யாழ் மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் விடுத்த அறிவிப்பு!

 


கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் நாடுதழுவிய முடக்கலை அறிவித்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெளிவுபடுத்தியுள்ளார்.


அதன்படி ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம் பெற அனுமதி அளிக்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


யாழ்மாவட்டத்தில் கொரோனா நிலைமை சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்றது. இதேவேளையில் நாடுபூராகவும் நாளை 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் 17ஆம் திகதி அதிகாலை வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு மத்திய நிலையத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் வீடுகளில் இருந்து ஒருவர் வெளியில் செல்லலாம் என மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதேபோல அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாத்திரம் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படும். அந்தவகையில் உணவுப்பொருட்கள், எரிபொருள், காஸ் மற்றும் விவசாய மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் அடங்கலான வாகனங்கள் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே யாரும் பயணிக்க வேண்டியிருந்தால் வழமைபோன்று ஊரடங்கு நேர நடைமுறை போன்று அவர்கள் அருகில் உள்ள போலிஸ் நிலையம் சென்று தங்களுடைய அனுமதியினைப் பெற்று பயணிக்க முடியும். அதேவேளை அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனையோர் பயணிக்க அனுமதிக்கப்படாது.


பொதுமக்கள் சுகாதார நடைமுறையினையும் அரசாங்கத்தினுடைய சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி தற்போது நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு முன்வரவேண்டும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வெளிமாகாணங்களுக்கான பயணங்களில் ஈடுபடுவோர் தமது வாகன இலக்கம், சாரதி நடத்துனர் பெயர் விவரங்கள் அடங்கலான விபரங்களை பிரதேச செயலர் ஊடாக உரிய முறையில் மின்னஞ்சல் ஊடாக எமக்கு விண்ணப்பித்தால் அதனை நாங்கள் மின்னஞ்சல் ஊடாக மாகாணங்களுக்கு இடையில் உள்ள காவலரண்களுக்கு அந்த மின்னஞ்சல்களை அனுப்பி தமது பயணத்தினை இலகுவாக்க கூடியதாக இருக்கும்.


அத்துடன் விவசாய மீன்பிடி உற்பத்தி பொருட் போக்குவரத்தில் ஈடுபடுவோர் குறித்த திணைக்களங்களின் அனுமதியினைப் பெற்று உரியவாறு விண்ணப்பிக்குமிடத்து அதற்குரிய அனுமதிகளும் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும்.


எனவே இந்த ஊரடங்கு நிலைமையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தமக்குரிய அனுமதியினைப் பெற்றுக் கொள்வது தமது பயணங்களில் போது இலகுபடுத்தும் என்பதோடு குறித்த பயணங்களின் போதும் சுகாதார நடைமுறை ஊரடங்கு நடை முறையையும் தவறாது பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.