தன்னுள் சுமந்து நிற்கிறது. உடுக்கை இழந்தவன் என்னும் சொல் திட்டவட்டமான இறந்தகாலச் சொல் (past tense) . எனில், துன்பத்தில் இருப்பவன் தனது ஆடையை முற்றிலும் இழந்து நிற்கிறான் என்பதே சரியான பொருள். இந்த இடத்தில், அவையின் கண் அல்லது பலர் கூடிய இடத்தில் ஒருவனது ஆடை நெகிழ்கிற போது அவிழ்கிற போது என்னும் பொருள் தரக்கூடிய நிகழ்காலத் தொடர் (present continuous) சொற்களை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.  எனவே, அவிழ்ந்துக்கொண்டிருக்கும் ஆடையை விரைந்து பற்றும் கரங்களை நட்புக்கு இலக்கணமாக வள்ளுவர் சொல்லவில்லை. மாறாக, முற்றிலுமாக ஆடையை இழந்த ஒருவனது கைகள், மானத்தை மறைக்கும் பணியைத்தான் செய்யும். எனில் தனக்கு இயல்பாக விதிக்கப்பட்ட பணிகளை விட்டுவிட்டு மானங்காக்கும் பணிக்கு முன் வருகிறது கைகள். அதுபோல நண்பனுக்குத் தீங்கு வருகிறபோது தனக்கு விதிக்கப்பட்ட பணிகளை விட்டுவிட்டு நண்பனுக்கு உதவும் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவன் காட்டும் வழி. எனவே, உடுக்கை இழந்தவன் கை என்பது, விரைவை மட்டும் குறிக்கிற சொல் அல்ல. மாறாக பண்பையும் விரைவையும் ஒருசேர குறிக்கும் சொல்.

இங்ஙனம் வாசிக்கும்போதெல்லாம், ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய மாறுபட்ட சிந்தனைகளைத் தரும் ஆற்றலோடு கூடிய படைப்பாகத் திருக்குறள் திகழ்கிறது. அதனாலேதான்  “கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று சிறப்பித்தாள் அவ்வை. வெறுமனே குறளைக் கற்கிற ஒருவரால் குறளின் ஆழத்தை அறிய முடியாது. கல்வியின் துணை கொண்டு திருக்குறளை அறிவது ஒரு வழிமுறை என்றால், அறிவின் துணை கொண்டு திருக்குறளை அணுகுவது மற்றும்  ஓர் அணுகுமுறை. பொருட்பாலில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் அதிகார வரிசையில் குறளை யாத்தபோதே கல்வி வேறு  அறிவு வேறு என்று நமக்கு உணர்த்திய பெருமை திருக்குறளுக்கு உண்டு.

எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் என்று உணரத்தக்கதும், எந்த மொழியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கண்டறியப்பட முடியாத சிறப்பும் திருக்குறளுக்கு உண்டு என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அந்த சிறப்பு திருக்குறளுக்கு உண்டு என்றபோதிலும் திருக்குறளின் சிறப்பு திருவள்ளுவர் அல்ல ; தமிழ் மொழியே என்று சிறப்பாக உணர முடிகிறது. தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இத்தனை பொலிவோடும் பொருளோடும் திருக்குறளை எழுத முடியாது என்றே  நான் கருதுகிறேன். 

“இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின்

இன்மையே யின்னா தது”

என்பதான இதுபோன்ற ஒரு குறளை (பல நூறு குறள்களை மேற்கோள் காட்ட இயலும்.) தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் உயிரோடும் ஓசையோடும் பொருளோடும் எழுதிவிட இயலாது.

ஒவ்வொரு முறை வாசிக்கிற போதும், அவ்வை சொன்னதுபோல் ஒவ்வொரு குறளுக்குள்ளும் ஏழு கடல்கள் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கிறது.  எழுதப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலும், எமது மொழியிலும் பிற மொழிகளிலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது திருக்குறள். வரும் நூறு நூறு ஆண்டுகளிலும் அது வாசிக்கப்படும். புதிது புதிதாய் உரைகளும் பொருளும் தந்துகொண்டே இருக்கும். என் பள்ளிப் பருவத்தில் நான் வாசித்த திருக்குறள் அல்ல நான் இப்போது வாசிக்கும் திருக்குறள்.  தான் அப்படியே மாறாமல் இருந்துகொண்டு, வாசிக்கிறவனுக்குள் நிகழும் மாற்றங்களை உணர்த்திக்கொண்டே இருக்கிறது பிரதி. இந்தச் சிறப்பு உலகின் மகத்தான படைப்புகளுக்கு எப்போதும் உண்டு. அதனால் அவை என்றைக்கும் எப்போதும் எவராலும் வாசித்து முடிக்க முடியாத புத்தகங்களாக தனிச்சிறப்பைக் கொள்கின்றன. திருக்குறள், புனித விவிலியம், திருக்குரான், பகவத் கீதை, பாரதி பாடல்கள், தாகூரின் கீதாஞ்சலி, காந்தியின் சுயசரிதை, லியோ தால்ஸ்தாயின் படைப்புகள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் மற்றும் இவை போன்ற மகத்தான புத்தகங்கள் எப்போதும் வாசித்து முடிக்க முடியாத புத்தகங்களே!   

- பாரதி கிருஷ்ணகுமார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.